Sunday 15 January 2023

பயிற்சி

வழக்கறிஞர் தொழிலை ‘’பிராக்டிஸ்’’ என ஏன் கூறுகிறார்கள் என்பதை சமீப நாட்களில் அனுபவபூர்வமாக புரிந்து கொண்டேன். அவர்களுடைய பணி என்பது  காகிதத்தில் எழுதுவதை  அடிப்படையாய்க் கொண்டது. அது ஒரு அடிப்படையான பணி. அதன் மேல் அவர்கள் நிகழ்த்தும் வாதம் அமையும். எழுத்து பேச்சு என்னும் இரண்டு விஷயங்களுமே அவர்கள் பணிக்கு முக்கியம். காகிதத்தில் எழுதுவதில் முறைமை என்பது முக்கியமானது. திரும்பத் திரும்ப எழுதப்படுவது. 

மனுக்கள் தயாரிக்கும் போது அனுப்புநர் , பெறுநர் என தட்டச்சிடும் போது எத்தனை மனுக்கள் என்று தோன்றும். அவ்வாறு தோன்றுவதை பயிற்சியின் மூலமாகவே கடக்க முடியும். கடந்த ஓராண்டாக ஏகப்பட்ட மனுக்கள் தயாரித்து அனுப்பியிருக்கிறேன். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் , தகவல் பெறும் உரிமைச் சட்டம் என கடந்த ஓராண்டாக தொடர்ந்து பல விஷயங்களுக்கு அனுப்பிக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு முறை மனு தயாரிக்கும் போதும் அந்த மனுவின் எழுத்து வடிவத்திலேயே அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்த்திட முனைவேன். 

பல மனுக்களை அனுப்பியவன் என்ற முறையில் தமிழ்நாடு மாநில அரசாங்கம் மனுக்களை அணுகும் விதத்தில் ஒரு நடைமுறைப் புரிதல் எனக்கு உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மனு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டால் அது சற்றேனும் கவனத்துடன் அணுகப்படுகிறது என்பதே அந்த புரிதல். ஏதோ ஒரு விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு மனு அரசாங்க ஊழியர்களுக்கு நீதிமன்றத்தை நினைவு படுத்தி விடுகிறது. எனவே சற்று கவனம் அளிக்கப்படுகிறது என நினைக்கிறேன். அது என் பிரமையாகவும் இருக்கலாம். எந்த மனுவையுமே அரசு ஊழியர்கள் பெரிதாகக் கருதுவதில்லை என்பதே உண்மை. 

மாநில அரசு ஊழியர்கள் தங்களை முற்றிலும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டு ஒரு குறுங்குழுவாகத் தங்களை கருதிக் கொள்கின்றனர். ஓர் அரசு அலுவலகத்துக்கு வருகை புரியும் நாட்டின் குடிமகனுக்கு அளிக்க வேண்டிய எளிய மதிப்பைக் கூட அவர்கள் அளிப்பதில்லை. பொதுமக்கள் ஏன் தங்கள் அலுவலகத்துக்கு வருகிறார்கள் என்பதே அவர்கள் விசனமாக இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் கூறும் இந்த விஷயம் 99 சதவீத உண்மை. 1 சதவீதம் விதிவிலக்கானவர்கள் இருக்கலாம். எனினும் விதிவிலக்காக இருக்கும் அரசு ஊழியர்களுக்கும் நான் கூறுவது உண்மை என்பது என்னை விட நன்றாகவே தெரிந்திருக்கும். 

14 மரங்கள் விஷயமானாலும் பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரம் விஷயமானாலும் நாம் மெல்ல முன்னேறி விஷயத்தின் மையப்புள்ளியை நெருங்கி விட்டோம் என்பதே உண்மை. 

இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்பது வழக்குகள் விஷயத்தில் முக்கியமான ஒன்று என்று தோன்றுகிறது. அரசு ஊழியர்கள் நாட்களை நகர்த்தினால் பொது விஷயங்களில் மனு செய்பவர்கள் சோர்ந்து விடுவார்கள், அதன் பின் அதனைத் தொடராமல் விட்டு விடுவார்கள் என எண்ணுகிறார்கள். நாம் நியாயம் என உணர்ந்த விஷயம் ஒன்றுக்காக செயல்படுகிறோம் என்னும் போது இந்த விஷயங்களில் சோர்வு என்பது இல்லை. விஷயம் எந்த கட்டத்தை அடைந்துள்ளது என்னும் அவதானம் மட்டுமே உள்ளது. 

இந்த விஷயங்களால் சட்டம் தொடர்பாக சட்டம் சார்ந்த பணிகள் தொடர்பான பயிற்சியைப் பெற முடிந்திருக்கிறது.