வங்க எழுத்தாளர் மைத்ரேயிதேவியின் ‘’நா ஹன்யதே’’ வங்க நாவலை வங்க மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சு. கிருஷ்ணமூர்த்தியின் இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் ‘’ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள்’’. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் மாஸ்கோவின் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஜார் மன்னனின் ஆட்சியை அகற்றி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு லெனின் தலைமையில் ஆளத் துவங்கிய போது உலகெங்கும் இருந்து சிந்தனையாளர்களை தங்கள் நாட்டை தங்கள் நாட்டின் தலைநகரை தங்கள் கல்வி நிலையங்களைக் காண வருமாறு அழைத்தனர். அந்த காலகட்டத்தில் உலகெங்கும் இருந்த பல சிந்தனையாளர்கள் ரஷ்யாவிற்குச் சென்று ரஷ்யா குறித்த தங்கள் அவதானங்களை எழுதியிருக்கின்றனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் ரஷ்ய கம்யூனிச அரசாங்கம் டிராட்ஸ்கி போன்ற சிந்தனையாளர்களையும் ஆசிப் மண்டல் ஸ்டம் போன்ற கவிஞர்களையும் கொன்றொழித்தது என்பது வரலாற்றின் நகைமுரண் அல்லது கம்யூனிஸ்டுகளின் ஆட்சிப் பாணி.
போல்ஷ்விக்குகள் ஆட்சியைக் கைப்பற்றி 13 ஆண்டுகளுக்குப் பின்னால் தாகூர் ரஷ்யா செல்கிறார். பொருளாதார நிபுணர் பி.சி. மகலனோபிஸ், அவரது மனைவி நிர்மல் குமாரி, ஓவியர் நந்தலால் போஸ், மேலும் சில கவிஞர்களுக்கு ரஷ்யா குறித்து ரஷ்யாவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பும் வழியில் அமெரிக்கா ஐரோப்பாவிலிருந்தும் கடிதம் எழுதுகிறார்.
தாகூர் இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியமான இலக்கிய ஆளுமை. இலக்கியம் மட்டுமல்லாது கல்வி, க்லை, நுண்கலை , அரசியல் என வெவ்வேறு துறைகளில் செயலாற்றிய செயல்பாட்டாளர்.
நூலில் பல இடங்களில் சோவியத் யூனியனை மதிப்பிட 13 ஆண்டு காலம் போதுமா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டு விடுகிறது. அதனைப் பல கடிதங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். சோவியத் யூனியன் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டிருப்பது ஆபத்தானது அபாயகரமானது என்ற எண்ணம் கொண்டவராக இருக்கிறார் தாகூர். இந்தியாவில் உள்ள குலங்கள் குடிகளினும் அதிக எண்ணிக்கையில் குலங்களையும் குடிகளையும் கொண்ட சமூகமாக ரஷ்யா இருப்பதை தாகூர் முன்வைக்கிறார். பொதுவாக இந்தியச் சமூகம் குறித்து பேசும் போது அதன் வெவ்வேறு குழுக்கள் குறித்துப் பேசுவதும் மேலைச் சமூகங்கள் மற்றும் ரஷ்யா குறித்துப் பேசும் போது அதனை ஒற்றைப்பட்டையான சமூகம் என முன்வைப்பதும் கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பு. நுண்ணுணர்வு மிக்க தாகூரின் கண்களுக்கு ரஷ்யச் சமூகத்தின் வேற்றுமைகளும் கண்ணுக்குத் தெரிகின்றன.
கூர்மதி கொண்டவரான தாகூர் பிரச்சாரத் தளத்தில் இந்தியா குறித்த அவதூறுகள் பரப்பப்படும் போது அவற்றின் பொய்த்தன்மையை தர்க்கபூர்வமாக முறியடிக்கிறார் . உதாரணத்துக்கு, இந்தியாவின் சிக்கல்களுக்கு பெரிய காரணம் அதன் மக்கள்தொகைப் பெருக்கம் என்கிறது பிரிட்டன். ஆனால் தாகூர் 30 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 30 சதவீதம் கூடியுள்ளது ; ஆனால் பிரிட்டன் மக்கள்தொகை அதே காலகட்டத்தில் 60 சதவீதம் கூடியுள்ளது என்ற புள்ளிவிபரத்தை முன்வைக்கிறார்.
செல்வத்தை ஒரு மனிதத்தன்மையுள்ள ஒரு மனிதன் தான் கையாள வேண்டும்; எந்திரம் போன்ற இறுக்கமான ஓர் அமைப்பு செல்வத்தைக் கையாள்வது சமூகத்துக்கு அழிவைக் கொண்டு வரும் என்ற தாகூரின் தொலைநோக்கை அவரது கடிதங்களில் காண முடிகிறது. சோவியத் யூனியன் உடைவுடன் இணைந்து யோசிக்கத்தக்க வரி இது.
இந்தியாவில் புண்ணியத்தலங்களை கடந்த நூற்றாண்டுகளில் மக்கள் நடந்து சென்று தரிசித்தது போல ஒவ்வொரு இந்திய மாணவருக்கும் தம் கல்வியின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் நாடெங்கும் பயணிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து அப்போதே அவர்கள் கல்வி நிறைவு பெறும் என்ற தன் அபிப்ராயத்தை முன்வைக்கிறார் தாகூர்.
பல மாதங்கள் ரஷ்யாவில் தங்கியிருந்த தாகூரின் கடிதங்களில் அவரது மனத்தின் முழுச் சமநிலையை உணர முடிகிறது. நூலில் அவரது கடிதத்தில் ஒரு வரி இவ்வாறு உள்ளது :
‘’நடுக்கடலில் மிதந்து கொண்டிருக்கிறேன். அக்கரையில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியாது. உடல் தளர்ந்திருக்கிறது. உள்ளத்தில் சோர்வு. காலியான பிச்சையோட்டைப் போல் பெரிய சுமை வேறெதுவுமில்லை. நான் அதைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு எப்போது விடுதலை பெறப் போகிறேன்?’’
***
நூல் : ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள், பக்கம் : 126 விலை : ரூ. 100 , பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 98.