Tuesday 27 December 2022

கீழ்சூரியமூலை / திருக்கோடிக்காவல்

உ.வே.சா வின் ‘’என் சரித்திரத்தில்’’ கீழ்சூரியமூலை என்ற கிராமம் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது அன்னையின் ஊர் கீழ்சூரியமூலை. அங்கே வசித்த தனது பாட்டனார் கிருஷ்ண சாஸ்திரிகள் குறித்து உ.வே.சா அவர்கள் தனது ‘’என் சரித்திரம்’’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகாலையிலிருந்து உச்சிப் பொழுது வரை சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்து விட்டு உச்சிப் பொழுதுக்குப் பின் உணவு உண்பதை தனது வழக்கமாக வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தவர் கிருஷ்ண சாஸ்திரிகள் என உ.வே.சா சொல்கிறார். ஒருநாள் தனது இயல்பான ஆர்வத்தின் விளைவால் தனது பாட்டனாரைப் போல் தானும் சிவ நாமம் சொல்கிறார். அதனைக் கவனித்த கிருஷ்ண சாஸ்திரிகள் சிறுவனாக இருந்த உ.வே.சா வுக்கு ‘’மிருத்யுஞ்சய மந்திரம்’’ உபதேசித்து சூர்ய அஸ்தமனத்துக்குப் பின் அதனை உச்சாடனம் செய்யுமாறு கூறுகிறார். உ.வே.சா தன் வாழ்நாள் முழுவதும் அதனைப் பின்பற்றுகிறார். 

கீழ்சூரியமூலையில் ஒரு சிவாலயம் உள்ளது. இன்று அந்த ஆலயத்துக்கு சென்றிருந்தேன். சூரியன் சிவபெருமானை வணங்கிய தலம். எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு திசையைப் பார்த்த வண்ணம் இருக்கும். திருவாரூரில் மட்டும் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையைப் பார்த்து இருக்கும். கீழ்சூரியமூலையில் சூரியன் நடுவில் இருக்க மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி உள்ளன. இந்த ஆலயத்தில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றுவது விசேஷமானது என்று அங்கே இருப்பவர்கள் சொன்னார்கள். சொர்ண பைரவர் சன்னிதியும் இங்கே உள்ளது. மஹாலஷ்மி தாயாருக்கும் ஒரு சன்னிதி உள்ளது. நான் சென்ற போது கோயில் குருக்கள் பூசனைகளை நிகழ்த்தி விட்டு சென்றிருந்தார். அவரது எண்ணை ஆலயத்தின் அருகில் இருப்பவர்களிடம் பெற்றுக் கொண்டு நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். புதர் மண்டி ஆலயம் நாகங்களால் சூழப்பட்டு மூடப்பட்டிருந்தது என்றும் வெளியூரில் வசிக்கும் பக்தர் ஒருவர் கனவில் சிவபெருமான் தோன்றி இந்த இடத்தைக் குறிப்புணர்த்தியதாகவும் அவர் இந்த ஊருக்கு வந்து இந்த ஆலயத்தை மறுநிர்மாணம் செய்ததாகவும் ஊர்க்காரர்கள் கூறினார்கள். ஆலயத்தில் ஒரு பெரிய வன்னி மரம் இருக்கிறது. 

ஊர் திரும்புகையில் வழியில் உள்ள திருக்கோடிக்காவல் என்ற ஊரின் சிவாலயத்துக்குச் சென்றேன். அங்கே உள்ளூர்க்காரரான ஒரு பக்தரை சந்தித்தேன். இந்த ஊரை ‘’ருத்ர பூமி’’ என்று சொல்கிறார்கள். சிவனுக்கு உகந்த வில்வம், வன்னி , இலுப்பை ஆகிய மரக்கன்றுகளை இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்க முயற்சி மேற்கொள்வோமா என்று கேட்டேன். சிவ பக்தரான அந்த உள்ளூர்வாசி மிகவும் ஆர்வம் காட்டினார். ஓரிரு நாளில் அவரை நேரில் சந்திப்பதாகக் கூறி விட்டு வந்தேன்.