மாயவரம் ஜங்ஷனில் தொடங்கி திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நிறைவடையும் தி. ஜா வின் சிறுகதை ‘’அக்பர் சாஸ்திரி’’.
மதுரை கோவிந்த சாஸ்திரி ஒரு வழக்கறிஞர். பதினோரு ஏக்கர் நிலத்தை வைத்து பண்ணையமும் பார்ப்பவர். எட்டு குழந்தைகளின் தந்தை. பெரிய குடும்பத்தை வழிநடத்துபவர். பந்து மித்ரர்கள் என பெரும் குழாமை உடையவர்.
பண்ணையாரும் வழகறிஞருமாக இருப்பதால் மதுரை ரயிலில் ஏறும் அவர் அவருடன் பயணிக்கும் சக பயணிகளிடம் சகஜமான உரையாடலில் ஈடுபடுகிறார். உடலை நன்முறையில் பேணும் உபாயங்களில் கைதேர்ந்தவரான கோவிந்த சாஸ்திரி தனது வயது என்ன இருக்கும் கேட்க சக பயணிகள் ஐம்பது வயது இருக்கக் கூடும் என யூகிக்கின்றனர். அறுபதாம் கல்யாணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது என்கிறார். அனைவரும் மலைக்கின்றனர்.
ஒவ்வொருத்தரும் தங்கள் உடல்நலக் குறைபாடுகளை அவரிடம் தெரிவிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆயுர்வேத சித்த வைத்திய தீர்வுகளை அளிக்கிறார். எல்லாரும் நோட்டில் டைரியில் குறித்துக் கொள்கின்றனர்.
தன் வாழ்நாளில் ஒரு பைசா கூட டாக்டருக்குக் கொடுத்ததில்லை ; ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை என்கிறார் கோவிந்த சாஸ்திரி. கேட்கும் எல்லாரும் ‘’அப்பாடா எப்பேற்பட்ட வாழ்க்கை’’ என்கின்றனர். தனக்கு சாத்தியமானது எல்லாருக்கும் சாத்தியம் தான் என்கிறார் சாஸ்திரிகள்.
மாயவரத்துக்கும் திருவிடைமருதூருக்கும் இடையே இருக்கும் 25 கிலோ மீட்டர் கிலோ மீட்டர் தூரத்தில் தனது உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரமிக்க வைக்கும் சரித்திரத்தைத் தன் சக பயணிகளிடம் எடுத்துரைக்கும் சாஸ்திரிக்கு திருவிடைமருதூரில் என்ன நிகழ்ந்தது என்பது தான் கதை.
எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று இது. ஐம்பது முறையாவது வாசித்திருப்பேன். ஒரு சிறுகதை ஏன் மீண்டும் மீண்டும் ஒரு வாச்கனை மீள்வாசிப்பு செய்ய வைக்கிறது என்னும் வினாவை வாசகன் எப்போதும் எழுப்பிக் கொள்கிறான். கலையின் மாயமும் அற்புதமும் அவ்வாறு வாசிக்க வைக்கிறது என்பது அதன் பல பதில்களில் ஒன்று.