Wednesday 16 November 2022

துலா ஸ்நானம்

ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் மூழ்கி எழுவது  என்பது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும்.  அதிலும் மயிலாடுதுறையில் நதி நீராடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது. 

நேற்று இரவு 11 மணி வரை மடிக்கணினியில் எழுதிக் கொண்டிருந்தேன். அதன் பின் உறங்கச் சென்றேன். காலை 4.30 அளவில் விழிப்பு வந்தது. விழித்துப் பார்த்தால் கடலூர் சீனுவின் குறுஞ்செய்தி. நள்ளிரவு ஒரு மணிக்கு அனுப்பியிருக்கிறார். ஜெ தளத்தில் 14 மரங்கள் விவகாரம் வெளியாகி உள்ளது என. 5.15 அளவில் ஒரு விவசாயி குறுஞ்செய்தி அனுப்பினார். தனது வயலில் தேக்கு மரக் கன்றுகளுக்கு முட்டு கொடுக்க சவுக்கு கழி வாங்க உடனிருந்து உதவ முடியுமா என்று கேட்டிருந்தார். அவரை 6.15 வீட்டுக்கு வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். இன்று காலை 9 மணி அளவில் மளிகை மொத்த வியாபாரி கடைக்கு வந்து மக்களுக்கு வழங்கக் கூடிய மளிகைப் பொருட்களை பெற்றுச் செல்லுமாறு கூறினார். அனைத்தும் பொட்டலடமிடப்பட்டு தயாராக உள்ளன என இரவு கடை அடைக்கும் முன் தொடர்பு கொண்டு கூறியிருந்தார். விவசாயி வருவதற்கு முன் நான் குளித்துத் தயாராக இருந்தேன். இன்று காலையில் எழுந்ததும் துலா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். விவசாயியின் குறுஞ்செய்தியைக் கண்டவுடன் அதில் மாற்றம் செய்து கொண்டேன். விவசாயிக்கு வயல்வேலை பல இருக்கும். ஒருநாள் என்பது அவர்களுக்கு மிகப் பெரிது. எப்போதுமே எனது பணியில் விவசாயிகளுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பேன். எனவே அவருடன் சென்று விட்டேன். சவுக்கு கழி இருக்கும் இடத்துக்கு பயணித்துச் சென்று கழி ஆர்டர் செய்தோம். வீடு திரும்ப 10 மணி ஆகி விட்டது. அவசரமாக மூன்று இட்லியை சாப்பிட்டு விட்டு உடன் மளிகை மொத்த வியாபாரக் கடைக்குச் சென்றேன். துலா கட்டத்தில் காவிரி ஸ்நானம் செய்ய மக்கள் பெருங்கூட்டமாய் திரண்டிருந்தனர். துலா கட்டத்தை ஒட்டிய எல்லா தெருக்களிலும் ஒரே கூட்டம். காரை நிறுத்த இடமில்லை. இரண்டு தெரு தள்ளி காரை நிறுத்தி விட்டு கடைக்கு வந்தேன். அனைத்தும் தயாராயிருந்தன. கார் எங்கே இருக்கிறது எனக் கேட்டுக் கொண்டே எட்டு பண்டல் மளிகைப் பொருட்களை டிவிஸ்50ல் கொண்டு வந்து கொடுத்து மூன்று தடவையாகக் கொடுத்து விட்டு போனார்கள். 

செயல் புரியும் கிராமத்தைச் சென்றடைந்தேன். அங்கே இருந்த மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டேன். என் செயல்களில் உடனிருக்கும் அந்த கிராமத்தில் வசிக்கும் கிராமத்துவாசி ஒருவரும் என்னுடன் வந்திருந்தார். முதல் முறையாக அந்த கிராமத்தில் அந்த மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுத்தான் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு பரப்புரையைத் துவங்கினோம். கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னோம். ஐயங்கள் ஏதும் இருப்பின் என்னிடம் கேட்டார்கள். நான் விளக்கம் அளித்த பின் தெளிவடைந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அந்த மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்  சதவீதத்தில் முதல் இடம் பெற்றது. அந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. அரசு மருத்துவமனை கிடையாது. ஆனால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ள கிராமங்கள், அரசு மருத்துவமனை உள்ள கிராமங்கள் சாதிக்காததை அந்த கிராமம் சாதித்தது. 

பாரதி, 

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்

அதுவும் அற்றோர் வாய்ச்சொல் தாரீர் 

என்பார். அது போல நாம் அவர்களுடன் ஒரு உரையாடலை மட்டுமே மேற்கொண்டோம்.  அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன் பின் அந்த கிராமத்தில் பூமரக்கன்றுகள் நடப்பட்டன. மழைக்காலத்தின் போது ஆறு நாட்களுக்கு அங்கே உள்ள குடிசைப்புற மக்களுக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட்டது.  இன்னும் பல செயல்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த நினைவுகள் எழுந்தன. அந்த கிராம மக்களுடனான உறவு என்பது மிகவும் உணர்வுபூர்வமானது. அவர்கள் என் மேல் வைத்திருக்கும் பிரியம் என்பது அளவற்றது. அவர்களிடம் பொருட்செல்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் பிரியத்துக்குரியவர்களிடம் வழங்குவதற்கு எல்லையற்ற அன்புச் செல்வம் இருக்கிறது. பொருள் அழிவுக்குட்பட்டது. அன்பு எல்லையற்றது. எப்போதும் அழியாதது. 

ஒவ்வொரு வீடாக மளிகைப் பொருட்களை வழங்கினோம். சென்ற ஆண்டு உணவளித்தது மக்கள் நினைவில் இருந்தது. என்னுடைய நலனை விசாரித்தார்கள். கடந்த சில நாட்களாக இருந்த சஞ்சலம் அவர்களுடன் இருந்த போது நீங்கியது. குடிசைப் பகுதியில் ஒரு பெண்மணி என்னிடம் இங்குள்ள குழந்தைகளின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். குடிசையில் வசிக்கும் ஒருவர் விவசாயப் பணிகளில் கூலி பெறும் ஒருவர் தன்னுடைய குழந்தை கல்வியில் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவது மகத்தான ஒன்று. கல்வியை வாழ்க்கையில் மிக உயர்ந்ததாக எண்ணும் இந்தியப் பண்பாட்டின் விளைவே அந்தப் பெண்மணியின் விருப்பம். என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று உறுதி கொடுத்தேன். 

‘’காவிரி போற்றுதும்’’ ஓர் நுண் அமைப்பு. பெரிதினும் பெரிது கேள் என்கிறான் பாரதி. நாம் மகத்தானவற்றுக்கே எப்போதும் முயல்வோம் என எண்ணினேன். எல்லா வீடுகளுக்கும் பொருட்களை அளித்த பின் வீடு திரும்பினேன். 

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு காவிரிக்குச் சென்றேன். வீட்டிலிருந்து 150 மீட்டர் தூரத்தில் காவிரி. காவிரி படித்துறையில் ஒரு மூதாட்டி அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து காவிரியை வணங்கிக் கொண்டிருந்தார். அவர் சென்றதும் காவிரியில் பலமுறை மூழ்கி எழுந்தேன். நீர்மை வலிகளை நீக்கியது. நீர்மை இதம் அளித்தது. நீர்மை நம்பிக்கைகளை மேலும் வலுவாக்கியது. 

காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும் ! காவிரி போற்றுதும்!