மூன்று மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவருக்கு உள்ளே இருந்த உயிர்மரம் ஒன்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் வெட்டப்பட்டு அதன் கிளைகள் விற்பனை செய்யப்பட்டன. சம்பவம் நடந்ததற்கு மறுநாள் நான் அந்த சாலை வழியாக சென்ற போது இவ்வாறு நிகழ்ந்திருப்பதைக் கண்டேன். அந்த கணத்திலிருந்து வெட்டப்பட்ட மரத்துக்கான நியாயத்தைக் கேட்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறேன்.
ஆயிரக்கணக்கானோர் தினமும் பயணிக்கும் சாலைக்கு அருகில் நிகழ்ந்திருக்கும் சம்பவம் என்பதால் அதனை அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அதிகாரி தனது வருவாய்த்துறை மேலதிகாரிகளுக்கு அறிக்கையாக அளித்திருக்க வேண்டும். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25,000க்கு மேல் இருக்கக் கூடும் என்பதால் கிராம நிர்வாக அதிகாரியின் மேலதிகாரிகள் அந்த தொகையை மரத்தை வெட்டிய நபர் மீது அபராதமாக விதிக்க வேண்டும். சாலையை ஒட்டி நடந்த செயல் என்பதால் மட்டும் அல்ல கிராமத்தில் எந்த ஒரு அரசுப் புறம்போக்கு நிலத்தில் இவ்வாறு நடந்திருந்தாலும் அது குறித்து அறிக்கை அளித்து மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்வது கிராம நிர்வாக அதிகாரியின் கடமை.
சம்பவம் நடந்தது ஞாயிற்றுக்கிழமை. அதனை நான் காண நேர்ந்தது திங்கட்கிழமை. செவ்வாயன்று கிராம நிர்வாக அதிகாரிக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவித்து உரிய மேல்நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறு கோரி மனு அனுப்பினேன். அந்த மனுவின் நகலை முதலமைச்சரின் தனிப்பிரிவு, வருவாய்த்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு அந்த மனுவின் நகலை அனுப்பினேன். நிகழ்ந்த சம்பவம் குறித்து மேலிருந்து கீழ் வரை அனைவரின் கவனத்துக்கும் ஒரே சமயத்தில் வர வேண்டும் என்பதால் அவ்வாறு செய்தேன்.
இந்த சம்பவத்தை ஆயிரம் பேர் பார்த்துள்ளார்கள். இந்த மரம் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட மரம் டிராக்டர் டிப்பரைக் கொண்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நிகழ்ந்ததற்கு பலரும் சாட்சி. சம்பவம் நடந்ததன் சுவடுகளைச் சுமந்து கொண்டிருக்கும் மரமே தான் வெட்டப்பட்டதற்கான சாட்சி. இத்தனை தடயங்களும் சாட்சிகளும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்பினேன். மாநில வருவாய்த்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்வது ஒரு குடிமகனாக எனது கடமை என்பதால் அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றேன்.
இந்த சம்பவம் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை என்ன என்று கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரினேன். மரம் வெட்டப்படவில்லை என வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தகவல் அளித்தது. தகவல் அளித்த அதிகாரி மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி கோரிய விபரத்துக்கு திசை திருப்பும் பதில் அளித்ததாக மாநில பொது தகவல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன்.
மாவட்ட ஆட்சியருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மரம் வெட்டியவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும் அவ்வாறு குற்றம் இழைத்த ஒருவரை சட்டவிரோதமாகப் பாதுகாக்கும் அதிகாரிகள் மீது துறை மீதான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அனுப்பினேன். இந்த மனுக்களை ஆங்கிலத்தில் அனுப்பினேன். ஆங்கிலத்தில் மனு அனுப்பும் ஒருவர் உரிய மேல்நடவடிக்கை எடுக்காமல் போனால் நீதிமன்றத்தை நாட உத்தேசித்திருக்கிறார் என்பது அதன் மறைமுக அர்த்தம் என்பதால் அவ்வாறு செய்தேன். அதற்கு பலன் இருந்தது.
பதினைந்து நாட்களுக்கு முன்னால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தேன். இன்னும் ஒரு வாரத்தில் சம்பவ இடத்தை நேரில் பார்ப்பதாகக் கூறினார்கள். இன்று மீண்டும் சென்றிருந்தேன். ஒரு அரசு அலுவலகத்துக்கு செல்வது என்பது உவப்பான அனுபவம் இல்லை. எனினும் நான் மனிதர்கள் மேல் நம்பிக்கை வைப்பவன். எவரைப் பற்றியும் எதிர்மறையாக எண்ணக் கூடாது என நினைப்பவன். ஒரு தீமை எதிர்க்கப்பட வேண்டுமே தவிர தீமையைச் செய்பவர்கள் அதனை அறியாமையால் கூட செய்யலாம் என்பதால் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல என எண்ணுபவன். சட்டம் சுதந்திரமாகத் தன் கடமையை ஆற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.
