Monday 24 October 2022

உலகம் ஒரு குடும்பம்

உலகம் ஒரு குடும்பம் என்கிறது இந்திய மரபு. உலக உயிர்கள் அனைத்துமே விஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால் யாவும் யாவரும் ஒரே குலத்தவர் என்பது இந்திய நம்பிக்கை.  

நான் பண்டிகை தினங்களில் குறைவான பொழுது வீட்டில் இருந்து விட்டு அதிக நேரம் நண்பர்களைச் சென்று சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். அன்றைய தினத்தில் பேருந்துகளையும் ரயில்களையும் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவேன். சாமானிய மக்களுடன் பண்டிகை தினத்தன்று இணைந்து இருக்க விரும்புவேன். சாமானிய மக்களுடன் இருக்கும் போது அவர்களுடன் உரையாடும் போதே என் பாதைக்கான வழிகளைக் கண்டடைகிறேன். 

என் நண்பன் சூரிய நாராயணனுக்கு இந்த வருடம் தலை தீபாவளி. வீர நாராயண ஏரிக்கரை கிராமம் ஒன்றில் அமைந்திருக்கிறது அவனுடைய மாமனார் வீடு. மனைவியுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்தான். இன்று மதியத்துக்கு மேல் கிளம்பி அங்கே செல்வதாக முடிவு செய்து கிளம்பிச் சென்றேன். தீபாவளி தினம் என்பதால் பத்தில் ஒரு பங்கு பேருந்துகளே இயங்கிக் கொண்டிருந்தன. மெல்ல சிதம்பரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து பிடித்து அவனுடைய மாமனார் ஊருக்குச் சென்று அவர் வீட்டைக் கண்டடைந்து சென்றேன். 

மிகச் சிறப்பான காஃபி கொடுத்து உபசரித்தார்கள். தீபாவளி இனிப்புகள் வழங்கினார்கள். வழக்கமாக தீபாவளி சமயத்தில் வீடுகளுக்குச் செல்லும் போது இனிப்புகள் அதிகமாக தட்டில் வைத்திருந்தால் அதனை ஒரு பாலிதீன் பையில் கட்டிக் கொடுத்து விடுமாறு கூறுவேன். வரும் வழியில் பேருந்தில் அருந்தலாம் அல்லது வீட்டுக்குக் கொண்டு வந்து மறுநாள் அருந்தலாம். அவ்வாறு சொன்னதும் வேறு இனிப்பை தனியாகத் தருகிறோம் இதனை இப்போது அருந்துங்கள் என்பேன். தனியாகத் தருவதுடம் இதனையும் சேர்த்துத் தாருங்கள் என்பேன். இந்த முறை சூரிய நாராயணன் மாமனார் வீட்டில் அளவாகவே கொடுத்தார்கள். முழுமையாக அருந்தினேன். 

நானும் சூரிய நாராயணனும் வீர நாராயண ஏரிக்கரையில் அமர்ந்திருந்தோம். நான் அவனை சில ஆண்டுகளுக்கு முன்னால் வீர நாராயண ஏரிக்கு அழைத்து வந்திருக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊருக்கு வரும் போது அவர்கள் வீர நாராயண ஏரியை பார்க்காதவர்களாக இருந்தால் ஏரிக்கு அழைத்து வந்து காட்டுவேன். இப்போது வீர நாராயண ஏரிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவரை மணம் புரிந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சி தந்தது. 

