தி. ஜானகிராமனின் ஆகச் சிறப்பான கதைகளில் ஒன்று ‘’முள்முடி’’.
அனுகூலசாமி ஓர் ஆசிரியர். நல்தந்தை. இனிய கணவர். ஒரு சிறுகதையில் அவரது இந்த மூன்று குணங்களையும் சிறு சிறு நுண் காட்சிகள் மூலம் சித்தரித்துக் காட்டுவதின் உணர்ச்சிகரம் ஜானகிராமனுக்கே உரிய பிரத்யேக பாணி.
தமிழ்ச்சூழலில் ஒரு மனைவி கணவனை முற்றாக அறிவாள். கணவனின் அக இயல்பும் புற இயல்பும் மனைவிக்கு முழுதாகத் தெரியும். அறுபது வயதானதன் அனுபவம் நிரம்பப் பெற்றிருக்கும் ஒருவரை அவரது மனைவி பெருமிதத்துடன் காதலுடன் நோக்கி நேசம் கொள்வது என்பது அபூர்வமான தருணம். இந்த சிறுகதையில் அவ்வாறான ஒரு தருணத்தை தி. ஜா உருவாக்கிக் காட்டுகிறார்.
அனுகூலசாமியின் மகள் லூசியா அவள் சிறுமியாய் இருக்கும் போது அவளது ஆசிரியர் ஸ்கேலால் ஒருமுறை அடித்து விடுகிறார். அவளது உடலில் இருந்த கோடைக்கட்டி உடைந்து லூசியா துடித்துப் போய் விடுகிறாள். குழந்தைகளான பள்ளி மாணவர்களை அடிப்பதில்லை என்பதை சுபாவமாகக் கொண்டவர் அனுகூலசாமி. அவரது இந்த ‘’சுபாவத்தை சங்கல்பமாக ‘’ இந்த சம்பவத்துக்குப் பின் அவர் மாற்றிக் கொண்டதாக தி. ஜா குறிப்பிடுகிறார்.
ஓய்வு பெறும் நாளன்று மனித குமாரனின் நினைவு அனுகூலசாமிக்கு வருகிறது. சக மானுடருக்காகவும் இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவும் சிலுவையில் ஏறிய முள்முடி சூடிய சூடிய ஏசுவின் படத்தையும் ஒரு ஆட்டுக்குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கும் ஏசுவின் படத்தையும் அனுகூலசாமி பார்க்கிறார். மன்னித்தலே மானுட விழுமியம் என வாழ்நாள் முழுவதும் சொன்னவனின் படங்கள்.
சிறப்பான விதத்தில் பிரிவுபசார விழா நடக்கிறது.
விழா முடிந்து கொஞ்ச நேரம் கழித்து சின்னையா என்ற மாணவனையும் அவனது அன்னையையும் கிளாஸ் லீடர் அழைத்து வருகிறான். சின்னையா ஒரு வருடம் செய்த பிழை ஒன்றுக்காக முழுக் கவனமின்றி ‘’அவனுடன் யாரும் பேசாதீர்கள்’’ என அனுகூலசாமி கூறி விடுகிறார். அதை அனைத்து மாணவர்களும் சிரமேற்கொண்டு பின்பற்றி விடுகின்றனர். சின்னையா தனித்து விடப்படுகிறான். அவனை பிரிவுபசார விழாவுக்கு வரக் கூடாது என்றும் அவன் பங்களிப்பை அவன் தரக்கூடாது என்றும் கூறி விடுகின்றனர். அவன் மனத்தை அது வாட்டுகிறது. அவனுடைய அன்னையிடம் முறையிட்டு ஆசிரியரைப் பார்க்க கிளாஸ் லீடருடன் வந்திருக்கிறான்.
அனுகூலசாமி அதிர்ச்சி அடைகிறார். அவரது ஆசிரிய வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. இப்போது அவர் செய்த ஓர் அறியாப் பிழை கவனத்துக்கு வந்திருக்கிறது. கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் மீது உரைக்கப்பட்ட பாராட்டுகள் மலர்கிரீடமாக இருந்தன; அதனை அவர் இப்போது முள்கிரீடமாக உணர்கிறார்.
இந்த சிறுகதையில் இரண்டு ஓவியங்கள் வருகின்றன. முள்முடி ஏந்திய மனிதகுமாரனின் ஓவியம். இன்னொன்று ஓர் ஆட்டுக்குட்டியை தன் மார்போடு அணைத்துக் கொண்டிருக்கும் மனித குமாரனின் ஓவியம். அந்த ஆட்டுக்குட்டி மந்தையிலிருந்து பிரிந்து தனித்து விடப்பட்டிருக்கும் ஆட்டுக்குட்டி. மந்தையில் பிரிந்து துயருறும் ஆடே மனித குமாரனின் நேசத்தை மேலும் பெறுகிறது.
அனுகூலசாமியின் செயலால் ஓராண்டாக சின்னையா தனித்து விடப்பட்டு விட்டான்.
இந்த ஓவியங்கள் சிறுகதையை மேலும் அணுகி அறிய அடிக்குறிப்பு என்று எனக்குத் தோன்றியது.
சின்னையாவுடன் எல்லா மாணவர்களும் பேசுங்கள் என அனுகூலசாமி கூறுகிறார் ; பொங்கிய அழுகையை சிரிப்பாக்கிக் கொண்டு.