விஜயதசமி துர்க்கை அசுரனை அழித்த தினம். தமோ குணத்தின் வடிவாகிய அசுரனை முக்குணங்களையும் கடந்த துர்க்கை சம்ஹாரம் செய்த தினம். மானுடன் சத்வ, ரஜோ, தமோ என்னும் முக்குணங்களின் கட்டுகளுக்குள் சிக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவன். நமது மரபு மானுடன் இந்த முக்குணங்களையும் கடந்து செல்ல வேண்டியன் என்கிறது. ஒவ்வொரு மானுடனுக்கும் அது சாத்தியமாக வேண்டும் என்பதும் அதற்கான வழிமுறைகளை ஓயாமல் அளித்துக் கொண்டேயிருப்பதும் நம் மரபு உலகுக்கு அளிக்கும் தொடர் கொடையாகும்.
நாம் நமது எல்லைகளுக்குள் அடையாளங்களுக்குள் தடைகளுக்குள் பழக்கங்களுக்குள் சிக்கிக் கொள்கிறோம். அவற்றையே நாம் என உணர்கிறோம். உற்று நோக்கினால் நாம் அவற்றைக் கண்டடைய முடியும். நோக்குங்கால் விலகி உதிர்ந்து போதலே அவற்றின் இயல்பு.
சமீபத்தில் ஒருவேளை உணவு அருந்துதல் என்பதை கணிசமான நாட்களுக்கு மேற்கொண்டேன். பசி கடுமையாக இருந்தது. பொழுது விடிந்து சில மணி நேரங்களில் பசியால் தலை சுற்றி வந்தது. எல்லா லௌகிகப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன். நிதி ஏற்பாடுகள் , பணி ஒருங்கிணைப்பு என ஆற்றலை எடுத்துக் கொள்ளும் வகையிலான வேலைகள். மேலும் ‘’காவிரி போற்றுதும்’’ முன்னெடுப்புகள். விரதத்தைத் தொடர முடியாமல் போனது. இன்று மீண்டும் துவங்குகிறேன். உடனிருப்பவர்கள் கடுமையான விரதங்கள் வேண்டாம் என்கிறார்கள். தவற விட்டாலும் மீண்டும் முயல்வதே உகந்தது. விரதம் இருந்து அதனைத் தொடர முடியாமல் போன அனுபவம் இருக்கிறது. அதிலிருந்து பாடம் படிக்க வேண்டும் . அவ்வளவு தான். சமீபத்தில் இருந்த விரதத்தில் உடல் எடை எட்டு கிலோ வரை குறைந்துள்ளது.
எனது தொழில் சார்ந்த பணிகள் ஒன்றிலிருந்து அடுத்தது என விரிவாகக் கூடியவை. மனிதர்களை ஒருங்கிணைக்கும் இயல்பிலானவை. அதனால் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வயிற்றுக்கு உணவு கொடுப்பதன் மூலமே ஒரு சமநிலையை உண்டாக்க முடியும். எனது தொழில் சார்ந்த நிலைக்கு வயிற்றுக்கு போதிய உணவு கொடுப்பதும் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளால் ஆற்றலைச் செலவழித்து ஒரு சமநிலையைக் கொண்டு வருவதுமே உகந்தது. உண்ணாமல் இருக்கும் தோறும் உடல் சோர்வாகும். பணி வேகம் குறையும். பணி வேகம் குறைவது மனதை சோர்வடையச் செய்யும்.
இன்று - வெற்றித் திருநாளில் - மீண்டும் துவங்குகிறேன். இம்முறை வெல்வேன்.
இன்று காலை செயல் புரியும் கிராமத்தில் நூறு தேக்கு மரக்கன்றுகள் இரு விவசாயிகளின் நிலத்தில் நட உள்ளோம். ஒரு திடலில் 70 கன்றுகள் . ஒரு தோட்டத்தில் 30 கன்றுகள். கிராமத்தில் இன்னும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சிறுகதைத் தொகுப்புக்கான பணியையும் இன்று துவக்குகிறேன்.