Saturday 7 January 2023

14 மரங்கள் - தொடர் பிழைகள்

14 மரங்கள் தொடர்பாக 12.07.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்த போது மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகக் கருதி செயல்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.  அன்றைய தேதியில் மரங்களை வெட்டிய குற்றம் செய்தது ஒரு நபர். அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர். கள்ளத்தனமாக மரம் வெட்டுதல், அதிகார துஷ்பிரயோகம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த விஷயம் வருவதால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தோன்றியது. 

இந்த விஷயத்தில் என்னென்ன நிகழ்கின்றன என்பதைக் கவனித்த போது நான் சட்டம் தொடர்பான பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். இணையம் மூலம் தேடி இந்த விஷயங்கள் குறித்த சட்டங்களைத் தேடிப் படித்தேன். அப்போது சட்டம் பற்றியும் சட்டம் எழுதப்படும் முறை பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மாணவனைப் போல புதிதாக தெரிந்து கொள்வதன் ஆர்வம் சட்டம் குறித்து ஏற்பட்டது. உதாரணத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் கள்ளத்தனமாக மரம் வெட்டுதலில் ஈடுபடும் போது அது எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்பதை ஊராட்சிகள் சட்டத்தில் பல பக்கங்களில் தேடிப் பார்த்தேன். கிராமங்களில் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டும் பொதுமக்களுக்கு என்ன தண்டனை என்பதை உணர்த்தும் சட்டம் ஒரு சிறு குறிப்பு போல இருந்தது. அது அனைவருக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் அது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. ‘’கள்ளத்தனமாக மரம் வெட்டுதல்’’ குறித்த சட்டத்தை எடுத்து வாசித்துப் பார்த்தேன். அது தெள்ளத் தெளிவாக கள்ளத்தனமாக மரம் வெட்டப்படும் போது கிராம ஊராட்சி ஊழியர்களும் வருவாய்த்துறை ஊழியர்களும் செய்ய வேண்டிய கிரமங்கள் என்ன என்பதை எடுத்துரைக்கிறது. அதனைப் பலமுறை வாசித்திருக்கிறேன். சட்டம் என்பது பலமுறை வாசிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஒரு விஷயம் புலப்படும். இத்தனை நாள் இதனை கவனிக்காமல் இருந்தோமே என்று ஆச்சர்யம் உண்டாகும். 

தமிழ்நாட்டில் பொதுவாக மக்களுக்கு சட்டபூர்வமான செயல்முறைகள் மேல் நம்பிக்கையும் அதன் மீது பற்றும் இருப்பதில்லை. தமிழ்நாட்டின் அரசு அலுவலர்களும் பொது மக்களிலிருந்து வருபவர்கள் என்பதால் அவர்களிடமும் அதே வழக்கம் இருப்பதைக் காண முடியும். ‘’வழக்கமான நடைமுறை’’ என ஒன்று பழக்கத்தில் இருக்கும். அதையே அலுவலர்கள் பின்பற்றுவார்கள். 

கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும் போது கிராம நிர்வாக அதிகாரி வெட்டப்பட்ட மரங்களைக் குறித்த விபரங்களை ‘’சி’’ படிவம் என்ற படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். யாரேனும் புகார் அளித்தால்தான் பதிவு செய்ய வேண்டும் என்று கிடையாது. ஒரு கிராமத்தில் பொது இடத்தில் இருக்கும் எந்த மரமும் வெட்டப்படும் என்றால் அதனை தனது வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லுதலும் கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு வெட்டப்பட்ட மரத்தின் விபரங்களை ( வெட்டப்பட்ட மரத்துண்டுகளின் எண்ணிக்கை, அவற்றின் கனஅளவு, எடை) ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘’சி’’ படிவத்தை வழங்குவதும் கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள். கள்ளத்தனமாக மரம் வெட்டப்பட்டு 24 மணி நேரத்தில் ‘’சி’’ படிவம் அளிக்கப்பட்டு விட வேண்டும். அவ்வாறு அளிக்கப்படாமல் இருந்தால் அதுவே பணி நெறிமுறை மீறல் என்றாகும். வெட்டியவர் எவரெனத் தெரியாது வெட்டப்பட்ட மரத்துண்டுகளும் சம்பவ இடத்தை விட்டு அகற்றப்பட்டு விட்டன என்றால் கிராம நிர்வாக அதிகாரி அதனைக் காவல்துறையில் புகாராக அளிக்க வேண்டும்.  ‘’சி’’ படிவ அறிக்கை கிராம நிர்வாக அதிகாரியில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வழங்கப்படும்.  வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அதிகாரி அளித்த ‘’சி’’ படிவத்தை பரிசீலித்து அதில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்வார். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வார். அதன் பின்னர் வருவாய் வட்டாட்சியர் கிராம நிர்வாக அதிகாரியின் ‘’சி’’ படிவத்தையும் வருவாய் ஆய்வாளரின் அறிக்கையையும் அடிப்படையாய்க் கொண்டு குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மதிப்பிட்டிருக்கும் பொருள் மதிப்பு குறைவாக இருப்பதாக வட்டாட்சியர் நினைத்தால் மரத்தின் மதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என தனது அறிக்கையில் எழுதி வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பார்வையிட்டு மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட வேண்டும். வெட்டப்பட்ட ஒரு மரத்தின் மதிப்பு ரூ.1000க்குள் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கும் அந்த மரக்கிரயத்தின் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் வட்டாட்சியர் அதிகாரம் படைத்தவர். வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.1000க்கு மேல் எனில் அந்த மரத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யவும் அதன் மீது 40 மடங்கு வரை அபராதம் விதிக்கவும் வருவாய் கோட்ட ஆட்சியர் அதிகாரம் படைத்தவர். 

