Friday 18 November 2022

நன்நம்பிக்கை

ஊருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி தனது 3 ஏக்கர் நெல்வயலில் முழுப் பரப்பளவிலும் மேட்டுப்பாத்தி எடுத்து தேக்கு மரம் பயிரிட முடிவு செய்தார். அவர் அந்த முடிவை எடுத்ததில் ‘’காவிரி போற்றுதும்’’ கணிசமான பங்கு வகித்தது. ஐ.டி நிறுவனத்தில் பணி புரிபவரான அவரது பூர்வீக நிலம் இது. அவருடைய தந்தை இத்தனை ஆண்டுகள் விவசாயம் பார்த்து வந்தார். நண்பர் எடுத்த முடிவை பலரும் பலவிதமாக விமர்சித்து அவருடைய மன உறுதியைக் குலைக்க முயன்றனர். எனினும் மரப்பயிருக்கு மாறுவது என்பதில் நண்பர் உறுதியாக இருந்தார். 

தமிழ்நாட்டில் ஒரு பொதுவான பழக்கம் உள்ளது. அதாவது இங்கே எல்லாருமே விவசாயிக்காக இரங்குபவர்களைப் போல் பேசுவார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு விவசாயிகள் குறித்து எந்த அக்கறையும் இருக்காது. விவசாயி பொருளியல் நலன் அடையும் வண்ணமான தொழிலாக விவசாயம் இருந்தால் மட்டுமே விவசாயியின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். ஒரு சமூகம் பொருளியல் அதிகாரம் அடைந்தால் மட்டுமே உண்மையான சமூக மாற்றமும் நிகழும். பொருளியல் அதிகாரத்துடன் ஒப்பிடுகையில் அரசியல் அதிகாரம் என்பது எள்ளளவே. ஏழை எளிய மக்களின் பொருளியல் நலனுக்காக சிந்தித்து செயல்படுபவர்களே உண்மையில் சமூக மாற்றத்துக்காக சமூக நீதிக்காக செயல்படுபவர்கள். 

இந்தியாவில் எந்த மனிதனும் தனது குழந்தைகளின் நலனுக்காகவே யோசிக்கிறான் ; செயல்படுகிறான். விவசாயியும் அவ்வாறே. தனக்கும் தன் குடும்பத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே அவனது விருப்பம். எல்லாருடைய விருப்பத்தையும் போல. அதை அடைவதற்கு முழு உரிமை அவனுக்கு இருக்கிறது. அதை அடைவதற்கு முழுமையான சாத்தியமும் அவனுக்கு இருக்கிறது. 

நல்ல அளவில் வருமானம் கிடைக்கக்கூடிய ஒப்பீட்டளவில் உற்பத்தி குறைவாக உள்ள பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானம் இதனால் இயல்பாக உயரும். அதற்கான சாத்தியங்களை தொடர்ந்து விவசாயிகளிடம் முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். 

தென் நிலத்திலிருந்து காஷ்மீரம் வரை இந்தியா வெவ்வேறு விதமான நிலவியல் அமைப்புகளை விவசாய முறைகளைக் கொண்ட நாடு. எனினும் எந்த மண்ணில் எல்லாம் விவசாயிகள் பொருளியல் பலன் பெற முடியுமோ அந்த பிரதேசங்களில் எல்லாம் பொருளியல் பலன் கிடைக்கும் பயிர்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இந்தியா போன்ற பெரிய நிலத்தில் ஒரு சதவீத விவசாய நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டால் கூட அது லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு பலன் அளிக்கும். அந்த முயற்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

நான் இந்த துறையில் நிபுணன் அல்ல. என்னுடைய சொந்த ஆர்வத்தால் விவசாயிகளுக்கு தேக்கு மரப்பயிர் என்னும் சாத்தியத்தை சொற்களால் அவர்கள் மனத்தில் விதைக்கிறேன். என் பணி அவ்வளவே. அவ்வளவு மட்டுமே. அவர்கள் நிலத்தை மரப்பயிருக்குத் தயார் செய்யும் போது மரக்கன்றுகள் நடும் போது உடனிருக்கிறேன். அதன் வளர்ச்சியை அவர்களுடன் சேர்ந்து கண்காணிக்கிறேன். 

மரப்பயிருக்கு செலவு குறைவு என்பதால் தான் மரப்பயிர்களை பரிந்துரை செய்கிறேன். காவிரி டெல்டாவில் தேக்கு நன்றாக வளர்கிறது. Seeing is Believing என்பதற்கு ஏற்ப உலக அளவில் தேக்கின் தேவை அதிகரித்துக் கொண்டே போவதையும் இந்தியா தேக்கை இறக்குமதி செய்வதையும் அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறேன். தேக்கு வளர இரசாயன உரம் தேவையில்லை. எனவே மக்கிய சாண எருவைப் பயன்படுத்துகிறார்கள். அது செலவு குறைந்தது. 

நண்பர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். கட்டுமானம் எனது தொழில் என்பதால் எனது பொறியியல் புரிதலைப் பயன்படுத்தி மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டது. நான் எண்ணியது 85 % அளவில் அந்த வயலில் செயலாக்கப்பட்டது. அந்த அளவு துல்லியம் போதும் என நண்பரிடம் ஒரு கட்டத்தில் கூறிவிட்டேன். மீதிப் பகுதி அவருக்கு கூடுதல் செலவு வைக்கும் என்பதால் இது போதும் என்று சொன்னேன்.

நண்பர் வயலின் ஒளிப்படங்கள் கீழே உள்ளன. இந்த மரக்கன்றுகள் ஜூன் மூன்றாவது வாரத்தில் நடப்பட்டன, நான்கரை மாதம் ஆகியுள்ளது. ஒவ்வொரு கன்றும் சராசரியாக நான்கடி உயரம் வளர்ந்துள்ளன. பல கன்றுகள் ஆறடி உயரத்தைத் தாண்டி விட்டன. 
பூமியிலிருந்து இரண்டு அடி உயரம் எடுக்கப்பட்ட மேட்டுப்பாத்தியில் ஒரு தேக்கு மரக்கன்றுக்கும் இன்னொரு தேக்கு மரக்கன்றுக்கும் 12 அடி இடைவெளி விட்டு நடப்பட்டுள்ள தேக்கு மரக்கன்றுகள். 
பல கன்றுகள் ஒரு ஆள் உயரம் வளர்ந்துள்ளன. ஒரு மனிதர் பக்கத்தில் நிற்கும் ஒளிப்படத்தின் மூலம் கன்றுகளின் உயரத்தை எளிதில் யூகித்துக் கொள்ளலாம். 

தடிமனான தண்டுப் பகுதியும் அகன்ற இலைகளும் கொண்டு வளர்ந்திருக்கும் மரம். இந்த மரத்தின் உயரம் ஆறு அடி. 

இந்த வயலைக் கண்டபின் ஒரு விவசாயி வெகுநாட்கள் தரிசாக இருந்த தனது நிலத்தில் 600 தேக்கு மரங்கள் பயிரிட்டுள்ளார். வாரத்துக்கு இரண்டு மூன்று விவசாயிகள் நண்பரின் வயலுக்கு வந்து விபரம் கேட்டுச் செல்கிறார்கள்.