சூரியன் நாம் தினமும் கண்களால் காணும் கடவுள். நமது வாழ்க்கைக்கு உயிராக இருப்பவன். நம்மை எப்போதும் வாழ்விப்பவன். நம் எண்ணங்களை விருப்பங்களை கனவுகளை தன் அருளால் நடத்தித் தருபவன். யோக மரபு அவனை வணங்குவதை ‘’சூர்ய நமஸ்கார்’’ என்னும் வணக்க முறையாகவே வகுத்திருக்கிறது. குமரியிலிருந்து இமயம் வரை லட்சக்கணக்கான சாதகர்கள் தினமும் சூரியனை நமஸ்கரிக்கிறார்கள். ஆற்றலும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்றவன் கதிரவன். ஆற்றலை வேண்டுவோர்க்கும் கருணையை வேண்டுவோர்க்கும் தன் அருளின் கிரணங்களால் ஆசியளிப்பவன் கதிரவன்.
செயல் புரியும் கிராமத்தில் , ஆடி மாதத்தில், இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக அங்குள்ள விவசாயக் குடும்பங்களுக்கு பூசணி, பீர்க்கன், சுரைக்காய், பரங்கி, வெள்ளரி, பாகல் ஆகிய நாட்டுக் காய்கறிகளின் விதைகளை வழங்கினேன்.
அந்த கிராமத்தில் ஒரு நண்பர் 15 நந்தியாவட்டை செடிகள் வேண்டும் எனக் கேட்டிருந்தார். அவருக்கு அவற்றை வழங்க ஒரு பெரிய துணிப்பையில் எடுத்துக் கொண்டு சென்றிருந்தேன். எதிரில் சிலர் இரு சக்கர வாகனங்களில் பின்னிருக்கையிலும் இரு பக்கங்களிலும் பெரிய பெரிய சாக்குப் பைகளை வைத்துக் கட்டிக் கொண்டு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கண்டேன். அவ்வாறு மூட்டைகள் செல்வதைப் பார்த்தவாறு நண்பருடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். நண்பர் வீட்டில் இல்லை ; வெளியூர் சென்றிருந்தார். அவருடைய வீட்டில் உள்ளவர்களிடம் விபரம் கூறி விட்டு நான் புறப்பட்டேன். வழியில் ஒரு மளிகைக்கடை. அதன் உரிமையாளர் எனது நண்பர். அவருடைய கடைக்குச் சென்றேன்.
நண்பர் என்னிடம் கேட்டார். ‘’ சார் ! மூட்டை மூட்டையா டூ வீலர்ல எடுத்துட்டுப் போறாங்களே அதெல்லாம் என்னன்னு தெரியுதா ?’’ என்னால் யூகிக்க முடியவில்லை.
‘’ஆடி மாசம் பூசணி, பீர்க்கன், சுரைக்காய், பரங்கி , வெள்ளரி , பாகல் விதை கொடுத்தீங்கள்ள சார். அது தான் இப்ப மார்கழில காய்ச்சிருக்கு. பொங்கலை ஒட்டி டவுன்ல இருக்கறவங்க நாட்டுக் காய்கறி வாங்குவாங்க. அதனால டவுன் காய்கறி மார்க்கெட்டுக்கு சேல்ஸ் பண்ண எடுத்துட்டு போறாங்க’’
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த முறை காய்கறி விதைகளைக் கொடுத்த போது மக்கள் விதைத்து இரண்டு நாளில் பெருமழை பெய்தது. சிலர் அந்த பெருமழைக்குப் பின்னால் விதைத்தனர். சிலர் விதைத்த அடுத்த தினமே பெருமழை. அவ்வாறு விதைக்கப்பட்ட விதைகள் முளைத்தெழுந்ததில் சில சிக்கல்கள் இருந்தன. இரண்டு தினத்துக்குப் பின் விதைத்தவை நன்றாக முளைத்து சிறப்பாக வளர்ந்தன.
கிராமத்தில் பணி புரியும் போது ஒரு விஷயத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ள முடிகிறது. நமது மரபு என்பது என்பது விவசாயம், விதைத்தல், நீர் வார்த்தல், அறுவடை, விவசாயத்தின் காலக்கணிதம், உரங்களின் தன்மை, மருத்துவ அறிவு என அனைத்தும் உள்ளடிக்கியது. பலவகையிலும் மரபைக் காப்பதிலும் மேலும் மேலும் வளர்ப்பதிலுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுவே நம் முன்னோருக்கு நாம் செய்யும் கைம்மாறு. மரபு மீதான அவநம்பிக்கை உண்டாக்கப்படுவதால் பெரிதும் பாதிப்புக்குள்ளாவது நம் நாட்டின் அடித்தட்டு விவசாயிகளே.
இந்த நாட்டு விதைகளின் வளர்ச்சி கிராமத்துக்கு மேலும் நாட்டு விதைகளை வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியுள்ளது.