Sunday 25 December 2022

பனிநீர்

தமிழில் இயங்கக்கூடிய படைப்பாளிகள் இதனை உணர்ந்திருப்பார்கள். தமிழ் உயர்தனிச்செம்மொழி. 2500 ஆண்டுகளாக இந்த மொழியில் இலக்கியம் படைக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளாக அது வாசிப்பிலும் இருந்து வருகிறது. இன்று எழுதும் ஒரு எழுத்தாளனுக்கு சொற்களை அளித்தவர்கள் உலக இலக்கியப் பரப்பில் பேராசான்களாக இருக்கும் தமிழ் மூதாதைப் படைப்பாளிகள்.  இது ஒருபுறம். இன்னொரு புறம் இன்றைய உலகில் வாசிப்பு மிக மிகக் குறைவாக இருக்கும் சமூகங்களில் தமிழ்ச்சமூகமும் ஒன்று என்பது. தமிழ் மக்களின் வாசிப்பின்மை என்பது தமிழ்ச்சமூகத்தை சிந்திக்கும் திறன் இன்மை என்னும் இடத்துக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. அது உருவாக்கும் தடைகளை இலக்கியப் பரப்பில் இயங்குபவர்கள் நாளும் உணர்கிறார்கள். 

இன்று ஒரு எழுத்தாளர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தமிழ் செவ்வியல் படைப்புகள் மேல் பேரார்வம் கொண்டவர் அவர். அந்த படைப்புகளை நவீன இலக்கிய வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தீவிரமாக இயங்குபவர். அவரது தீவிரமும் உறுதியும் அபாரமானது. பெரும் படைப்பூக்கம் கொண்ட இயல்பைக் கொண்டிருக்கும் அவர் தமிழுக்கு சிறப்பான படைப்புகளை அளிப்பார் என அவரது மொழியும் கூறுமுறையும் நம்பிக்கை அளிக்கிறது. 

கம்பனுடைய வாழ்வில் ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. கம்பர் காலைப் பொழுதில் உலாவச் செல்கிறார். அப்போது ஒரு விவசாயி ‘’மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே’’ என்று பாடுகிறார். அந்த வரியை மட்டும் பாடி விட்டு விவசாய வேலையில் ஈடுபடத் துவங்கி விடுகிறார். அடுத்த வரி என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள கம்பனுக்கு ஆர்வம். தானே அடுத்த வரியை பொருத்தமாக ஊகித்து விடலாம் என்ற எண்ணத்துடன் வீடு திரும்பி விடுகிறார். அன்றைய நாள் பொழுது அன்றைய இரவு என யோசித்து யோசித்துப் பார்த்தும் அவரால் அந்த பாடலை முழுமை செய்ய முடியவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே முதல்நாள் உலாவிய பாதையில் சென்று அந்த விவசாயியின் வயலில் காத்திருக்கிறார். அந்த விவசாயி வந்து தனது வேலைகளைத் துவக்கி கொஞ்ச நேரம் செய்து விட்டு முதல் நாள் பாடிய பாட்லைப் பாடுகிறார். ‘’மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே’’ எனப் பாடி விட்டு சற்று இடைவெளி விட்டு ‘’தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’’ என அடுத்த வரியைப் பாடுகிறார். 

ஆர்ப்பரிக்கும் அலைகடலிடம் பொங்கிப் பாயும் நதிகளிடம் பெரு மலர்த் தடாகங்களிடம் பிரியம் காட்டும் கதிரோன் மூங்கில் இலை மேல் அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறு பனிநீரிடம் சற்று கூடுதலாகவே  பிரியத்தைக் காட்டுகிறான் என எண்ணிக் கொண்டேன்.