Sunday 15 January 2023

தார்மீக வெற்றி - இரண்டாம் படி

 

ஆறு மாதங்களுக்கு முன்னால் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் இருந்த நூறு பேருக்கு மேல் அமரும் நிழல்பரப்பு கொண்ட உயிர்மரம் ஒன்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் வெட்டி விற்பனை செய்யப்பட்டது. நான் அந்த ஊரின் கிராம நிர்வாக அதிகாரிக்கு புகார் அனுப்பினேன். அந்த புகாரின் நகலை வருவாய் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித் துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்தேன். 

அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற விபரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரினேன். வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அதிகாரி அந்த மரம் அப்படியே உள்ளது என பதில் அனுப்பினார். தவறான திசை திருப்பும் பதிலை அவர் அளித்ததாக மாநிலத் தகவல் ஆணையத்திற்கு அவர் மீது ஒரு புகாரை அனுப்பினேன். 

அரசாங்க நிலமான சாலை, அரசுக் கட்டிட வளாகங்கள், தெரு ஆகியவற்றில் உள்ள எந்த உயிர்மரம் வெட்டப்பட வேண்டும் என்றால் அதற்கு வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர் இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு மரத்தின் பொருள் மதிப்பை நிர்ணயித்து அதற்கு மேல் ஒரு மடங்கு தொகையைச் சேர்த்து அந்த பணத்தை அரசாங்கக் கணக்கில் செலுத்தச் சொல்வார். அவ்வாறு செலுத்தப்பட்ட பின் அந்த உயிர்மரத்தை வெட்ட உத்தரவு வழங்குவார். இத்தனை நடைமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதே ஓர் உயிர்மரம் எக்காரணம் கொண்டும் சுயநலம் படைத்தவர்களால் வெட்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே. 

இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசின் CPGRAMS என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்தேன். அதன் விளைவாக வருவாய் கோட்டாட்சியர் உயிர்மரம் வெட்டப்பட்ட பள்ளியின் வளாகத்தை நேரடியாகப் பார்வையிடச் சென்றார். பார்வையிட்டு அங்கே விசாரணை மேற்கொண்டு அந்த மரம் வெட்டப்பட்டுள்ளது என்றும் அந்த மரத்தை வெட்டியது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்றும் பதிவு செய்து மரக்கிரயத்தையும் உரிய அபராதத்தையும் அரசுக்கணக்கில் செலுத்திட ஆவன செய்யுமாறு வட்டாட்சியருக்கு உத்தரவு இட்டு ஆணை பிறப்பித்தார். இது இந்த விஷயத்தில் கிடைத்த முதல் தார்மீக வெற்றி ஆகும். 

சில நாட்களுக்குப் பின் , வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி அபராதம் விதிக்கப்பட்டு அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டதா என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விபரம் கோரினேன். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் , வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் இரண்டிலும் விபரம் கேட்டேன். இரண்டு அலுவலக பொது தகவல் அதிகாரிகளும் முப்பது நாள் காலக்கெடு கடந்தும் பதில் அளிக்கவில்லை. மேல்முறையீட்டு அலுவலர்களான வருவாய் கோட்டாட்சியர் , வருவாய் வட்டாட்சியர் ஆகியோரிடம் முதல் மேல்முறையீடு செய்தேன். அபராதம் செலுத்தப்பட்ட படிவத்தின் நகல் ஓரிரு நாட்களுக்கு முன்னால் எனக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது . மரத்தின் மதிப்பு என ரூ. 500 நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1000 தொகை அரசுக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தொகை செலுத்தியவர் பெயர் என்பதில் ‘’ தலைமை ஆசிரியர்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்த விஷயத்தில் மிக முக்கியமான ஒரு ஆவணம். 

வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25,000 இருக்கக் கூடும் என்பதை ஆறு மாதங்களுக்கு முன்னால் கிராம நிர்வாக அதிகாரிக்கு அனுப்பிய மனுவிலேயே குறிப்பிட்டிருந்தேன். 

இப்போது மூன்று கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மனுவை தயார் செய்துள்ளேன். முதல் கோரிக்கை : சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரண்டாம் கோரிக்கை : மரத்தின் மதிப்பை குறைத்து நிர்ணயம் செய்துள்ள வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மரத்தை வெட்டியவருக்கு சட்டத்துக்குப் புறம்பான வகைகளில் செயல்பட்டு உதவியுள்ளனர் ; அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதற்கு அவர்கள் அடைந்த சுயலாபமே காரணமாக இருக்க முடியும் எனவே அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை தேவை. மூன்றாவது கோரிக்கை : வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு ரூ.25,000 க்கு மேல் இருக்கக் கூடும். ஆனால் ரூ.500 என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகளின் துணை கொண்டு வெட்டப்பட்ட மரத்தின் உண்மை பொருள் மதிப்பைக் கண்டற்ந்து உரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும். 

நியாயம் நிகழும் வரை நாம் தொடர்ந்து நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருப்போம்.