’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்ற சிறு அலகை தனது செயல்களமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு. ஒரு கிராமம் என்று கூறினாலும் அங்கிருக்கும் இரண்டாயிரம் பேருடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ள முனைகிறது ‘’காவிரி போற்றுதும்’’. ஒரு கிராமத்து மக்களின் முழுமையான நலன் என்னும் விஷயத்தை தனது அகத்தில் இருத்திக் கொள்ள ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது.
ஒரு ஊரில் பொது இடங்களில் சாத்தியமான எல்லா இடங்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை தனது செயல் திட்டமாகக் கொண்டு முதல் படி எடுத்து வைத்தோம். எனினும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்குவது ஊரின் மரங்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தியது. ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேவையான மரக்கன்றுகளை வழங்கிய பின் ஊரின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது மேலும் உகந்தது என்பதால் அந்த வழிமுறையைக் கைக்கொண்டோம். மரக்கன்றுகள் மூலம் நல்ல பயன் பெற மரக்கன்றுகளை எப்படி நட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியிருந்தது. அதனை நாம் செய்தோம்.
என்னுடைய பன்னிரண்டு வயதில் நான் பெங்களூர் நகருக்குச் சென்றிருந்தேன். பூத்துக் குலுங்கும் ஒரு மாநகரை அப்போது கண்டேன். அந்த மரங்களும் பூக்களும் அளித்த அக மகிழ்ச்சி என்பது இப்போதும் நினைவில் இனிக்கிறது. ஒரு கிராமத்தை அவ்விதமான பூக்கும் மரங்களின் பிராந்தியமாக ஆக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மக்கள் தொடர்பு மூலம் ஒவ்வொரு படிநிலையாகச் செல்ல வேண்டும் என்பதே யதார்த்த நிலை.
தற்போது செயல் புரியும் கிராமத்தில் தை மாத அறுவடைக்குப் பின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் இருபது தேக்கு மரக்கன்றுகளை அளித்து அவர்கள் வயலின் மிகச் சிறு பரப்பில் நட்டு வளர்க்க உடனிருந்து ஊக்கமளிக்க வேண்டும் என்பது இப்போது எனது முதன்மையான பணி. அஞ்சல் அட்டை மூலம் ஒவ்வொரு குடும்பமாக தொடர்பு கொண்டவாறு இருக்கிறேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பரஸ்பர உரையாடல் மூலம் இந்த விஷயத்தை கிராமத்து மக்கள் தங்களுக்குள் பரப்பிக் கொள்கிறார்கள்.
தேக்கு மரக்கன்றுகள் முழுமையான வெற்றி பெற குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும். ஆயினும் அதன் வெற்றிப்பாதையை ஓராண்டில் கணித்து விடலாம். மரம் பத்து அடி உயரத்துக்கு எந்த பக்கக் கிளையும் இல்லாமல் வளர்ந்து விட வேண்டும். இதற்கு ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆகும். அதன் பின் முறையாக வாரத்துக்கு மூன்று நாட்கள் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் அதன் வளர்ச்சி என்பது பிரம்மாண்டமாக இருக்கும். மரத்திலிருந்து பயன் பெற முறையாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதை கிராம விவசாயியின் மனத்தில் பதிய வைக்க வேண்டியுள்ளது. இது ஒரு அடிப்படையான பணி. கிராம மக்கள் உழைக்கத் தயங்குபவர்கள் அல்ல. அவர்கள் உழைப்பின் மூலம் அவர்கள் பொருளியல் நலன் பெறும் வண்ணம் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகளை 20 தேக்கு மரக்கன்றுகள் நடச் செய்தால் இந்த கிராமம் ஒரு மாதிரி கிராமமாக ஆகும். இதனை அடிப்படையாய்க் கொண்டு மேலும் பல கிராமங்களில் இந்த பணியை முன்னெடுக்க முடியும் என்பது நமது நம்பிக்கை.
