Friday 18 November 2022

உலகம் யாவையும்

கம்பன் தன் காவியத்தை ‘’உலகம் யாவையும்’’ எனத் தொடங்குகிறான். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்குமான நலன் என்பதே இந்திய மரபின் சாரமாக இருக்கிறது. மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தனித்திறன் மனிதனுக்கு உண்டு. மனித அகம் விரிவாகும் தன்மை கொண்டது. பௌதிக எல்லைகளுக்குள் அடங்காமல் ஒட்டு மொத்த உலகையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சாத்தியம் கொண்டது. உலகின் எல்லா மண்ணிலிருந்தும் எழுந்த ஞானிகள் மனிதகுலத்தை நோக்கி காலம் காலமாக அகவிரிவு கொள்ளுமாறு கூறிவருகிறார்கள்.  மானுட விடுதலைக்கான மார்க்கங்களை வகுத்தளித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், அஹிம்சையை மேலான விழுமியம் என நிலைபெறச் செய்த பகவான் மகாவீரர், மெய்ஞானமே மானுடத்தின் இறுதி இலக்கு எனக் காட்டிய பகவான் புத்தர் ஆகிய மூன்று யோகியர் அருளால் ஞானம் நிலைபெற்ற மண் நம் தேசம். 

ஒரு பொதுப்பணியாளனாக நான் அறிந்த ஒரு விஷயம் ஒன்று உண்டு. நம் மரபின் காரணமாக நம் சூழலில் அனைவருக்குமே ஏதேனும் ஒரு பொதுப்பணியில் எவ்வகையிலாவது பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியமாக இருக்கும். உதாரணத்துக்கு ஒருவர் அதிகளவில் மரம் நடுதலில் ஆர்வம் காட்டுவார். இன்னொருவருக்கு பொருள் வசதி குறைவாக இருப்பவர்களின் வீட்டுக் குழந்தைகளின் கல்விக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்பது முக்கிய விருப்பமாக இருக்கும் . சிலருக்கு கிராமத்து இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தொழிற்பயிற்சி அளிப்பது நல்ல செயல் என்ற அபிப்ராயம் இருக்கும்.  சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என ஒருவர் நினைப்பார். சிறுசேமிப்பின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் இருப்பார். கிராமத்துக் குழந்தைகள் உடல் வலிமை பெற பல்வேறு விதமான விளையாட்டு சாதனங்கள் அவர்களுக்கு வழங்கப் பெற வேண்டும் என்பது ஒருவரின் முயற்சியாக இருக்கும். குடிக்கு எதிரான பரப்புரையை கிராம மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று சிலர் எண்ணுவார்கள். யோகப்பயிற்சிகள் குறித்த அறிமுகம் அதிக அளவில் கிராம மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது சிலரின் உத்தேசமாக இருக்கும். இது போல இன்னும் ஐம்பது விஷயங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொருவரும் தான் முக்கியம் என நினைக்கும் செயலை ஆற்ற வேண்டும் என்று விரும்புவார்கள். அது மிகவும் இயல்பானது. 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தில் மேலேகுறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களிலும் மேலும் சாத்தியமான விஷயங்களிலும் பணி புரிய விரும்புகிறது. கிராமத்தில் எந்த விதமான செயலை முன்னெடுக்கவும் கிராம மக்களின் பங்கேற்பு அவசியம். மக்கள் ஏற்பும் மக்கள் பங்கேற்பும் உள்ள செயல் மட்டுமே நிலை பெறும். மக்கள் பங்களிப்பு எந்த அளவு முக்கியமோ அதே அளவு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்முறையை ஏற்றுக் கொண்டு அதனுடன் உணர்வுபூர்வமாக மனப்பூர்வமாக செயல்களில் பங்கெடுத்துக் கொள்பவர்களும் முக்கியம். இரண்டு செயல்பாடுகளும் இணைக் கோடுகளாக பயணிக்க வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. நமது நல்ல நோக்கங்கள் கிராம மக்களைச் சென்றடைந்துள்ளன. நாம் மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 

சாராம்சம் என்பது சாராம்சத்துக்கான தேடலே என்கிறார் ஆதி சங்கரர். 

’’உலகம் ஒரு குடும்பம்’’ என்கிறது இந்திய மரபு. சாதி, மதம், மொழி ஆகிய பிரிவினைகளுக்கு அப்பால் மானுடத்தை ஒற்றைக் குலமென எண்ணுகிறது இந்திய மரபு. செயலை விடுதலைக்கான பாதைகளில் ஒன்றாக வகுத்திருக்கிறது இந்திய மரபு. அந்த மரபின் தொடர்ச்சியாக கிராமம் என்ற நுண் அளவில் ‘’சிறியதே அழகானது’’ என்ற அடிப்படையில் தன் செயல்களைக் கட்டமைத்துக் கொள்கிறது ‘’காவிரி போற்றுதும்’’. 

ஒரு நுண் அமைப்புக்குரிய சௌகர்யங்கள் ‘’காவிரி போற்றுதும்’’க்கு உண்டு. ஒரு நுண் அமைப்புக்குரிய எல்லைகளையும் ‘’காவிரி போற்றுதும்’’ அறியும். 

ஒன்று கூடி சிந்தியுங்கள்
சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள் 
உங்கள் மனம் ஒன்றாகட்டும்

என்கிறது உபநிடதம். 

‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளராக நாம் ஆற்ற வேண்டிய செயல்கள் குறித்து சிந்திக்க விவாதிக்க செயல்புரிய ஒருங்கிணைய ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். 

ulagelam(at)gmail(dot)com