மரம் வெட்டப்பட்டு முழுமையாக 90 நாட்கள் கடந்து போயிற்று. மனு கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் உரிய அபராதம் விதித்திருக்க முடியும். அதிகபட்சம் போனால் ஒரு வாரத்துக்குள் எல்லா நடைமுறைகளும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அபராதம் விதிக்கப்படுவதை மரத்தை வெட்டியவர் ஏற்கவில்லை என்றால் அவர் நீதிமன்றத்தை நாடி தனக்கு ஏதும் விளக்கம் இருப்பின் அதனை அளித்து தீர்வு பெறலாம்.
அபராதம் விதிப்பது வருவாய்த்துறையின் கடமை. அதனை அவர்கள் 90 நாட்கள் செய்யாமல் இருக்கிறார்கள் என்றால் அது யாரைக் காப்பாற்ற என்பதை எவருமே எளிதில் யூகிக்க முடியும். குற்றம் இழைத்தவரைக் காப்பாற்ற ஏன் அவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள் என்ற இரண்டாவது யூகத்துக்கும் எவரும் எளிதில் சென்றிட முடியும்.
நாள் ஆக ஆக விஷயம் ஆறிப் போகும் என சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கின்றனர். இந்த விஷயத்தில் நாள் தள்ளிக் கொண்டே போவது குற்றம் இழைத்தவர்களுக்கு மிகவும் பாதகமான விஷயமே. சம்பவம் குறித்து மனு அனுப்பிய பின்னும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டாட்சியர் அலுவலகம் ஏன் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று கூறியது என நீதிமன்றம் கேட்கும். இப்போது அபராதம் விதிக்கப்பட்டால் அந்த சம்பவம் நடந்தது என்பதை குற்றம் இழைத்தவரும் வருவாய்த்துறையும் ஒத்துக் கொண்டார்கள் என ஆகும். அவ்வாறெனில் இந்த 90 நாள் தாமதம் செயற்கையாக உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்பதையும் அது பட்டவர்த்தனமாக்கும்.
தமிழ்நாட்டில் 16,000 கிராமங்கள் இருக்கின்றன. அங்கே மரம் வளர்க்க வாய்ப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் ஆகச் சாத்தியமான அளவில் மரக்கன்றுகளை நட வேண்டியுள்ளது. அது ஒரு பெருஞ்செயல். அரசு , தன்னார்வ அமைப்புகள், தனியார், பொதுமக்கள் என பலரும் இணைந்து சாதிக்க வேண்டிய விஷயம். ஒரு மரம் என்பது எத்தனையோ பட்சி பிராணிகளுக்கு உணவாய் வாழிடமாய் அமையக் கூடியது. அவை காக்கப்பட வேண்டும் என்பதால் தான் அதற்கு உரிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எவரும் எங்கும் எந்த கட்டுப்பாடுமின்றி மரம் வெட்டலாம் என்று ஆகும் என்றால் அதற்கு எந்த எல்லையும் கிடையாது. முடிவும் கிடையாது.
ஒரு செயலைத் தொடங்கினால் அதன் இறுதி வரை சென்று பார்ப்பது என்பது எனது இயல்பு. ஆயிரம் பேர் செல்லும் சாலையில் எந்த ஒருவரும் மரம் வெட்டப்படுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற பொதுமக்கள் குறித்த எண்ணமே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை இதனைச் செய்ய வைத்திருக்கிறது. முதல் முறை அந்த மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்ட போது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அந்த உணர்வு 90 நாட்களுக்குப் பின் மேலும் பத்து மடங்கு கூடியிருக்கிறது. நாட்களைக் கடத்தினால் மனு அளித்தவர் சோர்ந்து விடுவார் என சம்பந்தப்பட்டவர்கள் எண்ணுவார்களேயாயின் அந்த எண்ணம் மெய்யாக வாய்ப்பில்லை. வெட்டப்பட்ட மரத்துக்கு நீதி கிடைக்கும் வரை இந்த விஷயத்தில் எனது செயல்கள் தொடரும்.
ஒரு ஜனநாயக அரசை அரசியல் சட்டமே ஆள்கிறது என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டவன் நான். எனது ஜனநாயகக் கடமையை நான் செய்வதாகவே எண்ணுகிறேன்.
பின்குறிப்பு:
பிரதானமாக ஐந்து இடங்களில் வெட்டப்பட்டு அதன் கிளைகள் அகற்றப்பட்ட அந்த மரம் இப்போது மீண்டும் துளிர்க்கத் தொடங்கி உள்ளது.