Monday 26 December 2022

தொகுத்துக் கொள்ளுதல்

2022ம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கிறோம். இந்த ஆண்டு செய்தது என்ன என்பதைத் தொகுத்துக் கொள்ளவும் அடுத்த ஆண்டு செய்ய இருப்பது என்ன நிர்ணயித்துக் கொள்ளவும் இந்த தருணம் பயன்படுகிறது. 

பலரின் விருப்பத்தின் படி பல நண்பர்கள் வற்புறுத்தலின் படி 2023ம் ஆண்டு எனது இலக்கியப் படைப்புகளை நூலாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயண நூல் வெளியாகிறது. என்னுடைய சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர திட்டம் உள்ளது. எனது கவிதைத் தொகுப்பும் கொண்டு வர வேண்டும். கம்பன் காவியம் குறித்து எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ நூல் வடிவம் பெற வேண்டும். என்னுடைய கட்டுமானத் தொழிலில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் ‘’எமக்குத் தொழில் ‘’ என்ற தலைப்பில் வெளிவர சாத்தியம் உள்ளது. ‘’அன்னை நதி’’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியாக வாய்ப்பு உள்ளது. வலைப்பூவில் வெளியான ஹாஸ்யக் கட்டுரைகளை நூலாக்கும் எண்ணமும் உள்ளது. நூல்களைக் கொண்டு வருவதில் எனக்கு இருக்கும் தயக்கத்தை தங்கள் தொடர் வற்புறுத்தலால் ஓரளவு அகற்றியிருப்பவர்கள் நண்பர்கள். அவர்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை. அவர்கள் இந்த கணம் என்னை நெகிழச் செய்கிறார்கள். என் மீதும் என் படைப்புகளின் மீதும் அவர்கள் காட்டும் பிரியமே எனக்குத் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது. 

2023ம் ஆண்டில் நண்பர் சுனில் கிருஷ்ணன் 1111 மணி நேர வாசிப்பு சவாலை அறிவித்திருக்கிறார். 365 நாளில் 1111 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது சவால். 365 நாளிலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இனிமையை உணரச் செய்திருக்கும். மேலும் மேலும்  தீவிரமாக  நூல்களை வாசிக்கும் எவரும் ‘’கற்றது கைம்மண் அளவு ; கல்லாதது உலகளவு’’ என்பதை உணர முடியும். அதனை இன்னும் தீவிரமாக உணர மேலும் ஒரு வாய்ப்பு. தமிழ்ச் சூழலில் வாசிப்பை முன்னெடுக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் முக்கியமானதே. நூல் வாசிப்புக்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதை இந்த சவால் வாசகர்களிடம் ஒரு பழக்கமாக மாற்றும். வாசிக்காமல் நிலுவையில் இருக்கும் நூல்களை இந்த சவாலைப் பயன்படுத்தி வாசிக்கலாம். புதிதாக நூல்களை வாங்கியும் வாசிக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புகளையும் நான் பயன்படுத்தப் போகிறேன். 

இன்று செயல் புரியும் கிராமத்துக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். இந்த ஆண்டு ஜனவரி - 26 குடியரசு தினத்தன்று ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை மக்கள் அனைவரும் குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு தங்கள் வீடுகளுக்கு முன்னால் நட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றினார்கள். ஒரு கிராமமே இணைந்து இவ்விதமாக குடியரசு தினத்தைக் கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது. இந்த நிகழ்வை ‘’காவிரி போற்றுதும்’’ ஒருங்கிணைத்தது. 2023ம் ஆண்டிலும் இவ்விதமாக ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என கிராமத்தில் உள்ள பெரியவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’மிடம் கேட்டுக் கொண்டார்கள். எவ்விதம் செய்வது எனத் திட்டமிட வேண்டும். 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள 3 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ரிங் பால், பேட்மிட்டன் மட்டை, பேட்மிட்டன் பந்து, கைப்பந்து , கால்பந்து ஆகியவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. சிறு வயதில் குழந்தைகள் விளையாட்டுக் களத்தில் ஓடி ஆடி விளையாடிப் பழக வேண்டும். சிறு வயதில் அவர்கள் விளையாட்டின் மூலம் அடையும் மகிழ்ச்சியும் உடல் உறுதியுமே அவர்கள் வாழ்வின் அடித்தளமாக அமையும். இதனை 2023ம் ஆண்டின் துவக்க மாதங்களிலேயே செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும். 

விவசாயிகளை வலிமை கொண்ட பொருளியல் சக்தியாக மாற்றுவதே ‘’காவிரி போற்றுதும்’’மின் அடிப்படைப் பணி. தை மாதம் அறுவடை முடிந்த பின்னர் கிராமத்தில் விவசாயப் பணி பெரிதாக இருக்காது. சித்திரை மாதம் தான் உழவு தொடங்கும். அந்த இடைவெளியில் ஒவ்வொரு ஒரு ஏக்கரிலும் 15 தேக்கு மரக்கன்றுகள் நடும் வகையில் ஒரு மேட்டுப்பாத்தி எடுத்து ஒவ்வொரு விவசாயிக்கும் 15 தேக்கு மரக்கன்றுகள் வழங்குதல் என்னும் இலக்கை நிறைவேற்ற வேண்டும். கிராம மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என வானத்தின் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன்.