Monday, 5 December 2022

அணி அமைத்தல்

நாம் ஒரு கிராமத்தில் செயல் புரிகிறோம். ஐந்நூறு குடும்பங்கள் அங்கே உள்ளன. எல்லா வீடுகளுக்கும் ஒரு சில முறையாவது சென்றிருப்பேன். வீடுகளில் உள்ள எல்லாரிடமும் சில நிமிடங்களாவது உரையாடியிருப்பேன். எல்லாருக்கும் என்னைத் தெரியும். ‘’தெரியும்’’ என்று சொல்வது கூட ஒரு அளவுக்குள் தான். பலர் என்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவன் என்றே எண்ணுவார்கள். விவசாயத் துறை அல்லது தோட்டக்கலைத் துறை அல்லது வனத்துறை அல்லது சுகாதாரத் துறை. கிராமத்தில் முதல் முறை ஒருவரை சந்திக்கும் போது என்னுடைய பெயரைச் சொல்லி கட்டிடக் கட்டுமானம் எனது தொழில் என்று சொல்லியே அறிமுகப்படுத்திக் கொள்வேன். என்னை அப்படி யாரும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.  ஒவ்வொரு முறையும் செயல் புரியும் கிராமத்துக்குச் செல்வது என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கும் செயலே. வீட்டிலிருந்து உற்சாகத்துடன் கிளம்பி செல்வேன். என்னைப் பார்க்கும் போது அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியும் அவர்களைப் பார்க்கும் போது நான் கொள்ளும் மகிழ்ச்சியும் மிகப் பெரியவை. அடியேன் மிக எளியவன். அந்த மக்களின் அன்பு மிகப் பெரியது. 

என்னிடம் எப்போதும் கேட்கப் படுவதுண்டு. செயல் புரியும் கிராமத்தில் எவரும் உங்களைக் கடுமையாகப் பேசினால் நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள் என்று. என்னிடம் யாரும் கடுமையாகப் பேசியதில்லை. எவரும் என்னிடம் கடுமையாகப் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அதனை நான் இயல்பாகவே எடுத்துக் கொள்வேன். நம் மீது பலர் அன்பு காட்டுகிறார்கள். பிரியம் காட்டுகிறார்கள். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் நான் எவரும் கடுமையைக் காட்டினாலும் அதனையும் இயல்பாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நியாயம். 

இன்று கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களில் உடனிருக்கும் சிலருடன் 2023ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். நான் மிகத் துரிதமாக செயல்களை ஆற்ற வேண்டும் என்ற மனப்பாங்கு அமையப் பெற்றவன். கிராமம் மெல்ல மிக மெல்ல என்னும் நடைமுறையைக் கொண்டது. இந்த இரண்டுக்குமான சமநிலைப் புள்ளியே செயல்கள் நகரும் வேகம். 2023ம் ஆண்டுக்கு மூன்று செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளேன். பணிகளும் இலக்கங்களும் கூடிக் கொண்டே தான் போகும். நாம் செயலாற்றும் ஆர்வம் கொண்டிருப்பதால் மேலும் மேலும் என செயலாற்றவே விருப்பம் கொள்வோம். குறைந்தபட்சமாக இந்த மூன்று விஷயங்களை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளேன். 

1. பொருளியல் : நண்பர்களிடம் முதல் விஷயமாகக் கூறியது செயல் புரியும் கிராமத்தின் எல்லா குடும்பங்களும் நேரடியாக பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 தேக்கு மரக் கன்றுகள் வழங்கும் திட்டத்தை தை மாத அறுவடை முடிந்ததும் செயல்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தேன். தை மாதத்துக்குள் எல்லா குடும்பங்களையும் நேரில் சந்தித்து  10 தேக்கு மரக் கன்றுகள் பயிரிட்டுக் கொள்வதன் அவசியத்தைக் கூற வேண்டும். ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி 10 தேக்கு மரக் கன்று நட்டு பராமரித்து வளர்த்துக் கொள்ள அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சதவீதம் இடம் மட்டும் போதும். மீதி உள்ள 99 சதவீத இடத்தில் அவர் வழக்கமாக செய்யும் விவசாயம் செய்து கொள்ளட்டும். விஜயதசமி அன்று செயல் புரியும் கிராமத்தின் விவசாயி ஒருவர் வயலின் மேட்டுப்பகுதியில் நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. அதனை மற்ற விவசாயிகளுக்கு நேரடியாக எடுத்துக்காட்டாக காட்டுவது என முடிவு செய்தோம். 