14 மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் நடந்தது 09.07.2021 அன்று. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட தினம் 12.07.2021. வருவாய் வட்டாட்சியர் வெட்டப்பட்ட 14 மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயம் செய்து ஒரு மடங்கு அபராதம் ரூ.950 விதித்து கூடுதல் தொகைக்கு 8 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் சேர்த்து ரூ.2052 செலுத்தச் சொல்லி கள்ளத்தனமாக மரம் வெட்டியவருக்கு உத்தரவிட்டது 13.07.2021 அன்று. அந்த உத்தரவில் உள்ள வாசகம் ‘’ 17.07.2021 அன்று வருவாய் ஆய்வாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ‘’ இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 14 மரங்கள் விஷயத்தில் இந்த உத்தரவு முக்கியமான ஒன்று. மாவட்ட நிர்வாகம் 14 மரங்கள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக வருவாய் வட்டாட்சியரின் ஆணையையே குறிப்பிடுகிறது என்பதால் அதில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் பெரும் முக்கியத்துவம் கொண்டதாகி விடுகிறது. 

நாம் ஒரு விஷயம் யோசித்துப் பார்ப்போம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது 12.07.2021 தேதியில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 12ம் தேதி அளிக்கப்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு தபாலில் அனுப்பப்பட்ட தேதி 19.07.2021. வருவாய் வட்டாட்சியர் 13.07.2021 அன்று பிறப்பித்த ஆணையில் அந்த ஆணையின் நகல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் குறிப்பிடுகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவாய் வட்டாட்சியர் முகவரியிட்டு எந்த தபாலும் அனுப்பப்படாத நிலையில் 13ம் தேதி தான் பிறப்பித்த உத்தரவின் நகலை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவருடைய மரக்கிரய நிர்ணய மதிப்பின் எல்லைக்குள் இந்த விஷயம் வருகிறது என்னும் போது 13ம் தேதி அந்த உத்தரவை அவர் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வருடத்துக்கு வருவாய் வட்டாட்சியரின் அதிகார எல்லைக்குள் ஓரிரு கள்ளத்தனமாக மரம் வெட்டுதல் நிகழும். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.1000க்குள் இருந்தால் வட்டாட்சியரே அபராதம் விதித்து ஆணை வெளியிட்டு விடுவார். அவர் அந்த ஆணையின் நகல்களை வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்ப அவசியம் இல்லை. 14 மரங்கள் விஷயத்தில் ஏன அப்படி செய்தார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது. 

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய 14 மரங்களின் மதிப்பை ரூ.950 என வருவாய் வட்டாட்சியர் நிர்ணயம் செய்து விட்டார். கள்ளத்தனமாக மரம் வெட்டுதலுக்கு மரத்தின் மதிப்பில் ஒரு மதிப்பிலிருந்து 40 மடங்கு வரை அபராதம் விதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு மடங்கு அபராதம் விதிப்பது என்றும் முடிவு செய்து விட்டார். அவ்வாறெனில் வரியுடன் கூடிய தொகையான ரூ.2052ஐ ஊராட்சித் தலைவரின் ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்து செலுத்தச் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நடைமுறை. அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதற்கான காரணம் தெரியாத ஒன்றாக இருக்கிறது. அபராதத்துடன் கூடிய வரி விதிப்பை வட்டாட்சியரின் ஆணை வெளியிடப்பட்ட பின் 120 நாட்கள் கழித்து இணையம் மூலம் செலுத்தியிருக்கிறார். ஆணை பிறப்பிக்கப்பட்ட 120வது நாளில் ரூ.1000 அதன் பின் 127வது நாளில் ரூ.1052 என இரண்டு தவணைகளாக செலுத்தியிருக்கிறார். இத்தனை காலதாமதத்தை மாவட்ட நிர்வாகம் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை. 

