Friday 9 December 2022

யாத்திரை

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கூட இந்தியாவில் யாத்திரை என்பது பாத யாத்திரை தான். ஒரு கிராமத்துக்குள் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரையான தூரம் மூன்று கிலோ மீட்டர் இருக்குமென்றால் அங்கு சென்று திரும்புவது என்பதே முக்கால் மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் பிடிக்கும் செயல். இன்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். இங்கே ஒரு வருவாய் கிராமம் மூன்று அல்லது நான்கு குக்கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு குக்கிராமத்திலிருந்து அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு குக்கிராமத்துக்கு செல்லும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கான தேவையோ அவசியமோ மிகவும் குறைவு. கடைகள் மற்றும் கோவில்கள் தான் பொதுப்புள்ளிகள். கிராம மக்கள் கடைகளுக்கும் கிராமக் கோவில்களுக்கும் வருவார்கள். அதன் பின்னர் சைக்கிள் கடைகள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட  ஒரு குக்கிராமம் என்றால் அதில் ஒரு மளிகைக் கடையும் சைக்கிள் கடையும் இருக்கும். பேருந்துகள் செல்லும் பாதையில் உள்ள கிராமங்களில் பேருந்து நிறுத்தங்களும் அதை ஒட்டிய தேனீர்க்கடைகளும். வீட்டிலிருந்து  வயலுக்கு ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை சென்று திரும்பினாலே ஒரு நாளைக்கு ஆறிலிருந்து பத்து  கிலோமீட்டர் நடந்து சென்றதற்கு சமம்.  

கடைத்தெரு என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு இன்னும் பக்கத்தில் இருக்கும் சிறுநகரங்களும் நகரங்களும் தான். உண்மையில் தங்கள் அருகாமையில் இருக்கும் கிராம மக்களின் நுகர்வாலேயே நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் ஜீவிக்கின்றன. கிராமத்தில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அருகில் இருக்கும் நகரத்துக்கோ அல்லது சிறுநகரத்துக்கோ சென்று வந்தால் அன்றைய பொழுது என்பது அவர்களுக்கு நிறைந்து விடும். இன்று கிராமத்தில் பலவிதமான கடைகள் வந்து விட்டன. ஒரு கிராமத்தில் ஐந்திலிருந்து ஏழு மளிகைக் கடைகள் இருக்கின்றன. நான்கு தேனீர்க்கடை இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று கணிணி மையங்கள் உள்ளன. அடகுக்கடைகள் இருக்கின்றன. சில கிராமங்களில் நகைக்கடைகள் கூட உள்ளன. சலூன்கள் இயங்குகின்றன.

திருவிழாக்களை தமிழ் மக்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அந்த சமயத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் கூடும் மக்கள் கூட்டமும் அதனை ஒட்டி பல்வேறு விதமான பொருட்கள் கிடைக்கக்கூடிய சந்தையும் தான். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை தீபம், காஞ்சிபுரம் கருட சேவை, சிதம்பரம் ஆருத்ரா, ஆனித்திருமஞ்சனம், திருவாரூர் தேர், மன்னார்குடி வெண்ணெய்த்தாழி உற்சவம், பழனி பங்குனி உத்திரம், மதுரை சித்திரைத் திருவிழா, திருச்செந்தூர் சூரசம்ஹாரம் என அனைத்து திருவிழாக்களிலும் அந்தந்த ஊர்களுக்கு அருகில் இருக்கும் கிராம மக்களே இலட்சக் கணக்கில் திரள்கிறார்கள். 

மகாராஷ்ட்ராவில் ‘’வர்கரி’’ என்ற சம்பிரதாயம் உண்டு. ஞானி ஞானேஸ்வர் பிறந்த ஊரான ஆலந்தி என்ற ஊரிலிருந்து அவர் வழிபட்ட விட்டல சுவாமி கோவில் கொண்டுள்ள பண்டரிபுரம் வரை உள்ள தூரமான 225 கி.மீ தூரத்தை பதினைந்து நாள் பாத யாத்திரையாக ஞானேஸ்வர் மற்றும் துகாராமின் ‘’அபங்’’ பஜனைகளைப் பாடிக் கொண்டு நடந்து கொள்வார்கள். ஆலந்திக்கும் பண்டரிபுரத்துக்கும் இடையேயான 225 கி.மீ தூரப்பாதை பிரதானப் பாதை. அதில் கிளைபிரியும் சாலைகள் வழியே வெவ்வேறு குழுக்கள் இணைந்து கொள்வார்கள். இந்த பாத யாத்திரை புரியும் குழு ஒவ்வொன்றும் தங்கள் ஞானகுருவான ஞானேஸ்வர் மகராஜ் அல்லது துகாராம்மின் பாதுகைகளை தங்கள் குழுவின் சார்பாக ஒரு வாகனத்தில் சுமந்து செல்வார்கள். இந்திய மரபில் ஞானாசிரியனின் பாதுகை என்பது பெரும் வணக்கத்துக்குரியது. ஞானப்பாதையில் நடந்த மாமனிதனின் சிறப்பு எத்தனை உயர்வானது என்பதைக் காட்டுவது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் ஒவ்வொரு குழுவுக்கும் ‘’திண்டி’’ என்று பெயர். அந்த குழுவிற்கு ஒரு தலைவர் இருப்பார். ஒரு இசைக்குழு இருக்கும். குருதேவரின் பாதுகைகளை சுமக்கும் வாகனம் ஒன்று இருக்கும். இந்த குழு பண்டரிபுரத்தில் உள்ள விட்டல் ஆலயத்தில் தங்களைப் பதிவு செய்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவும் அவர்கள் ஊரிலிருந்து எப்போது புறப்பட வேண்டும் எந்த நாள் எங்கு இருக்க வேண்டும் ; எந்த நாளில் எந்த நேரத்தில் பிரதானப் பாதையில் இணைய வேண்டும் என்பவை முன்னரே வழங்கப்பட்டு விடும். அவை அனைத்துமே துல்லியமாக திட்டமிட்டபடி நிகழும். இந்த நிகழ்வின் போது லட்சக்கணக்கானோர் இந்த பாதையில் பயணிக்கின்றனர். இந்த பயணத்தை உலக சாதனையாக ‘’கின்னஸ் சாதனை புத்தகம்’’ குறிப்பிடுகிறது. 

