Tuesday, 15 November 2022

முதல் உதவி

இன்று வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் நண்பர்கள் அழைத்து விபரம் கேட்டுக் கொண்டிருந்தனர். 14 மரங்கள் வெட்டப்பட்டதும் வெட்டப்பட்ட விதமும் அவர்களை மிகவும் துயருறச் செய்தது என்பதை வருத்தத்துடன் கூறினர்.  அந்த வீதியில் 100 மரங்கள் நடப்பட்டுள்ளன என்பதையும் அவை நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன என்பதையும் பதிவில் குறிப்பிட்டிருப்பதை நினைவு படுத்தினேன். இருப்பினும் 14 மரங்கள் வெட்டப்பட்டது அனைவரையும் மிகவும் வருந்தச் செய்து விட்டது. என்னைக் குறித்த அவர்கள் அக்கறையை வெளிப்படுத்தினர். அவர்கள் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டேன். நான் நலமாக இருக்கிறேன் என்பதையும் நண்பர்களின் பிரியத்தாலும் அன்பாலும் அக்கறையாலும் மேலும் வலிமை பெற்றுள்ளேன் என்பதையும் அவர்களிடம் கூறினேன். 

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்க மளிகை மொத்த வியாபாரக் கடை ஒன்றில் தேவையான பொருட்களின் பட்டியலை வழங்கியிருந்தேன். அவர்கள்  நாளை காலை பொருட்களை வழங்குவதாகக் கூறினார்கள். சனிக்கிழமையன்று பட்டியலைக் கொடுத்தேன். ஞாயிறு அவர்கள் கடை விடுமுறை. நேற்று எனக்கு சில வேலைகள் இருந்தன. இன்று நான் தயாராயிருந்தேன் ; அவர்களுக்குப் பணி இருந்தது. நாளை வேலை நிகழ்ந்து விடும். 

இன்று உள்ளூர் நண்பர் ஒருவர் மளிகைப் பொருட்கள் வழங்குவதில் தானும் ஒரு  சிறு பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவித்தார். அவரிடம் விவசாயிகளுக்கு தேக்கு மரக்கன்றுகள் வழங்கும் போது அவரிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறினேன். அவர் அளிக்கும் மரக்கன்றுகள் எந்த விவசாயியின் நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பதை அவரிடம் கூறிவிட்டால் அவரும் அதன் வளர்ச்சியைக் கண்காணிப்பார் ; துணை நிற்பார். 

இன்று நான் ஒரு முடிவு செய்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கு உதவ பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர். மரக்கன்றுகள் வழங்க பலரும் பொருள் அளிக்க விருப்பம் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் மீது விவசாயம் மீதும் மதிப்பு கொண்டு அளிக்கப்படும் தினையளவு உதவியும் பனையளவு பெரியது. எனவே உடனடியாக ஒரு  நர்சரி அமைத்து விடலாம் என இருக்கிறேன். அதற்கான நேரம் உருவாகி விட்டது. நாமே நமக்குத் தேவையான மரக்கன்றுகளைத் தயாரித்து விடலாம்.  ஒரு மரக்கன்றின் விலை சராசரியாக ரூ. 10 என்றால் ஒரு விதையின் விலை சராசரியாக ரூ. 1 என்ற அளவில் இருக்கும். உதாரணத்துக்கு  ஒருவர் ரூ. 100 பொருள் உதவி செய்கிறார் என்றால் மரக்கன்றாக வாங்கினால் 10 மரக்கன்றுகள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் விதையாக வாங்கினால் நம்மால் அவர் அளிக்கும் ரூ. 100 மதிப்பில் 100 மரக்கன்றுகளை உருவாக்க முடியும். 

ஒருவர் ரூ. 10, 000 வழங்குகிறார் என்றால் அவர் அளித்த தொகையால் 10,000 மரங்கள் உருவாகியிருக்கிறது என்பதைக் காணும் போது அவருக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும். அத்தகைய மகிழ்ச்சியை ‘’காவிரி போற்றுதும்’’ கொடையளிப்பவர்களுக்கு வழங்க விரும்புகிறது. 

இன்று இரவு 9 மணி அளவில் வெளிமாநில நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மெயின் ரோடில் நின்று அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து 100 அடி தொலைவில் ஒருவர் வேகத்தடையில் வண்டியை ஏற்றும் போது தடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்து விட்டார். நான் ஓடிச் சென்று அவரைப் பார்த்தேன். அவர் கீழே கிடந்தார். அவர் மீது வண்டி கிடந்தது. இதனைப் பார்த்த சிலரின் உதவியுடன் வண்டியை தூக்கி அதன் அடியில் இருந்த அவரை எழுந்து அமரச் செய்தோம். கை காலில் நல்ல அடி. கடுமையான ரத்தக் காயம். நான் வீட்டுக்கு வந்து என்னுடைய மோட்டார்சைக்கிளை எடுத்து வந்து அவரை அழைத்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடனே சென்றேன். மருத்துவர் காயத்துக்கு ‘’டிரஸ்ஸிங்’’ செய்யச் சொன்னார், டிரஸ்ஸிங் பிரிவுக்கு அழைத்துச் சென்றேன். அங்கே டிரஸ்ஸிங் செய்து தையல் போட்டனர். கட்டு கட்டி விட்டனர். அவரை அழைத்துக் கொண்டு  வந்து அவருடைய டூ வீலர் இருந்த விபத்து நடந்த இடத்துக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டு விட்டு கவனமாக வீடு போய் சேருமாறு அவரிடம் சொன்னேன். புறப்படும் போது அவர் என்னை வாழ்த்தி விட்டு சென்றார்.