நடேசண்ணா இசையால் நிறைக்கப்படும் - இசையால் நிறையும் அகம் கொண்டவர். குரலிசைக் கலைஞனின் துவக்கம் அவன் செவிகள் திறக்கும் கணத்திலிருந்து துவங்குகிறது. வாய்ப்பாட்டுக்காரன் முதலில் இசைக்கு செவி கொடுக்கிறான். இசை செவியிலும் மனதிலும் நிறைய நிறைய ஒரு மாயக்கணத்தில் பாடத் தொடங்குகிறான். நடேசண்ணா இசை கேட்டு கேட்டு பாடத் தொடங்கியவர் . ஓர் ஆசிரியரிடம் அமர்ந்து இசை பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததில்லை. அவர் பாடும் போது ராகங்கள் ‘’குளித்து விட்டு, தலைசீவி, மலர்சூடி, துல்லிய ஆடை உடுத்துப் பளிச்சென்று பணிவாக ‘’ வந்து நிற்கும் என கதைசொல்லி சொல்வதாக எழுதுகிறார் தி.ஜா. ‘’துல்லிய ஆடை’’ என்பது தி.ஜாவின் தனிமொழி.
நடேசண்ணா கதையில் மரங்கள் வெட்டப்பட்டு ஊர் மொட்டையாக நிற்பதன் அபத்தம் குறித்து கதையோட்டத்துடன் ஒரு வரி சொல்லி விட்டு போகிறார்.
அற்பஜீவிகள் தங்களுக்கே உரிய மனக்கோணல்களுடன் நடேசண்ணாவை பாட விடாமல் தடுக்கின்றனர்.
எனது அகத்தில் ஒலிக்கும் இசையை ஆண்டவன் எப்போதும் கேட்பான் என அமைதியாக இருந்து விடுகிறார் நடேசண்ணா.
தி.ஜாவின் தனித்துவம் மிகுந்த கதைகளில் ஒன்று ‘’நடேசண்ணா’’.