Sunday, 30 October 2022

களையெடுப்பு

விஜயதசமியன்று ( 04.10.2022) செயல் புரியும் கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் 70 தேக்கு மரக் கன்றுகளை நட்டோம். அந்த விவசாயியின் நிலம் நூறு மீட்டர் இடைவெளியில் இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று காவிரியின் கிளை ஆறு ஒன்றினை ஒட்டி அதன் நேரடியான கரையில் உள்ளது. இன்னொன்று அவருடைய வயலில் இருக்கும் திடலில் உள்ளது.  மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அந்த கன்றுகளைக் காண நான் அங்கு செல்வேன். அவ்வாறு செல்வது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியது. லேசாக துளிர் விடும். சிறு மகவு போன்ற மென்மை கொண்ட அந்த புதுத்துளிர்கள் எனக்கு நம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு முறையும் மேலும் வளர்ந்திருக்கிறதா மேலும் வளர்ந்திருக்கிறதா எனக் கண்கள் ஆர்வமுடன் காணும். செடியின் வளர்ச்சி என்பது செடி துளிர் விட்டு மேலெழுவது மட்டுமல்ல ; அது வேர்பிடிக்கத் தொடங்குவதும் தான். முதலில் நடப்படும் எந்த செடியும் வேர்பிடிக்கத் தொடங்கும். மண்ணை அகழ்ந்து கொண்டு அதன் வேர்கள் முதலில் செல்லும். நன்றாக வேரூன்றித் தன்னை மண்ணில் நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் விண் நோக்கி எழத் தொடங்கும். வேர்கள் பரவிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடியாது. தளிர்களை நோக்கியே எல்லாருடைய கவனமும் இருக்கும். 

நட்ட தினத்திலிருந்து வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது மழை பெய்கிறது. ஆதலால் தேவையான தண்ணீர் செடிக்குக் கிடைக்கிறது. மழைநீரில் செடியின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைப்பதால் அதைத் தாண்டி இப்போது வேறு எந்த வெளியிலிருந்து இடப்படும் உரமும் தேவையில்லை. 70 செடிகளும் இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுக்கப்பட்டு அதில் மக்கிய சாண எரு இடப்பட்டு ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடையே 12 அடி தூர இடைவெளி பராமரிக்கப்பட்டு நடப்பட்டுள்ளன. எட்டு கன அடி கொள்ளளவுக்கு இடப்பட்டுள்ள மக்கிய சாண எருவின் ஊட்டம் இன்னும் பல மாதங்களுக்குப் போதுமானது. இது மழைக்காலம் என்பதால் மழையின் ஊட்டமும் கிடைத்து விடும். 

நேற்று நிலத்தைப் பார்வையிட்ட போது களைச்செடிகள் வளரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன். விவசாயியிடம் களையெடுக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் களைக்கொல்லி அடிக்கலாமா என்று கேட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அந்த விவசாயி களைக்கொல்லி வாங்க வேண்டும் . ஒரு ஆள் ஊதியம் கொடுத்து களையெடுக்கச் சொல்ல வேண்டும். விவசாயிக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 செலவாகும். இரண்டு நாட்கள் கழித்து முடிவு செய்து கொள்வோம் என முடிவெடுக்காமல் ஒத்திப் போட்டேன். ஆனால் இன்று காலை அந்த நிலத்துக்குச் சென்று செடிகள் நடப்பட்டுள்ள இரண்டு அடி நீள இரண்டு அடி அகல பரப்பில் மட்டும் இருந்த களைச்செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்தேன். அந்த நான்கு சதுர அடி பரப்பில் மக்கிய சாண எரு இடப்பட்டுள்ளதால் களைகளும் அந்த ஊட்டத்தைக் கொண்டு வேகமாக வளரும். தேக்கின் வளர்ச்சிக்கு அந்த நான்கு சதுர அடி பரப்பு மட்டும் களைகள் இன்றி இருந்தால் போதும். வயலில் இருக்கும் திடலில் உள்ள செடிகளுக்கு களை எடுத்துக் கொண்டு இருந்தேன். உண்மையில் எனக்கு அந்த பணி உற்சாகம் அளித்தது. அடிப்படையில் நான் நகரப் பின்னணியில் வளர்ந்தவன். மண்ணில் வயலில் இறங்கி வேலை செய்த பழக்கம் இல்லை. களையெடுத்தலில் இருந்து துவங்குவோம் எனத் துவங்கினேன். இன்று காலை மழை பெய்திருந்ததால் நிலம் சேறாக இருந்தது. மண் நெகிழ்ந்திருந்ததால் களைச்செடிகள் குறைந்த பிரயத்தனத்திலேயே கையோடு வந்தன. களைச்செடிகளின் வேரை நறுக்கி விட்டு தண்டுப் பகுதியை நான்கு சதுர அடி பரப்பிலேயே போட்டேன். அவை பசுந்தாள் உரமாக மாறும். மெல்ல ஒவ்வொரு செடியாக வேலை செய்து கொண்டிருந்தேன். கையெல்லாம் சேறாகி விட்டது. அது மிகவும் மகிழ்ச்சியே தந்தது. புதிதாக வேலை செய்வதால் உடல் வேர்த்துக் கொட்டியது. உடலின் அதிகப்படியான கலோரிகளை எரித்தது போலவும் ஆயிற்று ; களையெடுத்ததாகவும் ஆயிற்று ; ‘’காவிரி போற்றுதும்’’ பணியாகவும் ஆயிற்று என எண்ணினேன். ஒரு மணி நேரம் வேலை செய்திருப்பேன். அந்த நிலத்தின் விவசாயி வந்து விட்டார். அவருக்கு நான் சிரமப்படுகிறேனே என வருத்தம். சிரமம் இல்லை மகிழ்ச்சி தான் என்றேன். இதன் மூலம் நான் மண்ணுடனும் என் பணியுடனும் மேலும் உணர்வுபூர்வமான தொடர்பில் இருப்பதால் இது தினமும் அவசியமானது என்றேன். முக்கால்வாசி பணியை முடித்திருப்பேன். விவசாயி நாளை நெல்வயலுக்கு ஆட்கள் வேலைக்கு வருவார்கள். அவர்கள் வேலையின் நடுவே பத்து நிமிடம் இந்த பணியை செய்யச் சொல்கிறேன் என்றார். நாங்கள் இருவரும் புறப்பட்டோம். கிராமத்தில் ஒரு விவசாயி தேக்கு மரம் நடுவதில் ஆர்வமாக உள்ளார். அவர் விஜயதசமி அன்று நாங்கள் மரம் நடும் போது வந்திருந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்று அவரை என்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து செடிகளின் வளர்ச்சியைக் காட்டினேன். சிறப்பாக இருக்கிறது என அபிப்ராயப்பட்டார். மழைக்காலத்திலேயே அவர் நிலத்திலும் பணி தொடங்கச் சொன்னேன். விரைவில் துவங்குவோம் என்றார். அதே கிராமத்தில் சென்ற ஆண்டு ஒரு விவசாயியின் திடலில் 50 தேக்குக் கன்றுகள் கொடுத்து வளர்க்கச் சொன்னேன். வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து அவருக்கு ஆலோசனைகள் வழங்கினேன். அவை இப்போது பதினைந்து அடி உய்ரம் வளர்ந்துள்ளது. அந்த மரங்களையும் புதிதாக நட உள்ள விவசாயியிடம் காட்டினேன். வீடு திரும்பிய போது காலை மணி 10. ஏழு மணிக்குச் சென்றது பத்து மணி ஆகி விட்டதா என எண்ணினேன். செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று விவசாயிகளை சந்திக்கும் போது நேரம் போவதே தெரியாது. யாரிடமும் நான் பேசுவது தேக்கு - இடைவெளி - ஆழம் என இவைதான். 