காவிரி வடிநிலப் பிராந்தியத்தில் மேட்டுப்பாத்தி அமைக்கையில் தான் தேக்கு நன்றாக வளர்கிறது. தேக்கின் சல்லி வேர்கள் நீருக்குள் சில நாட்கள் இருந்தால் அழுகி விடும். வேர்கள் அழுகிப் போன மரத்துக்கு பின்னர் வளர்ச்சி இருக்காது. விவசாயிகளுக்கு ஓர் ஆர்வத்தையும் நல்விருப்பத்தையும் உருவாக்கவே நாம் தேக்கு மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் வழங்குகிறோம். அவர்கள் மேட்டுப்பாத்தி அமைக்க சாண எரு இட கணிசமான செலவு பிடிக்கும். மிகப் பெரிய தொகை தேவைப்படாது. மூன்று இலக்க எண்ணில் உச்சபட்சமான எண் அளவு செலவாகும். அதனை விவசாயிகள் தான் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ விழிப்புணர்வை உண்டாக்கும் ஒரு தூண்டுகோலாகவே விளங்குகிறது. 

இரண்டு அடி நீளம் , இரண்டு அடி அகலம், இரண்டு அடி ஆழம் கொண்ட குழிகள், ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் இடையே பன்னிரண்டு அடி இடைவெளி என்பதை சரியாகச் செய்கிறார்களா என்பதை நாம் கண்காணித்து உறுதி செய்கிறோம். 

கிராம மக்களை ஒவ்வொருவராக சந்திப்பதைக் காட்டிலும் பத்து பேர் கொண்ட குழு குழுவாக சந்தித்து உரையாட ஏற்பாடுகள் செய்யுமாறு கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்களும் அதனைச் செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். 

2. வலிமை : ’’இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’ என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். ‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் { மூன்று வயதிலிருந்து  பதினைந்து வயது வரை } கால்பந்து, கைப்பந்து , கூடைப்பந்து, பாட்மிட்டன், ரிங் பால், கிரிக்கெட் என அவர்கள் விரும்பும் அனைத்து வகை பந்து விளையாட்டு சாதனங்களையும் அவர்களுக்கு வழங்க விருப்பம் கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பொறுப்பு குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டும் அல்ல; ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பின் அடிப்படையில் ‘’காவிரி போற்றுதும்’’ இந்த செயலை முன்னெடுக்க உள்ளது. கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும். 

3. ஞானம் : செயல் புரியும் கிராமத்தில் 2023ல் கல்விப்பணி ஒன்றை தொடங்கிட வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. அனேகமாக 2023 மே மாதம் இதன் துவக்கம் நிகழக் கூடும். 

செயல் புரியும் கிராமம் விஷயத்தில் நாம் ஏதும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்த செயலுக்கான ஆதரவு என்பது எப்படியோ ‘’காவிரி போற்றுதும்’’ மிற்கு வந்து சேர்கிறது என்பது நம் அனுபவம். அவ்வாறே இந்த விஷயங்களுக்கும் நிகழும் என்று நம்பிக்கை கொள்கிறோம். அவ்விதம் எண்ணும் நிலையை உருவாக்குபவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள். இம்முறையும் அவர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். 

’’காவிரி போற்றுதும்’’ க்காக செயல் புரியும் ஒரு சிறு அணி கிராமத்தில் உருவாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.