லௌகிகம் நம்மைச் சூழ்ந்து கிடக்கிறது. உறவுகள். உறவுகளின் பொறுப்புகள் , கடமைகள், சிக்கல்கள் என நீர்த்தாவரங்கள் குளத்தின் ஆழத்தில் பின்னிப் பிணைந்து கிடப்பதைப் போல குடும்ப வாழ்வில் பரவி நிறைந்திருக்கின்றன. குடும்பம் ஒரே இடத்தில் குறைந்தபட்சம் நான்கு பேராவது இருக்கும் இடம். ஒரு விதத்தில் வெளிச்சமூகத்தின் ஒரு சிறு வடிவமும் கூட அது. ஒவ்வொருவருக்கும் அதில் பிரத்யேகமான தனிப்பட்ட இடம் தேவைப்படுகிறது. அந்த இடம் அவர்களுக்கு சாவகாசமாக இருக்க வேண்டியிருக்கிறது. தமிழ்க் குடும்பங்களில் அது முழு சாத்தியமா என்பது யோசித்து யோசித்துப் பார்க்க வேண்டிய ஒரு பெரிய கேள்வி. தமிழ்ச்சமூகத்தில் ஆண்களின் மனம் அகம், புறம் என பிரிந்து கிடக்கிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் தங்கள் இயல்பில் இருக்கும் விரும்பத்தகாத குணங்களை மட்டுப்படுத்திக் கொண்டு தங்கள் சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். வீடு என்று வரும் போது வீட்டு மனிதர்கள் என்று வரும் போது அந்த அளவுகோல்களை பெருமளவு தளர்த்தி விடுகின்றனர் அல்லது இல்லாமல் செய்து விடுகின்றனர். வெளியுலகில் தனக்கு இருக்கும் ஏற்பைக் காரணமாகக் காட்டி வீட்டில் தான் விரும்பும் விதத்தில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டியவன் என்பது ஆண்களின் எதிர்பார்ப்பு. இது ஒரு சிக்கலான வட்டம்.
காட்டுவாசம் கதையில் ஒரு வானப்பிரஸ்தர் ஒருவர் வருகிறார். சொந்த ஊரில் ஒரு குறுவனம் போன்ற ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார். வானப்பிரஸ்தத்துக்கு வரும் முன்பு, ஒரு நாளைக்கு நான்கு வேளை காஃபி குடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அது மூன்று வேளையாகி விட்டது என்றும் ஒரு வேளை காஃபியைத் துறந்து விட்டேன் என்றும் கூறுகிறார். முன்னர் சிலா ரூபங்களை வைத்து பூசனைகள் செய்ததாகவும் வானப்பிரஸ்தம் ஏற்ற பின் புலித்தோலில் அமர்ந்து தியானம் மட்டும் செய்வதாகவும் கூறுகிறார். நல்ல தரமான பன்னீர் புகையிலை அவ்வப்போது போட்டுக் கொள்கிறார்.
தவிர்க்க இயலாத உறவுப்பூசல்களை பிணக்குகளை இழுத்துப் பிடித்து சமாளிக்கும் இருவரும் வானப்பிரஸ்தம் என தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை பின்பற்றுவதாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் இடையேயான உரையாடல்கள் மூலம் லௌகிக மனிதர்களின் மீளமுடியாத லௌகிகத்தைப் புன்னகையுடன் புன்னகைக்கும் விதத்தில் சொல்லிச் செல்கிறார் தி. ஜா.