மனிதர்களை லௌகிகம் அலைக்கழிக்கிறது. அங்கும் இங்கும் என அல்லாடச் செய்கிறது. அதனை திமிறும் காளை எனக் கொண்டால் அதனை முழுதறிந்து அடக்கிக் கட்டுப்படுத்தியிவர்கள் வெகு சிலர். ஏதென்றே அறியப்படாத மாயம் ஒன்றால் தற்செயலாக அதனை வெற்றி கொண்டவர்களும் உண்டு. அதன் கூர்க்கொம்பால் கிழிபட்டு வாழ்க்கை முழுதும் அந்த வலியை அனுபவித்தவர்கள் உண்டு. ‘’வீடும் வெளியும்’’ இவ்வாறான அனுபவம் வாய்க்கப் பெற்ற தங்களுக்குத் தொடர்புடைய மனிதர்கள் சிலரைப் பற்றி இரண்டு மனிதர்கள் புண்ணிய நதியாம் காவிரியின் துறை ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சித்திரத்தை தி.ஜா ஒரு சிறுகதையாக்கியுள்ளார். லௌகிகத்தில் மனம் சிறிதாயினும் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை முற்றமைதி என்பது சாத்தியம் இல்லை. அங்கு வர ரொம்ப நேரமும் ஆகும் ; ரொம்ப காலமும் ஆகும்.