Monday, 17 October 2022

யாதும் ஊரே

சென்னைவாசி ஒருவருக்கு கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. சென்னையில் மாத சம்பளம் வாங்கி நடுத்தர வாழ்க்கை வாழும் அவர் மனைவியுடன் மூன்று மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கு வருகிறார். பட்சிகளின் ஒலி நிறைந்திருக்கும் கிராமம். அந்த பட்சிகளின் பெயர்களையும் அவை எழுப்பும் ஒலிகளையும் விவரிக்கையில் நாம் ஜானகிராமன் பெருங்கலைஞன் என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறோம். செக்கு மாடு போல மாறாமல் வாழும் வாழ்க்கையை தற்காலிகமாக மாற்றியமைத்துக் கொண்டதில் சென்னைவாசிக்கு அகநிறைவு. 

ஊருக்கு ஒரு சந்நியாசி வருகிறார். காவி உடுத்தியவர். பிச்சை எடுத்து வாழ்பவர். சென்னைவாசி அவரை வீட்டுக்கு வரவேற்று உணவளித்து உபசரிக்கிறார். பக்கத்து கிராமத்தில் இராமாயணம் கதை சொல்கிறார்கள் என சென்னைவாசியின் கிராமத்தில் சிலர் புறப்படுகிறார்கள். அவர்களுடன் சென்னைவாசியும் துறவியும் புறப்படுகிறார்கள். 

இராமாயண உபன்யாசகர் துறவிக்குத் தெரிந்தவர். அவர் துறவியின் பூர்வாசிரம் கதையைச் சொல்கிறார். துறவியின் பூர்வாசிரமப் பெயர் சந்தானம். குழந்தைச் செல்வம் இல்லாதவர். ஐந்து வேலி நிலத்துக்கு சொந்தக்காரர். உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் ஆபத்சந்யாசம் வாங்கி விடுகிறார். எதிர்பாராதவிதமாக உடல்நிலை சீராகி விடுகிறது. வேறு வழியின்றி சந்யாச வாழ்க்கை மேற்கொள்வதாய் முடிவு செய்கிறார். இந்த கதையை உபன்யாச்கர் கூறும் போது துறவி கண்ணீர் சிந்துகிறார். 

அனைவரும் ஊருக்குத் திரும்புகின்றனர். சென்னைவாசி தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்கிறார். மனைவி சிரித்தவாறு ‘’துறவி அழுதாரா’’ எனக் கேட்டு அவரது தாயாதிகளோடு சமாதானம் செய்து வையுங்கள் ஊருக்கு வெளியில் இருந்து தனக்கு சொந்தமாய் இருந்த பண்ணையின் மேற்பார்வையைப் பார்க்கட்டும் என சிரித்தவாறே கூறுகிறாள்.