செயல் புரியும் கிராமத்தில் கல்வி சார்ந்த பணி ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ விரும்பியது. அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. கல்விப் பணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பதைக் கண்டடைந்தது. அதனைத் துவங்குவதற்கான பொருத்தமான நேரத்துக்காகக் காத்திருக்கிறது.
செயல் புரியும் கிராமத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு சென்ற ஆண்டு மழைக்காலத்தின் போது ஆறு நாட்கள் ஒரு வேளை உணவு வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ ஏற்பாடு செய்தது. ஒரு கிராமத்தில் பணியாற்றும் போது அங்கே உள்ள மக்களின் அசௌகர்யமான நிலையில் அவர்களுடன் உடனிருக்க வேண்டும் என்று ‘’காவிரி போற்றுதும்’’ விரும்பியது. நண்பர்களின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலும் அதனை நிறைவேற்ற முடிந்தது.
செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பேட்மிட்டன் ராக்கெட், பந்து, கைப்பந்து , கால்பந்து, ரிங் பால், கிரிக்கெட் மட்டை, பந்து ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது எனது விருப்பம். இன்று குழந்தைகளின் நேரத்தை முழுமையாக தொலைக்காட்சி எடுத்துக் கொள்கிறது. ஓடியாடி உடல் வலிமை பெற வேண்டிய வயதில் குழந்தைகள் டி.வி முன் முடங்கிக் கிடக்கின்றன. அதனை உணரும் நிலையில் இன்றைய பெற்றோர் இல்லை. சிறு வயதில் குழந்தைகள் கூடி விளையாடி கூடியிருத்தலின் மகிழ்ச்சியை உணர வேண்டும். அதற்காக ஊரின் எல்லா குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பொருட்களை அளிக்க வேண்டும் என்று விரும்பினேன். குழந்தைகள் என்ன கேட்கிறார்களோ அவை அத்தனையையும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். கணிசமான செலவாகும் யோசனை அது. வாய்ப்பு கிடைக்கும் போது நிறைவேற்ற திட்டம் உள்ளது.
தளத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளை வாசிக்கும் நண்பர்கள் ஏதோ ஒரு விதத்தில் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பார்கள். சிலர் உணவிடுதல் முக்கிய பணி என நினைப்பார்கள். சிலர் கல்விப்பணியை முக்கியம் என உணர்வார்கள். சிலர் பொது இடங்களில் மரம் நடுதல் முக்கியமானது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். சிலருக்கு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணியில் ஈடுபாடி இருக்கும். ‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்களின் எல்லா எண்ணங்களையும் விருப்பங்களையும் ஈடுபாட்டையும் ஒன்றெனவே கொள்கிறது. சமூகத்துக்கு ஏதேனும் ஒருவகையில் ஆக்கபூர்வமான பங்களிப்பாற்ற வேண்டும் என எண்ணும் எவருக்கும் ‘’காவிரி போற்றுதும்’’ இடமளிக்க விரும்புகிறது. ஒரு விஷய்த்தைப் பிழையின்றி செய்தல் என்பதும் சிறிய அளவில் செய்து அதனை அவதானித்து ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றைத் திருத்திக் கொள்வதும் காந்திய வழிமுறை. காந்திய வழிமுறையின் படியே ‘’காவிரி போற்றுதும்’’ முன்நகர்கிறது.
‘’காவிரி போற்றுதும்’’ சாத்தியமான எல்லா வழிகளிலும் மக்களை இணைக்க விரும்புகிறது. இந்நிலையில் ‘’காவிரி போற்றுதும்’’ இப்போது இருப்பதை விட இன்னும் பெரிய அமைப்பாக மாற வேண்டும் என நண்பர்கள் விருப்பம் தெரிவித்தனர். நான் முன்னெடுக்கும் எல்லா செயல்களையும் நண்பர்களிடம் கூறி அவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டு செயல்முறையில் சில மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்து கொண்டு செயலாற்றுவதை எனது வழிமுறையாகக் கொண்டுள்ளேன். ’’காவிரி போற்றுதும்’’ விரிவாதலுக்கான நேரம் உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.