காலையில் நெல் வயலில் இருக்கும் திடலில் மட்டுமாவது முழு வேலையையும் முடித்து விட்டு வந்திருந்தால் நாளை ஆற்றங்கரையில் இருக்கும் நிலத்தில் பணி செய்யலாமே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் செய்யத் துவங்கிய பணியை இரண்டாம் நாளும் தொடர்ந்து செய்ய வேண்டியது கட்டாயம். இரண்டாம் நாள் பணியை முழுமையாக நிறைவு செய்வது சிறப்பு. வீட்டில் களைக்கொட்டு இருந்தது. அது பயன்படும் விதத்தில் இருக்கிறது என்கிறது என்பதை உறுதி செய்து கொண்டேன். மாலை 3.30 மணி அளவில் மீண்டும் நிலத்துக்கு சென்றேன். களைக்கொட்டைக் கொண்டு களைகளை ஒரு கொத்து கொத்தினேன். ஆழம் வரை சென்று வேரை அறுத்தது. தண்டை மண்ணில் புதைத்தது. மேல்பரப்பையும் காற்று செல்லும் விதத்தில் இளகச் செய்தது. நெல் வயல் திடலில் இருக்கும் செடிகளின் களைகளை முழுமையாக நீக்கியது மகிழ்ச்சி தந்தது. நாளை ஆற்றங்கரை இடத்தில் உள்ள செடிகளின் களைகளையும் நீக்கி விடலாம். 

திரும்பி வரும் போது ஒரு விவசாயத் தொழிலாளரும் அவரது மனைவியும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர் என்னைப் பார்த்து எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார். விஜயதசமி அன்று மரக்கன்றுகளை நட வந்த பணியாளர்களில் அவரும் ஒருவர். 

‘’சார் ! திடலுக்குப் போய்ட்டு வரீங்களா? நேத்து செடிகளைப் பாத்தேன் சார். எல்லாம் நல்லா துளுத்திருக்கு.’’

‘’ஆமா நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. ஃபிரீயா இருந்தேன். அதான் களையெடுக்கலாம்னு வந்தேன்.’’

‘’நாளைக்கு நடவு வேலை இருக்கு சார். அப்ப பத்து ஆள் வேலை செய்வோம். பத்து நிமிஷத்தில இந்த வேலையையும் செஞ்சுடுவோம். ‘’

‘’பரவாயில்லை இந்த மாதிரி வேலை செய்யறது எனக்கு சந்தோஷமா இருக்கு’’

‘’சார் ! எனக்கு ஒரு 20 தேக்கு கன்னு கொடுங்க சார். ‘’

‘’நிச்சயமா. ஊர்ல இருக்கற எல்லா விவசாயிக்கும் அவங்க கேக்கற தேக்கு கன்னு கொடுக்கணும்னு தான் நாம வேலை செய்யறோம். இதுல தேக்கு நடறவங்களுக்கு பலன் கிடைக்கணும்னா ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 அடி இடைவெளி இருக்கணும். ஒரு தேக்கஞ்செடி நடும் போது 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் குழி எடுத்து மக்கின சாண எரு போட்டு கன்னு நடனும்’’ . 

‘’நீங்க சொல்ற படியே செஞ்சுடறோம் சார்’’

இன்று இவரைச் சந்திக்க நேர்ந்தது ஒரு செடி ஒரு புதிய துளிர் விடுவது போல என எண்ணிக் கொண்டேன்.