Friday, 13 January 2023

கங்கையும் காவிரியும்

தமிழ்நாட்டில் எவருடைய பெயராவது வேம்பு என இருந்தால் அவருக்கு அந்த பெயர் இடப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கும். அதாவது , ஒரு தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகள் அடுத்தடுத்து குறைந்த ஆயுளில் இறந்து போகுமேயானால் தெய்வத்திடம் அத்தம்பதிகள் அடுத்து தங்களுக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு வேம்பு எனப் பெயரிடுகிறோம் ; வேப்ப மரம் தெய்வத்துக்கு மிகவும் பிரியமானது ஆனதால் இனிப் பிறக்க உள்ள குழந்தை மேல் வேப்ப மரத்தின் மேல் தெய்வம் எத்தனை பிரியம் காட்டுகிறதோ அந்த பிரியத்தின் ஒரு சிறு பகுதியை அந்த குழந்தை மேல் அளித்து தெய்வம் அதனைக் காக்க வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்வார்கள்.  தமிழ்நாட்டில் வேம்பு என்ற பெயர் ஆண்களுக்கும் இடப்படுகிறது ; பெண்களுக்கும் இடப்படுகிறது என்பதற்கான காரணம் இதுவே. ஆச்சர்யப்படும் வகையில் இந்த வழக்கம் வங்காளத்திலும் உண்டு. வங்க மொழியில் வேப்ப மரத்தின் பெயர் நிமாய். அங்கே நிமாய் என்ற பெயர் கொண்டவர்கள் அதிகம் இருப்பார்கள். சைதன்ய மகாபிரபுவின் பூர்வாசிரமப் பெயர் நிமாயி என்பதாகும். 

தமிழ்நாட்டுக்கும் வங்காளத்துக்கும் மேலும் பல ஒப்புமைகள் உண்டு. குறிப்பாக சோழ தேசத்துக்கும் வங்காளத்துக்கும் என்று சொல்ல முடியும். இரண்டு நிலப்பகுதிகளுமே நதிக்கரையில் அமைந்த பகுதிகள். பெருநதி அதன் கிளைநதிகள் இவற்றால் உண்டான வண்டல் மண்ணால் செழுமையடைந்த பகுதிகள். நீளமான கடற்கரையைக் கொண்டவை. வைணவம், சாக்தம், சைவம் ஆகிய வழிபாட்டுமுறைகள் நிலைபெற்றவை. நதிநீரைக் கொண்டு வேளாண் பாசனம் செய்யும் முறைகளையும் அதன் விளைவான நல்விளைச்சலையும் அடிப்படையாய்க் கொண்ட சமூகக் கட்டுமானம் அமையப் பெற்றவை. 

இந்திய மொழிகள் செய்யுள் வடிவிலேயே தங்கள் இலக்கியங்களைக் கொண்டிருந்த போது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின் வசன இலக்கியம் உருவாயிற்று. செய்யுள் நடையிலிருந்து வசன நடையை நோக்கி இந்திய மொழிகள் நகரத் தொடங்கின. இந்திய மொழிகளில் வசன இலக்கியப் படைப்புகளான சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவை எழுதப்படலாயின. கல்கத்தா பிரிட்டிஷ் அரசின் தலைநகர் என்பதால் வங்காளத்தில் நாவல், சிறுகதை ஆகியவை கணிசமாக எழுதப்பட்டன. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டு வெளியாயின. சுவாமி விவேகாந்தர் தனது ஞான ஆசானின் சொற்களை தனது கூர்மையான மொழியில் உலகுக்கே பறைசாற்றினார். ஸ்ரீராமகிருஷ்ண மடம் இந்திய மறுமலர்ச்சிக்காக பெரும் பணி புரியத் தொடங்கியது. இதே காலகட்டத்தில் சுவாமி தயானந்தரின் ஆர்ய சமாஜ் இந்தியாவின் மைய நிலப்பகுதியில் தேச விழிப்புணர்வுக்காக செயலாற்றத் தொடங்கியது. 