குறுக்கு வழிகள் அனைத்துமே நேர் வழிகளை விட மிக நீளமானவை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த தருணத்தில் நான் அந்த வாசகத்தைத் தான் நினைவில் வைத்துக் கொள்கிறேன். மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை சிறு எடுத்துக்காட்டாக மட்டுமே கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட விபரங்கள் மேலும் பல விஷயங்களை புரியச் செய்கின்றன. 

ஐயத்துக்கு இடமான விதத்தில் நிகழ்ந்திருக்கும் செயல்பாடுகள் ஆவணங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு புகார் மனுவாக அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அனுப்பப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. இதில் ஒரு முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னைக் கடிந்து கொள்கிறார்கள். இதில் ஈடுபடாதே என எச்சரிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை அவ்வாறு கூறும் போதும் எனக்கு நானே என்னிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை நான் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டிருக்கிறேனா என்ற கேள்வியை என்னிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கான பதில் அவ்வாறு இல்லை என்பதே. ஒருமுறைக்கு பலமுறை ஆழமாக சிந்தித்துப் பார்த்தே இதனைக் கூறுகிறேன். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. நான் அரசாங்கம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவன். அரசாங்கம் சட்டப்படியாக இயங்கும் அமைப்பு என்பதில் தீவிரமான உறுதி கொண்ட்வன் நான். பொதுவாக தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அரசாங்கம் அரசாங்க அலுவலகங்கள் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருப்பார்கள். நான் எந்நாளும் அவ்வாறான அவநம்பிக்கை கொண்டதில்லை. அரசாங்க வேலையை இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் ஆற்றக் கூடிய நூற்றுக்கணக்கானோரை எனக்குத் தெரியும். ஒட்டு மொத்தமாக அரசாங்கம் என்பதை குற்றம் சாட்டுவது அவர்களின் அர்ப்பணிப்பை புறந்தள்ளுவதற்கு சமம். எந்த சூழ்நிலையிலும் நான் அதனைச் செய்ய மாட்டேன். தவறுகள் திருத்தப்பட வேண்டும் ; முறைகேடுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அரசாங்க அமைப்பும் சட்டமும் ஜீவித்திருப்பதனால்தான் ஒரு சாதாரண குடிமகனால் நியாயம் கேட்க முடிகிறது.  

இரண்டு தினங்களுக்கு முன்னால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட ஆட்சியரின் முதல் தனி உதவியாளரைச் சந்தித்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டு ‘’14 மரங்கள்’’ விஷயம் தொடர்பாக அக்டோபர் மாதம் ஒரு மனு அனுப்பியிருந்தேன். அது தொடர்பாக விசாரிக்க வந்தேன் என்று கூறினேன். அவருக்கு விஷயம் என்ன என்பது உடன் புலப்பட்டு விட்டது. வருவாய் கோட்டாட்சியரை சந்திக்குமாறு கூறினார். அவரைச் சந்தித்து விட்டு அவர் என்ன கூறுகிறார் என்பதைத் தங்களிடம் வந்து தெரிவிக்கிறேன் எனக் கூறி விட்டு வருவாய் கோட்டாட்சியரை சந்திக்கச் சென்றேன். அந்த அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் விஷயத்தை எங்களிடம் சொல்லுங்கள் ; நாங்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்து விடுகிறோம் என்று கூறினார்கள். ‘’மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்து விட்டு அவர்கள் கேட்டுக் கொண்டதின் படி நான் இங்கு வந்திருக்கிறேன். வருவாய் கோட்டாட்சியரை சந்திக்க வேண்டும்’’ என்று சொன்னேன். ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின் சென்று சந்தித்தேன். சுருக்கமாக - மிகச் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவர் அந்த கோப்பினை முழுமையாகப் பார்த்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி கேட்டுக் கொண்டிருப்பதன் பேரில் இங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தேன். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச நியாயத்தை எதிர்பார்ப்பதாகக் கூறி விட்டு நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரும்பி வந்து விபரம் தெரிவித்து அவரிடம் விடை பெற்றேன். 

ஒரு புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த குழந்தைகளும் பெண்களும் நீரூற்றி வளர்த்த - பல நூறு பேருக்கு நிழல் அளித்து வந்த - வேம்பு, மலைவேம்பு, புங்கன் ஆகிய மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்டுள்ளன. மக்கள் தெரிவித்த எதிர்ப்பு துச்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் எத்தனை அடர்த்தியும் தீவிரமும் கொண்டது என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவார்கள். நிகழ்ந்த பிழை உரிய பிழையீடால் சமன் செய்யப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. 

14 மரங்கள் விஷயத்தில் ஒரு குறைந்தபட்ச நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போதும் இருக்கிறது.