Saturday, 15 October 2022

இசைப் பயிற்சி

சங்கீத ஆசிரியர் ஒருவர் கைக்கும் வாய்க்கும் போதுமானதாக இல்லாத சென்னை வாழ்க்கையை போதும் என முடிவு செய்து சொந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஆழமான ஞானமும் நல்ல சாரீரமும் கொண்டவர். ஆயினும் இசையை தன் முழு நேரத் தொழிலாகக் கொள்ள முடியாமல் போகிறது. 

கிராமத்தில் குப்பாண்டி என்ற விவசாயத் தொழிலாளியின் சாரீரம் மிகச் சிறப்பாக இருப்பதை கேட்க நேரிடுகிறது. கேள்வி ஞானம் மூலம் இசையை அறிந்தவர் குப்பாண்டி. அவருக்கு முறைப்படியான சங்கீதப் பயிற்சி அளிக்க விரும்பி தனது வீட்டுக்கு வரச் சொல்கிறார் மல்லிகை. 

மைக்கேல் மகனான குப்பாண்டியிடம் நீ சங்கீதம் கற்றுக் கொண்டால் ஏசுநாதர் முன் ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைக்கு செல்லும் போது கதவுக்கு வெளியே நிற்காமல் உள்ளே சென்று பாடலாம் என்று சொல்கிறார். குப்பாண்டி மதம் மாறியிருந்தாலும் உள்ளே - வெளியே என்னும் பாரபட்சம் அங்கும் நிலவுகிறது என கோடிட்டுக் காட்டுகிறார் தி.ஜா. 

சங்கீத ஆசிரியர் மல்லிகையிடம் குப்பாண்டிக்கு எங்கே வைத்து பயிற்சி தரப் போகிறீர்கள் என ஊரே கேட்கிறது. அவரது இந்த முயற்சியை ஏளனம் செய்து அவரை சோர்வுக்குள்ளாக்குகிறது. தனது வீட்டுத் தோட்டத்தில் நாற்பது அடி தள்ளி குப்பாண்டியை அமரச் செய்து முதல் நாள் பயிற்சியைத் துவக்குகிறார். 

அந்த நாற்பது அடி தூரத்தை குப்பாண்டி எத்தனை சந்தர்ப்பங்களில் எதிர்கொண்டிருப்பார். அவர் சர்ச்சில் ஏசு நாதரிடமிருந்து நாற்பது அடி தொலைவில் நிற்க வேண்டும். கோயிலிலும் அவ்வாறே. சங்கீதப் பயிற்சியும் அதே தூரத்தில். 

இசையின் துவக்கம் என்பது நுட்பமான கூரான செவி சார்ந்த நுண்ணுணர்விலிருந்து நிகழ்கிறது. குப்பாண்டிக்கு அது வாய்க்கப் பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட தூரத்தில் ஒரு மனிதரை நிறுத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் அற்ப புத்தியால் இயற்கை ஒரு மனிதனுக்கு அளிக்கும் கொடையை மேன்மையை ஒன்றும் செய்திட முடியாது என மல்லிகை உணர்கிறார்.இருப்பினும் தானும் மனிதனை மனிதன் தள்ளி வைக்கும் மனோபாவம் முழுமையாக நீங்காத இடத்தில் இருப்பதை உணர்ந்து கொள்கிறார்.