எல்லா நதிகளையும் புனிதமாகக் கருதுவது இந்திய மரபு. ’’கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி’’ ஆகிய ஏழு நதிகளும் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவராலும் தினமும் நினைக்கப்பட வேண்டும் என வகுக்கிறது நமது மரபு. நர்மதை நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து அது கடலில் சங்கமமாகும் துறை வரை 2000 கி.மீ நதியுடனே பயணித்து பின்னர் படகு மூலம் நதியைக் கடந்து சங்கமத் துறையிலிருந்து உற்பத்தி ஸ்தானம் வரை 2000 கி.மீ என மொத்தம் 4000 கி.மீ பாத யாத்திரையாக நடந்து செல்லும் நர்மதா பரிக்கிரமா மிகத் தொன்மையான காலத்திலிருந்து மக்கள் மேற்கொள்ளும் வழிமுறை. இந்த பயணத்தை மேற்கொள்ளும் யாத்ரியின் நலன்களை பயணத்தின் மீது நர்மதை அன்னையே பாதுகாப்பாள் என்பது இந்திய மக்களின் நம்பிக்கை. மார்க்கண்டேயர், மகாபலி, பரசுராமர், அனுமன், விபீஷ்ணன், கிருபர், அஸ்வத்தாமர் ஆகிய எழுவரையும் சிரஞ்சீவிகள் என இந்திய மரபு வகுக்கிறது. ஒவ்வொரு நர்மதா பரிக்ரமா யாத்ரியுடனும் இந்த சிரஞ்சீவிகளும் பயணத்தில் உடனிருப்பதாக இந்தியர்களின் நம்பிக்கை. குழுக்களாகவும் தனி நபர்களாகவும் இந்த புண்ணிய யாத்திரையை மக்கள் மேற்கொள்கின்றனர். இவர்களுடைய உணவு உறைவிடத் தேவையை நதிக்கரையில் வசிக்கும் மக்களே பார்த்துக் கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது யாத்ரிகர்கள் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்பது அதன் விதிகளில் ஒன்று. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது இந்திய மரபு. வாசல் தேடி வந்து பிச்சை கேட்கும் ஒருவன் கடவுளுக்குச் சமமானவன் என்பது மறைகளின் கூற்று. எனவே பரிக்ரமாவாசிக்கு உணவளிப்பதை மிகுந்த உவப்புடன் நர்மதா நதி தீர மக்கள் செய்கின்றனர். 

நமது உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகுநாட்களுக்கு இருக்கையில் ஒரே விதமான இயங்குமுறையில் மீண்டும் மீண்டும் சென்று சிக்குகின்றன. பிறவிச்சுழல் என மரபில் கூறப்படுவது அதுவே. நம் உடல் ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரே இடத்தில் வெகுநாட்கள் இருந்தால் நம் சூட்சும சரீரம் அந்த இடத்துடன் தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்ளும். அந்த பிணைப்பை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது. ஒரே இடத்தில் இருந்தும் மனதை விரிவாக்கிக் கொள்ள இயலும். ஆனால் அது எல்லாருக்கும் இயல்வதல்ல. இலட்சத்தில் ஒருவருக்கே அது சாத்தியம். மனிதன் தன்னைச் சூழும் அகவயமான புறவயமான எல்லைகளை உடைக்க எல்லைகளைக் கடக்க பயணங்கள் உதவும். உலகின் எல்லா மதங்களும் புனித யாத்திரையை வகுத்திருக்கின்றன. ஜென் மரபில் பயணம் என்பது அகவிடுதலையின் குறியீடு. ஜென் குருமார்கள் பயணித்தவாறே இருக்கிறார்கள். ஜென் குருமார்களுடன் பயணிப்பது சீடர்களுக்கு கல்வியாகவும் அமைகிறது. ஜப்பானில் ஃபியூஜி மலை மீது ஏறுவது என்பது ஜென் மரபில் முக்கியமான ஒரு புனித யாத்திரை. 

இந்தியா துறவிகளின் தேசம். இந்தியா துறவிகளால் உருவாக்கப்பட்ட தேசம். ‘’சோறிடும் நாடு ; துணி தரும் குப்பை’’ என விட்டு விடுதலையாகிக் கிளம்பியவர்களே இந்த நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கினார்கள். சேதுவிலிருந்து ஹிமாச்சலம் வரை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் தேச மக்கள் வடக்குக்கும் தெற்குக்கும் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.  

பயணிக்கும் ஒவ்வொருவர் உடலில் மனதில் சிந்தனையில் நயத்தகு நலம் பயக்கும் தன்மை ஒரு நீண்ட தூர  புண்ணிய பாத யாத்திரைக்கு உண்டு. தமிழ்நாட்டில் அவ்வாறான ஒன்று அதிக அளவில் நிகழ வேண்டும்.