Sunday 11 December 2022

வளர்ச்சி

செயல் புரியும் கிராமத்தில் விஜயதசமி அன்று தேக்கு மரக்கன்றுகள் நட்ட வயலுக்கு இன்று காலை சென்றிருந்தேன். ‘’மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்’’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது மிகவும் உண்மை. அனுபவபூர்வமானது. ஒரு மரத்தினை நடுதல் என்பதற்கு ஒரு மனிதனின் எண்ணமும் மனமும் முயற்சியும் தேவை. பறவைகளின் எச்சம் மூலம் மரத்தின் விதைகள் பரவிக் கூட மரங்கள் மண்ணில் முளைத்து வேர்விட்டு நிலைத்து விருட்சமாகின்றன. அவ்வாறு உருவாகும் மரங்களின் எண்ணிக்கையும் கணிசமானது. மரத்தினை நடுவதற்கு மரம் தான் மனிதனுக்கு வாய்ப்பு அளிக்கிறது. மரம் நடுதல் என்பது ஒரு பேறு. எந்த மனிதனும் ஒரு மரத்தை நடுவானாயின் அது எவ்விதம் வளர்கிறது என்பதை ஓர் ஆர்வத்தின் காரணமாகவேனும் கவனிப்பான். அது முழுமையாக வளர்வதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதால் மரத்தினை நட்ட சில மாதங்களுக்காகவாவது மரத்தினை நட்டவன் தண்ணீர் ஊற்றுவான். ஒரு மரக்கன்று செடியாக இருக்கும் போது மட்டுமே நம்மால் சிறு சிறு மாற்றங்களைக் கூட கவனிக்க முடியும். ஆறடி உயரத்துக்கு மேல் வளர்ந்து விட்டால் அதனை நம் மனம் ஒரு மரமாகவே கருதத் துவங்கி விடும். 

இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது கிராமத்தில் உள்ள தேக்கு மரக் கன்றுகளை பார்ப்பதற்கு சென்று வருவேன். அந்த வயலின் விவசாயி தனது நிலத்துக்கு தினமும் காலை மதியம் மாலை என மூன்று முறை வருவார். நான் மூன்று நாட்களுக்கு ஒருமுறை செல்வேன். இங்கே இப்போது சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் கன்று மேலும் வளர்ச்சி பெற்றிருக்கும் என நினைத்தேன். 

தேக்கின் இயல்பு என்பது அது முதலில் வேர் பிடிப்பதற்கு கணிசமான நாட்களை எடுத்துக் கொள்ளும். வேர் பிடிப்பதும் வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்றாலும் செடி எப்போது உயர மேலெழும்பும் என்பதையே நம் மனம் எதிர்நோக்கும். அந்த கன்று தனது தன்மையைப் பொறுத்து வேர் பிடித்து விட்டதாக எண்ணத் தொடங்கிய பின் சட்டென மேலெழத் தொடங்கும். வேர் பிடித்த பின் அதன் வளர்ச்சி என்பது சர சர என நிகழும். 

மரங்களை நட்ட திடலுக்கு கிழக்கிலும் மேற்கிலும் உள்ள விவசாயிகள் தங்கள் திடலில் இருந்த புதர்களை நீக்கி வைத்திருப்பதைக் கண்டேன். மூன்று நாட்கள் முன்னர் சென்ற போது அவ்வாறான பணிகள் நிகழ்ந்திருக்கவில்லை. இடைப்பட்ட நாட்களில் தான் புதர்களை அகற்றியிருக்கிறார்கள். அண்டை நிலத்தில் வளரும் தேக்கு அவர்களுக்கு தாங்களும் தேக்கு பயிரிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியிருக்கக் கூடும். 

பெரிய இலைத்தொகுதிகளுடன் கணிசமான உய்ரம் வளர்ந்துள்ள தேக்கு மரக் கன்றுகளைக் கண்டது மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.