ஒரு மிகச் சிறிய கிராமம்.
மொத்தமாகவே பன்னிரண்டு குடும்பங்கள் தான் இருக்கின்றன. அவற்றின் மக்கள்தொகை அதிகபட்சமாக முப்பது இருக்கக் கூடும்.
அந்த கிராமத்தில் இருக்கும் பணி ஓய்வு பெற்ற வயசாளி ஒருவரைச் சந்திக்க வரும் ஒருவர் அவரிடம் ‘’என்ன சார் பலமா யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க? ‘’ என உரையாடலைத் தொடங்குகிறார். வயசாளி அவரிடம் ‘’ஜன்மாவின் அர்த்தம் என்ன ?’’ என்று யோசிப்பதாகக் கிண்டலாகக் கூறுகிறார். தி.ஜா இந்த இடத்திலிருந்து இந்த சிறுகதையைத் தொடங்குகிறார்.
அந்த கிராமத்தில் இருந்த ஒரு மனிதர். திருமணமான 40வது நாளில் அவரது மனைவி அவருடன் வாழப் பிடிக்காமல் பிறந்தகம் சென்று விடுகிறார். அந்த மனிதர் எல்லா வீட்டு வேலைகளையும் செய்யப் பழகிக் கொண்டு மனைவி இல்லாமல் வாழ்ந்து வருகிறார். மிகச் சிறிய கிராமத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த சம்பவங்களாலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க தன் சக்தியைத் தாண்டி ஏற்பாடுகள் மேற்கொள்கிறார். அப்போது அவரது வீட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது ஒன்றுக்கும் உதவாத ஓட்டைக் காலணாக்கள் கிடைக்கின்றன. அவற்றை எவ்வாறு பிரித்து எடுத்துக் கொள்வது என அண்ணனும் தம்பியும் விவாதிக்கும் போது தம்பி அண்ணனிடம் உனக்கு கிடைத்த ஓட்டைக் காலணாக்களில் பாதிக்குப் பாதி தர முடியாது. ஓட்டைக் காலணாக்களில் 75 சதவீதம் தனக்கும் 25 சதவீதம் அண்ணனுக்கும் என சொல்கிறார் தம்பி.
தம்பியின் நடவடிக்கையைக் கண்ட அண்ணன் ஓரிரு நாளில் ஒரு மலையாளப் பெண்ணை திருமணம் செய்து ஊருக்கு அழைத்து வந்து விடுகிறார். இப்போது அந்த ஓட்டைக் காலணாக்கள் தனக்கு சரி பாதி கிடைக்கும் அல்லவா என்கிறார் அண்ணன்.
அந்த மலையாளப் பெண்ணின் ஜன்மத்துக்கு என்ன அர்த்தம் என வயசாளி யோசிப்பதாக கதையை நிறைவு செய்கிறார் தி.ஜா.