Sunday 25 December 2022

மக்களும் அதிகாரமும் ஊழலும்

பல ஆண்டுகளுக்கு முன்பு , தினமணி கதிரில் இந்த விஷயத்தை வாசித்தேன். அமெரிக்க அரசு அலுவலகங்களின் இயங்குமுறை குறித்து அமெரிக்கா சென்று இந்தியா திரும்பிய ஒருவர் எழுதியிருந்த குறிப்பு அது. 

அதாவது, அமெரிக்க அரசு அலுவலகங்களுக்கு ஒருவர் சென்றால் அவரிடம் அந்த அலுவலக ஊழியர் அல்லது அதிகாரி Good Morning என்று முகமன் கூறி What can i do for you? என்று கேட்பாராம். எந்த விஷயத்துக்காக வந்தோம் என்பதைத் தெரிவித்தால் அந்த பணி அவரால் செய்து தரக் கூடியது என்றால் Yes , Please என்று கூறி அதனைச் செய்யத் துவங்குவாராம். அந்த பணி அவரது அதிகார எல்லைக்குள் இல்லையெனில் Sorry என்று வருத்தம் தெரிவித்து விட்டு அவர் அணுக வேண்டிய அலுவலகத்தையும் அங்கே சந்திக்க வேண்டிய அதிகாரியையும் குறிப்பிட்டு அனுப்பி வைப்பாராம்.  

தமிழ்நாட்டில் ஒரு சாமானியன் அரசு அலுவலகம் நோக்கி செல்வது என்பது அதிகமாக மின்சாரக் கட்டணம் செலுத்த, மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்க, இரு சக்கர வாகனம் பதிவு செய்ய, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, பட்டா பெயர் மாற்றம் செய்ய என இவ்வகையான காரணங்களுக்காகத்தான். இந்த காரணங்களுக்காக அரசு அலுவலகம் செல்லும் சாமானியர்கள் அந்த அலுவலகங்களில் நடத்தப்படும் விதம் என்பது மிகக் கொடுமையானது. சாமானியர்கள் தங்கள் சுயமரியாதை இழுக்குக்குள்ளாகிறது என எண்ணும் விதமாக மேற்படி அலுவலகங்களில் நடந்து கொள்வார்கள். 

பத்து முறை அந்த அலுவலகத்துக்கு மீண்டும் மீண்டும் திரும்பி வரும் வண்ணம் இழுத்தடிப்பார்கள். பத்து முறை வந்தாலும் என்ன பணியை உத்தேசித்து ஒருவர் வந்திருக்கிறாரோ அதற்கான விண்ணப்பத்தை வழங்க மாட்டார்கள். வந்தவர் அலுத்துப் போய் இந்த பணியை முடித்துக் கொடுக்க எவ்வளவு தொகை தேவையோ சொல்லுங்கள் ; அதனைக் கொடுத்து விடுகிறேன் என சொல்ல வைப்பார்கள். அந்த பணத்தையும் இழுத்தடித்தே வாங்குவார்கள். அதன் பின்னும் தாமதமாகவே பணியை முடிப்பார்கள். 

ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டால் அதில் இருக்கும் பொதுமக்களுக்கு உதவும் விஷயங்கள் அனைத்திலும் ஏதேனும் இடர்களை உருவாக்கி புதிய நடைமுறையை மேலும் சிக்கலாக்கி விடுவார்கள். 

சொத்து வரி பெயர் மாற்றம் என்பது ஒரு சாதாரண நடைமுறை. ஒருவர் ஒரு சொத்தை வாங்குகிறார் என்றால் அந்த சொத்துக்கான நகராட்சி சொத்து வரியை தனது பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கானது. பழைய உரிமையாளர் கடைசியாக செலுத்திய சொத்து வரி ரசீதின் நகல், சொத்து பரிமாற்றத்தின் பத்திரப் பதிவு ஆவணம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் அவற்றைப் பரிசீலித்து புதிய உரிமையாளர் பெயருக்கு சொத்து வரியை மாற்றம் செய்ய்யும் நடைமுறை. அதிகபட்சம் மூன்று நாட்களில் செய்ய முடியும். ஆனால் இந்த எளிய நடைமுறை செய்து முடிக்கப்பட 90 நாட்கள் ஆகிறது. ரூ. 5000 வரை லஞ்சம் பெறப்படுகிறது. 

முன்னர் பழைய உரிமையாளர் பெயரில் சொத்து வரி இருந்தால் கூட சொத்து வரி நிகழ்காலம் வரை செலுத்தப்பட்டிருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பார்கள். சொத்து வரி பெயர் மாற்றத்தை விருப்பம் இருப்பவர்கள் மட்டும் செய்து கொள்வார்கள். இப்போது புதிதாக அதில் கட்டட அனுமதி வாங்க வேண்டும் எனில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்து ஆக வேண்டும் என்பது கட்டாயம். எனவே கட்டட அனுமதிக்காக சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் லஞ்சத் தொகையும் ஐந்து மடங்கு கூடி விட்டது. 

பத்திரப்பதிவு நிகழ்ந்து 15 நாட்களுக்குள் தானாகவே பட்டா மாற்றம் நிகழ்ந்து விடும் என பத்திரப் பதிவுத் துறை இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் வருவாய்த்துறையினர் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பட்டா மாற்றம் செய்து கொடுக்க ரூ.5000 வரை கேட்கிறார்கள். 

தமிழ்நாட்டில் ஒரு சொத்தாவது வாங்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் சாமானியனின் வாழ்நாள் கனவு. கூடிக் கொண்டே போகும் நிலத்தின் விலையை அவன் குடும்பத்தினரின் அணிகலன்களை அடமானம் வைத்து தான் அதுநாள் வரை சேமித்த அத்தனை சேமிப்பையும் முன்வைத்து கடன் வாங்கி கொடுத்திருப்பான். இனி கையில் பெரிதாக ஏதும் இல்லை என்னும் நிலையில் இருக்கும் ஒரு சாமானியனிடம் அவனுக்கு சாதாரணமாக நிகழ வேண்டிய சொத்து வரி பெயர் மாற்றத்துக்கும் பட்டா மாற்றத்துக்கும் ரூ. 11,000 லஞ்சமாகக் கேட்பது என்பது மிகக் கொடுமையானது.