பி. ஜி. கருத்திருமன் அவர்களின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ என்ற நூலை இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறான். பி.ஜி. கருத்திருமன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். திராவிட இயக்கம் கம்பராமாயணம் மேல் வசை மாரி பொழிந்து கொண்டிருந்த காலத்தில் - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சி. என். அண்ணாத்துரை கம்பராமாயண நூல் பிரதியை ஊருக்கு ஊர் தீ வைத்துக் கொளுத்தி தனது கட்சியினரையும் அவ்வாறே செய்யச் சொல்லிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தேசியத்திலும் பண்பாட்டிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த பி.ஜி. கருத்திருமன் அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு எளிய முறையில் கம்பனைக் கொண்டு செல்ல கம்பனின் 12,000 பாடல்களில் தேர்ந்தெடுத்த 960 பாடல்களை தேர்ந்தெடுத்து இந்த நூலை எழுதினார். கம்பனில் நுழைய இந்த நூல் நல்லதொரு நுழைவாயில். இந்த நூல் குறித்து நான் சொல்வனம் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ( யாமறிந்த புலவரிலே )

உலகெங்கும் அறிஞர் எனக் கூறப்படுபவர்கள் நூல்களை படைப்புகளை இலக்கிய ஆக்கங்களை மதிப்பவர்களாக இருப்பார்கள் என்பது வழக்கம். தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழின் ஆகப் பெரிய இலக்கிய சாதனையான கம்பராமாயணப் பிரதியை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்று கூறிய சி.என். அண்ணாத்துரையை அறிஞர் என்று சொல்வார்கள். 

அவருடைய பெயரே கம்பராமாயணக் காவியத்தின் தலைவனான ராமனின் பெயர். துரை என்ற தெலுங்கு வார்த்தைக்கு அரசன் என்று பொருள். அண்ணாத்துரை என்றால் அரசனான அண்ணன் என்று பொருள். இது இராமனைக் குறிக்கும் பெயர். இராமன் மூன்று தம்பிகளின் அண்ணனாக இருந்தவன். அரசனாகவும் இருந்தவன். 

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அவருடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம். சி. என். அண்ணாத்துரை கூறியதற்கேற்ப தனது வீட்டில் இருந்த கம்பராமாயணப் பிரதியைக் கொளுத்த முடிவு செய்து மண்ணெண்ணெய் டின்னை எடுத்து வந்து வைத்துக் கொண்டு தீப்பெட்டியையும் கையில் வைத்திருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. இன்னும் சில வினாடிகளில் இந்த நூல் தீக்கிரையாகப் போகிறது. அதற்கு முன் அந்த நூலில் என்ன தான் இருக்கிறது என வாசித்துப் பார்ப்போமே என வாசிக்கிறார். வாசிக்க வாசிக்க கம்பனால் வசீகரிக்கப்பட்டு அந்த நூலின் சிறப்பை உணர்ந்து கொள்கிறார். திராவிட இயக்கத்திலிருந்து தன்னை முழுமையாக வெளியேற்றிக் கொண்டு தேசிய கட்சியான் காங்கிரசில் இணைகிறார். 

பி.ஜி. கருத்திருமனின் நூலுக்கு காங்கிரஸ் தலைவர்களான காமராஜ், சி. சுப்ரமணியன், தூரன் மற்றும் குடியரசுத் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அணிந்துரை அளித்துள்ளார்கள். 

கம்பன் குறித்து பேசிக் கொண்டிருந்து விட்டு சூரிய நாராயணனின் மாமனார் வீட்டுக்குத் திரும்பினோம். 

எனக்காக குறுகிய நேரத்தில் இட்லி தயாரித்து வைத்திருந்தார்கள். நுட்பமான ருசி கொண்டிருக்க வேண்டும் என்பதால் தேங்காய் சட்னியை மிக்ஸியில் அரைக்காமல் அம்மியில் அரைத்திருந்தார்கள். இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டதும் பார்த்துப் பார்த்து ஒன்று ஒன்று செய்வதுமான அவர்களது இயல்பு என்னை நெகிழச் செய்தது. 

இவர்களைப் போன்றோரே எங்கும் எப்போதும் கிளம்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்கள். 

அவர்கள் பெரியபாளையத்தம்மனை வழிபடுபவர்கள். அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருந்த பாளையத்தம்ம்மனை வழிபட்டு விட்டு நள்ளிரவு 11.30க்கு ஊர் திரும்பினேன்.