இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் விருப்பமின்றி இந்தியாவை யுத்தத்துக்குள் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்யம். இந்தியர்களின் மீது திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தை மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்த்தது. பிரிட்டிஷ் அரசின் இம்முடிவை எதிர்த்து நாடெங்கும் சத்யாகிரகம் நடந்தது. காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் முக்கியத் தொண்டர்களும் கைதானார்கள். மயிலாடுதுறையில் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி கைதாகி மூன்று மாதம் திருச்சி சிறையில் இருக்கிறார். அந்த அனுபவங்களை ‘’மூன்று மாதம் கடுங்காவல்’’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.
ஆயிரக்கணக்கான பொது மக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் சூழ்ந்திருக்கும் உணர்ச்சிகரமான சூழலில் போலீஸாரால் மயிலாடுதுறை மாயூரநாதர் தெற்கு வீதியில் கைதாகிறார் கல்கி. அத்தனை பொதுமக்கள் திரண்டிருக்கும் நிலையில் தான் கைதாகும் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற பதைபதைப்பு கல்கிக்கு இருக்கிறது. மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர் எனினும் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் மல்க வழியனுப்புகின்றனர்.
திருச்சி சிறை சென்று சேர்கிறார் கல்கி.
சிறையில் ராஜாஜி, என்.ஜி. ரங்கா, நாச்சிமுத்துக் கவுண்டர், அவினாசிலிங்கம் செட்டியார், குமாரசாமி ராஜா, டாக்டர் சுப்பராயன் என எண்ணற்ற காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். ராஜாஜி தலைமையில் அவர்கள் அனைவரும் சிறை வாழ்க்கையை எந்த அளவு பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியுமோ அந்த அளவு பயனுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொருவரைப் பற்றியும் சில நுண் சித்திரங்களை வாசகர்கள் மனதில் உருவாக்குகிறார் கல்கி.
சிறையில் ராஜாஜிதான் தலைவர். நிரந்தரமான ஆசிரியர். காலை நேரத்தில் வால்மீகி ராமாயணம் வகுப்பு ராஜாஜியால் எடுக்கப்படுகிறது. மாலை ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்த வகுப்பு. இந்த இரண்டு வகுப்புகளுக்கும் இடையே கம்பராமாயண வகுப்பு என கல்விப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் ராஜாஜி.
சிறையில் சமஸ்கிருத வகுப்பு நடக்கிறது. ஹிந்தி வகுப்பு நடக்கிறது. காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் மிக்க ஆர்வத்துடன் சமஸ்கிருதமும் ஹிந்தியும் கற்றுக் கொள்வது குறித்து எழுதியிருக்கிறார் கல்கி.
அவினாசிலிங்கம் செட்டியாரைக் குறித்து எழுதும் போது அவர் உடன் எப்போதும் அவரது ‘’குரு மகராஜ்’’ ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஓவியம் உடனிருப்பதையும் அதிகாலை எழுந்து நீராடி தனது குருநாதருக்கான பூசனைகளை செய்து விட்டே தனது சிறை அறையிலிருந்து வெளியே வரக்கூடியவர் அவினாசிலிங்கம் செட்டியார் எனக் கூறுகிறார் கல்கி. சிறை வளாகத்தில் மலர்ச்செடிகள் இருப்பது அரிதினும் அரிது எனினும் எங்கோ மறைவில் ஏதேனும் ஒரு மலர்ச்செடி பூத்திருந்தாலும் அதன் மலரை சிரத்தையுடன் கொண்டு வந்து தனது குருநாதருக்கு அர்ப்பணிப்பார் என அவினாசிலிங்கம் செட்டியார் குறித்து எழுதுகிறார் கல்கி.
டாக்டர் சுப்பராயன் திருச்சி சிறையில் இருக்கும் போது அவரது மனைவி வேலூர் சிறையில் இருக்கிறார். அங்கே அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது மகன் மோகன் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு சதி வழக்கைத் தொடுத்திருக்கிறது. அவரது மகள் லண்டனில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அங்கே வான்வழித் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கணவனாக ஒரு தந்தையாக இந்த கடுமையான சூழ்நிலையை அவர் எவ்விதம் எதிர்கொண்டிருப்பார் என்பதை உணர முடிகிறது.
ஹாஸ்யமாகவும் சில விஷயங்களை அவதானிக்கிறார் கல்கி. காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் சிலர் பெரும் செல்வந்தவர்கள். சாமானியமான நித்யப்படி வேலைகள் எதையும் செய்தே பழக்கமில்லாதவர்கள். அவ்வாறான சிலர் தினமும் பந்தி பரிமாறுகிறார்கள். பந்தி பரிமாற கண்கள், கைகள், கால்கள் , உடல் என அனைத்துக்கும் ஒரு ஒருங்கிணைப்பு தேவை. எவ்வளவு விரைவில் திருப்தியாகப் பரிமாறி முன்நகர முடியுமோ அவ்வளவு விரைவில் முன்நகர வேண்டும். செல்வந்தர்களான காங்கிரஸ் தலைவர்கள் பரிமாறும் பணியில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்; ஆனால் அந்த வேலைக்குத் தேவையான விஷயங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் உள்ளனர் என்பதை ஹாஸ்யமாகப் பதிவு செய்கிறார் கல்கி.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி அவர்களுக்கு சிறையின் சௌகர்யக் குறைவுகளால் இரவில் தூக்கம் அவ்வளவு லகுவாக தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு நாள் காலையும் முகமனாக எவரும் ‘’இரவு நன்றாக உறங்கினீர்களா?’’ என விசாரித்தால் இரவு 2.30க்கு தான் தூக்கம் வந்தது என சோகமாகக் கூறுகிறார். இந்த இடத்தில் கல்கி,
தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
என்ற திருக்குறளை எடுத்துக் காட்டி ஆட்சியாளராக இருக்க முழுத் தகுதி கொண்டவர் என சத்தியமூர்த்தி குறித்து ஹாஸ்ய ரசத்துடன் குறிப்பிடுகிறார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் பழகும் வாய்ப்பு கல்கிக்கு இந்த சிறை அனுபவம் மூலம் கிடைக்கிறது. தேவர் குறித்த செய்திகளையும் எழுதியுள்ளார். சிறையில் வரும் செய்தித்தாள்களில் உள்ள ‘’யுத்த மேப்’’களை கத்தரித்து வைத்துக் கொண்டு பெரிய அளவில் நேசப் படைகள் எங்குள்ளன எங்கே முன்னேறக் கூடும் ஜெர்மன் ஜப்பான் படைகள் எங்குள்ளன அவர்களின் யுக்திகள் என்னவாக இருக்கும் என விளக்கம் அளிப்பார் தேவர் என பதிவு செய்கிறார் கல்கி.
பண்புகள் நிறைந்த பண்பாடு கொண்ட மனிதர்களை உருவாக்குவது அரசியலில் அவசியமான அடிப்படையான தன்மை என காந்தியம் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தது என்பதன் தடயம் இந்த நூல்.