இன்று செயல் புரியும் கிராமத்தில் எண்பது தேக்கு மரக்கன்றுகளை நட்டோம். முன்னரே இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அதில் மக்கிய சாண எரு இடப்பட்டிருந்தது. இன்று காலை 9.15 மணி அளவில் மரக்கன்றுகள் நடவு தொடங்கியது. அந்த நிலத்தின் விவசாயியும் அவரது நண்பர்களான சக விவசாயிகளும் மூன்று விவசாயத் தொழிலாளர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். விவசாயத் தொழிலாளர்களிடம் குழி எடுப்பதன் அவசியத்தையும் எரு இட்டு மரக்கன்று நடப்படுவதின் தேவையையும் விளக்கினேன். அவர்களுடைய வீட்டுத் தோட்டத்திலோ அல்லது வயலிலோ அவர்கள் தேக்கு நட விரும்பினால் இதே முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றை வழங்குவதாகக் கூறினேன்.
நான் ஒரு மரக்கன்றை நட்டேன்.
அப்போது ஒரு விவசாயி ‘’சார் ! நூறு கோடி ரூபாய்க்கான விஷயத்தை நீங்க திட்டமிட்டிருக்கீங்க . ஆரம்பிக்கிறீங்க.’’ என்றார்.
அவர் அந்த கணக்கீட்டை அறிந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. ஒரு வீட்டுக்கு 20 கன்றுகள் என்றால் ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் வருமானம். கிராமத்தில் உள்ள 500 வீடுகளுக்கும் 20 கன்றுகள் வழங்கப்பட்டு அவை நல்ல முறையில் வளரும் என்றால் அந்த கிராமம் 15 ஆண்டுகளில் நூறு கோடி ரூபாய் வருவாய் மதிப்பு கொண்டதாக ஆகும்.
விவசாயிகளிடம் விழிப்புணர்வை உருவாக்குவதே எனது பணி. அவர்கள் நாம் சொல்வதலிருந்தும் சக விவசாயிகள் அனுபவத்தை பார்த்து அறிந்தும் கற்றுக் கொண்டு செயல்படுவார்கள்.
’’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களின் வளர்ச்சிக்கான பொதுப் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் மக்களை இணைக்கிறது. அந்த ஒற்றுமை உருவாவதை உணர்வதே மேலும் மேலும் செயல்களை முன்னெடுப்பதில் ஊக்கம் கொள்ளச் செய்கிறது.
இன்று மரம் நடும் விவசாயியின் நண்பர் ஒருவர் எனக்கு ஃபோன் செய்தார். தனது நான்கு ஏக்கர் நிலத்தில் முழுமையாகத் தேக்கு பயிரிட விரும்புவதாகக் கூறினார். இப்போது அந்த வயலில் நெல்நடவு நடந்துள்ளது. தை மாத அறுவடைக்குப் பின் வயலை வழங்குகிறேன் ; நீங்கள் முன்னின்று தேக்கு நட்டுக் கொடுங்கள் என்று கூறினார். நான் மிகவும் மகிழ்ந்தேன்.
அவரது வயல் ஊரின் நடுப்பகுதியில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்குச் செல்ல அவரது வயலின் வழியாகவே செல்ல வேண்டும். அந்த நிலத்தில் தேக்கு பயிரிடுவது பக்கத்து கிராமத்துக்காரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும்.
வினாக்கள் - விடைகள்
‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து எப்போதும் சில வினாக்கள் எழுப்பப்படுவதுண்டு. சில ஐயங்கள் முன்வைக்கப்படுவதுண்டு. அவற்றுக்கு இந்த தருணத்தில் பதிலளிக்க முயல்கிறேன்.
1. ‘’காவிரி போற்றுதும்’’ ஏன் தேக்கு மரத்தில் பெரும் ஈடுபாடு காட்டுகிறது?
தேக்கு மரம் உலகளாவிய தேவையைக் கொண்ட மரம். நம் நாடு தேக்கு மரத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. தேக்கு உலக சந்தையிலும் உள்ளூர் சந்தையிலும் நல்ல விலை போகக் கூடியது.
ஒரு விவசாயி (பெரிய விவசாயி அல்லது சிறு விவசாயி அல்லது குறு விவசாயி) தனக்கு விவசாயம் மூலம் கணிசமான பொருளியல் பயன் கிடைக்க வேண்டும் என்றே எண்ணுவார். அதுவே இயல்பானது. விவசாயிகளுக்காக செய்யப்படும் பணியில் அவர்கள் பொருளியல் நலனே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
தேக்கு மரத்தை விட அதிகமான பயன் தரக்கூடிய அல்லது அதற்கு சமமான மர வகைகள் இருக்கலாம். ஆனால் ‘’காவிரி போற்றுதும்’’ முழு கிராமத்துக்கும் எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்குவதால் எல்லா கிராம மக்களும் நன்கறிந்த எல்லாரும் ஏற்கும் எந்த விதமான மறுப்பும் கூற இயலாத ஒரு மரக்கன்றை அவர்கள் முன் முன்வைக்க வேண்டியுள்ளதால் இந்த வரையறைகள் அனைத்திலும் உட்படும் தேக்கை ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கிறது.
2. தேக்கினால் நெல் விவசாயம் பாதிக்கப்படாதா?
நாம் ஒரு விவசாயக் குடும்பத்துக்கு 20 கன்றுகள் மட்டுமே வழங்குகிறோம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரே ஒரு மேட்டுப்பாத்தி அமைத்து ஒரு கன்றுக்கும் இன்னொரு கன்றுக்கும் 12 அடி இடைவெளி விட்டு 20 கன்றுகள் மட்டுமே நட்டுக் கொள்ள சொல்கிறோம். இந்த மேட்டுப்பாத்தி ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சதவீதப் பரப்பை மட்டுமே எடுத்துக் கொள்ளும். மீதி 99 சதவீத நிலத்தில் வழக்கமான விவசாயம் செய்து கொள்ளலாம்.
3. பொது இடங்களில் மரம் நடுதல், நீர்நிலைகளைப் பராமரித்தல், கிராமத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற பணிகளை தேக்கு வழங்கும் பணியுடன் இணைந்து மேற்கொள்ளலாமே?
‘’காவிரி போற்றுதும்’’ கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறது. அவர்கள் மரக்கன்றுகளைக் ‘’காவிரி போற்றுதும்’’ மிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். நாம் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறோம். மரக்கன்றுகள் வளர்ச்சி அடைவதைப் பார்க்கிறோம். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது. நல்ல மகிழ்ச்சியான சூழல் உள்ள இடத்தில் இரண்டாம் மூன்றாம் படிநிலைகளை நோக்கிச் செல்வது எளிது.
