வாழ்க்கை அளப்பரியது. சிறிதும் பெரிதுமான சம்பவங்களால் ஆனது. முக்கியத்துவம் கொண்டவையும் சாமானியமானவையுமான நிகழ்வுகளால் ஆனது. மனித உணர்வுகள் நவரசங்களில் அடங்கக்கூடியவை என வகுக்கிறது இந்திய நுண்கலை மரபு. ஹாஸ்யம் அவற்றில் ஒன்று. மெல்லிய புன்னகை பல அர்த்தங்கள் பொதிந்தது. தி. ஜா வின் ‘’குளிர்’’ அவ்வாறான மென்புன்னகையை வாசகனிடம் தவழ விடக்கூடியது.
வாசிப்பில் ஆர்வம் கொண்ட திருச்சிராப்பள்ளிவாசி கதைசொல்லி. ஒண்டிக்குடுத்தனம் வாழும் ஒரு பெரிய வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறான். தினமும் துணி துவைக்கும் சத்தம், உரல் இடிக்கும் சப்தம், வீதியில் வாகனங்கள் எழுப்பும் ஒலிகள் என அன்றாடத்தின் ஓசைகளால் நிறைந்திருக்கிறது அவனது புறச்சூழல். அவன் சற்று நுண்ணுணர்வு கொண்டவன் என்பதால் நிசப்தத்தை நாடுகிறான். அவனுக்கு சமீபத்தில் சாத்தியம் இல்லை என்றிருக்கும் நிசப்தத்தை.
இரவு பக்கத்து வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. ரொம்ப நேரமாக ஒரு கிழவி கதவைத் தட்டுகிறாள். ஒண்டிக்குடித்தனத்தில் அத்தனை பேர் இருந்தும் எல்லாருக்கும் சத்தம் கேட்டும் யாரும் கதவைத் திறக்காமல் இருக்கின்றனர். அந்த கிழவி தன் அண்டைக் குடித்தனம் இருப்பவர்களை வார்த்தைகளால் சபிக்கிறாள். அப்போது அந்த வீட்டில் இருக்கும் ஒரு கிழவி சென்று கதவைத் திறந்து வெளியே நின்ற கிழவி உள்ளே வந்ததும் அவளது தலைமுடியைப் பிடித்து தாக்குகிறாள். ஒண்டிக்குடுத்தனத்தில் இருக்கும் யாரும் ஏன் என்று கேட்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள். கதைசொல்லி அங்கே சென்று அந்த கிழவிக்காகப் பரிந்து பேசி விட்டு வருகிறான். அவள் தனியாக வாழும் கிழவி. அவளுக்கென்று உறவு என யாருமில்லை. மகன் தஞ்சாவூரில் வசிக்கிறான்.
ஓரிரு நாட்களுக்குப் பின் அதே விதமாக இரவு அந்த கிழவி குரலெழுப்புகிறாள். சில நாட்கள் முன்னால் நடந்த கதை மீண்டும் நடக்க வேண்டாம் என்று அவளை தனது வீட்டுக்கு வந்து தங்கி இருக்குமாறு கேட்டுக் கொள்கிறான். அப்போது அவள் கேட்கும் ஒரு கேள்வி கதைசொல்லியைத் திகைக்க வைக்கிறது. கதையின் வாசகனைப் புன்னகைக்க வைக்கிறது.