படைப்பூக்க மனநிலை என்பது மிகவும் பிரத்யேகமானது. படைப்பாளியால் கூட அதனை இன்னதென்றும் இன்ன விதமானதென்றும் வரையறுத்திட முடியாதது. அவ்விதமான படைப்பூக்க மனநிலைக்குச் சென்று அவன் உருவாக்கும் படைப்பின் ஒவ்வொரு அணுவும் கலாபூர்வமானது. கலாபூர்வமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பில் உள்ளது. அதில் கண்ணுக்குத் தெரியும் தொடர்புகளும் இருக்கும். கண்களால் கண்டறிந்திட முடியாத தொடர்புகளும் இருக்கும்.
கங்கா ஸ்நானம் கதையில் சின்னசாமி காசியில் மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் காசிக்கு வந்து வாசம் புரியும் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புரோகிதர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அந்த புரோகிதர் தனது குழந்தைக்கு முடியிறக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்ததாகக் கூறுகிறார். சின்னசாமி ஆச்சர்யப்பட்டு காசியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கா என்று கேட்கிறார். எங்கு சென்றாலும் குலதெய்வம் என்பது அங்கேயே தானே இருக்கும் ; வைத்தீஸ்வரன் குடும்ப தெய்வம் ஆயிற்றே என்கிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்த தனது சகோதரிக்காக சின்னசாமி காசி வருகிறார் என்பதோடு இணைத்து யோசிக்க வேண்டிய வரி இது.
சின்னசாமியை ஏமாற்றுகிறார் ஒருவர். அந்த ஏமாற்றம் பெருஞ்சுமையாய் அழுத்துகிறது சின்னசாமியை. நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணப்பட்ட விஷயம் என்றாலும் சின்னசாமிக்கு நிகழ்ந்த வஞ்சனை என்பது வலி மிகுந்ததே. அந்த வலியின் துயரம் நீங்க கங்கையில் மூழ்கி எழ வருகிறார். சின்னசாமியை வஞ்சித்தவரும் முதல் நாளே வந்து கங்கையில் மூழ்கி எழுகிறார். இருவரும் ஒரே இடத்தில் ஒருவரை ஒருவர் அறியாமல் தங்கியிருக்கின்றனர். முதலில் அதனை அறியும் சின்னசாமி தன்னை வஞ்சித்தவருக்காகவும் கங்கையில் முழுக்கு போடுகிறார்.
காலத்தின் நீளம் எல்லா உணர்வுகளையும் அணுவினும் அணுவாக ஆக்குகிறது. கங்கை விருப்பு வெறுப்பு இன்றி தன்னிடம் வரும் எல்லா மனிதர்களின் பாவத்தையும் பாவ போதத்தையும் தன் நகர்வால் அடித்துச் சென்ற படி இருக்கிறாள். கண்ணுக்குத் தெரியும் உணர்வுகள் கண்ணுக்குத் தெரியாத உணர்வுகள் அனைத்தையும்.