கவி ரவீந்திர நாத் தாகூர் வங்கத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையாவார். அவருடைய ‘’சாந்தி நிகேதனம்’’ வங்கத்தின் கலை - நுண்கலை - பண்பாட்டு மையமாக உருவெடுத்தது. இன்று வரை சாந்தி நிகேதனம் இந்தியாவின் கலைக்கும் நுண்கலைக்கும் அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது. 

இந்திய தேசிய இயக்கம் மிகத் தீவிரம் கொண்டிருந்த மாநிலங்களில் வங்கமும் ஒன்று. தேசியவாதிகளின் பெரும் நிரையை வங்கம் இந்தியாவுக்கு அளித்தது. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் பிரவேசித்த பின் , இந்திய இளைஞர்களுக்கு அவர் ஓர் அறைகூவல் விடுத்தார். இந்திய கிராமங்களுக்குச் சென்று இந்திய நாட்டின் ஆன்மாவை ஆக சாத்தியமான வழிகளிலெல்லாம் கண்டடையுமாறு கூறினார். நாடெங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த அறைகூவலால் - அதில் இருந்த இலட்சியவாதத்தால் - ஈர்க்கப்பட்டு கிராமங்களை நோக்கிச் சென்றனர். அந்த பெரும் திரள் இளைஞர்கள் இந்திய கிராமங்களில் உணர்ந்த நாட்டின் ஆன்மாவை பின்னாட்களில் தங்கள் அத்தனை சமூக - கலை - நுண்கலைச் செயல்பாடுகளிலும் மையப்புள்ளியாகக் கொண்டனர். அப்போது உருவான அந்த அலையின் தாக்கம் இன்று வரையும் கலை - நுண்கலை தளத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. 

இந்தியாவின் ஆன்ம சாரத்தை நோக்கிக் குவியும் வங்கப் படைப்பாளிகள் பலர். அவர்களில் மிக முக்கியமானவர்களாக தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷண் பந்தோபாத்யாய, ஆஷா பூர்ண தேவி , மைத்ரேயி தேவி ஆகிய படைப்பாளிகளைக் குறிப்பிட முடியும். 1940களில் வங்க மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை நேரடியாக வங்க மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு த. நா. குமாரசுவாமி , த. நா. சேனாபதி ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் வாழ்நாள் பணியாக மொழிபெயர்த்து வெளியிட்டனர். விடுதலைக்குப் பின்னான கால கட்டத்தில் வங்க எழுத்தாளர்கள் பலர் தமிழ் வாசகர்கள் மனத்தில் தமிழ் எழுத்தாளர்களாகவே பதிவாகி இருந்தனர். சரத் சந்திரர் தமிழில் பொது வாசகர்களால் மிக அதிகம் வாசிக்கப்பட்ட எழுத்தாளர். 

வங்கத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள இன்னொரு முக்கியமான தொடர்பு என்பது ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆகும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைத் தமிழ் மொழியில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வங்க மொழியைக் கற்ற தமிழறிஞர் சுவாமி சித்பவானந்தர் ஆவார். சுவாமி சித்பவானந்தரின் ‘’பகவத் கீதை’’ உரை மிகவும் பிரபலமானது. கீதையின் ஒவ்வொரு சுலோகத்துக்கும் பொருள் கூறும் போது ஸ்ரீராமகிருஷ்ணரின் பொருத்தமான உபதேசங்களையும் கதைகளையும் கொண்டு விளக்கம் அளித்திருப்பார். கிருஷ்ணரின் சொற்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் விளக்கம் என்பது அத்வைதம் பரிணமித்து வந்த பாதையை மிகத் தெளிவாக உணர்த்துவது என்ற அடிப்படையில் அந்த பணி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

தாராசங்கர் பானர்ஜி, விபூதி பூஷண் பந்தோபாத்யாய, மாணிக் பந்தோபாத்யாய, ஆஷா பூர்ண தேவி, மைத்ரேயி தேவி, அதீன் பந்தோபாத்யாய ஆகிய வங்கப் படைப்பாளிகளின் படைப்புகள் தேசிய புத்தக நிறுவனத்தாலும் சாகித்ய அகாடெமியாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படைப்புகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் கிண்டில் போன்ற வடிவங்களில் வெளியாகும் என்றால் அது தமிழுக்கும் தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் பெரும் பயன் அளிப்பதாய் இருக்கும்.