Monday, 2 January 2023

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

மானுட வாழ்க்கையில் அடிப்படையான முக்கியமான இரு அம்சங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. உணர்வு மற்றும் தர்க்கம். இன்னும் நுண்மையாக நோக்கினால் இவை இரண்டும் சாதாரண கண்களுக்குப் புலப்பட்டு விடாத நுண் இழைகளால் வெவ்வேறு முறைகளில் இணைக்கப்பட்டே உள்ளன. எனினும் மிகப் பெரும்பான்மையான மானிட நிரை அவற்றைப் பிரித்து வைத்தே தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்கிறது. உணர்வு , தர்க்கம் இவற்றின் இணைப்பைப் புரிந்து கொள்வது என்பது தொலைதூரத்திலிருந்து காற்றில் வரும் இன்மணத்திலிருந்து அந்த மணத்துக்குரிய மலரை அறியும் திறனைப் போல ; உணர்வு , தர்க்கம் ஆகியவற்றை தனித்தனியே புரிந்து கொள்வது என்பது கண்களால் காணும் ஒரு மலை உச்சியை அடிவாரத்திலிருந்து ஏறிச் சென்று அறிவதைப் போல. 

நவீன தமிழ் இலக்கியத்தின் பொதுக் கூறுகளில் ஒன்று, சிறுகதையின் வடிவ கச்சிதம் மேல் பெரும் கவனம் கொண்டிருப்பது. கவிதை என்னும் இலக்கிய வெளிப்பாடு வகுக்கப்பட்டிருக்கும் எல்லா வடிவங்களையும் பல முறையோ அல்லது எல்லா முறையோ மீறிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தன் இயல்பாய் கொண்டிருக்கிறது. எனினும் தமிழ்ச் சிறுகதைகள் பொதுவாக முழுமையாக வடிவத்துக்குள் அடங்கி விட வேண்டும் என்ற சுயகட்டுப்பாட்டை ஒரு விதியாகக் கொள்கின்றன. வடிவத்தில் கச்சிதமான ஒரு சிறுகதையே சிறந்த சிறுகதையாக இருக்க முடியும் என்ற மௌன நிபந்தனையும் தமிழில் உள்ளது. இந்த நிபந்தனை மானுட வாழ்வின் - அதன் ஒரு கூறான தமிழ் வாழ்வின் - அரிய மானிட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான வாழ்க்கை சந்தர்ப்பங்களை நிகழ்வுகளை உணர்வுகளை தமிழ்ச் சிறுகதையின் பரப்புக்குள் கொண்டு வர இயலாமல் போகிறதோ என்ற ஐயம் உண்டாகிறது. இந்த கூற்றுக்கு விதிவிலக்காக உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் சிறுகதைப் படைப்பாளிகளும் தமிழில் உண்டு. வடிவ கச்சிததம் மேல் தீவிர ஈடுபாடு காட்டிய படைப்பாளிகளும் அவர்கள் சிறுகதைகளில் - அரிய மானிட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட மகத்தான வாழ்க்கை சந்தர்ப்பங்களை நிகழ்வுகளை உணர்வுகளை எழுதிய சிறுகதைகளே அவர்களின் ஆகச் சிறந்த படைப்புகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது ஒரு நகைமுரண். 

ஒரு சிறுகதையை வாசிக்கும் போது அதன் உணர்வுநிலை என்ன என்பதே அச்சிறுகதையுடன் என் முதல் தொடர்பாக இருக்கும். உணர்வின் அம்சம் அளவில் மிகச் சிறிதாகவும் அதனை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்லும் வடிவப் பிரக்ஞை கொண்ட சிறுகதைகளையும் வாசித்துப் புரிந்து என் அகத்தில் வகுத்துக் கொள்வேன் எனினும் உணர்வைத் தீவிரமாக முன் வைத்து மானுட அகத்துடன் உரையாடும் ஒரு இலக்கியப் படைப்பை நான் எனக்கான படைப்பாக எண்ணுவேன். வடிவ கச்சிதம் கூடிய உணர்வின் அம்சத்தை தர்க்கபூர்வமாக மிகச் சிறிதாக வைத்திருக்கும் சிறுகதைகள் மேல் எனக்கு எந்த புகாரும் இல்லை. நான் அவற்றைப் புரிந்து கொள்கிறேன். எனினும் நான் ஈர்க்கப்படும் படைப்புகள் மானுட உணர்வுகளை மானுட உணர்வுத் தத்தளிப்புகளை மானுட மேன்மையை மானுடத்தை எழுதும் படைப்புகளே. 

நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் இருக்குமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற’’ வர்களுக்கு சமர்ப்பிக்கிறான். அஜிதன் தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் அளிக்கும் படைப்புகளை அளிப்பார் என அவரது முதல் நாவல் ‘’மைத்ரி’’யும் முதல் சிறுகதை ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ கட்டியம் கூறுகின்றன. 

ஒரு சிறுகதை குறித்து ஒரு நாவல் குறித்து எழுதும் போது அதன் கதையை சொல்லாமல் அதன் வாசிப்பனுபவத்தை எழுத வேண்டும் என்ற சுயநிபந்தனையை எனக்கு விதித்துக் கொண்டவன் நான். எனது வாசிப்பனுபவப் பகிர்வு அந்த சிறுகதையை நாவலை வாசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாசகனுக்கு உண்டாக்க வேண்டுமே தவிர நான் சிறுகதையை நாவலைக் காணும் கோணம் வாசகனின் வாசிப்புக்கு முன்னால் அவன் மனத்தில் பதிவாக வேண்டாம் என எண்ணுவேன்.

 ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’  கதைத்தன்மை மிகுந்த சிறுகதை. சிறுகதை ஆசிரியர் அஜிதன் இந்த சிறுகதைக்குள் வாசகன் கற்பனை செய்து நிரப்பிக் கொள்ள வேண்டிய உள்கதைகளை கதைக்குள் வைத்திருக்கிறார். 

ஜஸ்டினும் சகாயமும் உள்ளூர்க் கேடிகளாக உருவாகி வருகிறார்கள். ஜஸ்டினின் தந்தை ரௌடிகளால் கொல்லப்பட்டவர். அந்த சம்பவம் ஜஸ்டினை ரௌடியிசத்துக்குள் கொண்டு வருகிறது. ஆயுதத்தின் வல்லமை மெல்ல மெல்ல பிடிபட்டு ஆயுதம் முழுதும் கை வரும் நிலைக்கு குறைந்த காலத்தில் உயர்கிறான் ஜஸ்டின். ஜஸ்டினின் முதலாளி ஒரு நபரை அடையாளம் சொல்லி அவனைக் கொல்லுமாறு கூறுகிறார். இலக்கை வேவு பார்க்கிறார்கள். ஜஸ்டினுக்கும் சகாயத்துக்கும் தோதான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இலக்கு சபரிமலைக்கு மாலை போட்டிருப்பது ஜஸ்டினின் கண்ணில் படுகிறது. ‘’சாமிக்கு மாலை போட்டிருப்பவனை எப்படி கொல்வது?’’ என்ற தயக்கம் ஏற்பட்டு கொல்லாமல் விட்டு விடுகிறான். ஜஸ்டினின் முதலாளி எரிந்து விழுகிறார். ஜஸ்டினையும் சகாயத்தையும் திறனற்றவர்கள் என வசை பாடுகிறார். நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன. முதலாளி கொலை வெறியை மறந்து தனது அன்றாடத்துக்கு முழுமையாகத் திரும்பி விடுகிறார். இப்போது ஜஸ்டினுக்கு இலக்கைக் கொல்ல எந்த பிரத்யேக கட்டளையும் இல்லை. இலக்கு சபரிமலை சென்று திரும்புகிறது. வேவு பார்த்தலை ஜஸ்டின் நிறுத்தவில்லை. வசமான இடம் ஒன்றில் ஜஸ்டின் கொலைக்கருவியுடன் இருக்கும் போது இலக்கு அங்கே வந்து சேர்கிறது. அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. கொலை செய்ய வேவு பார்க்க அத்தனை நாள் எடுத்துக் கொண்டதற்கான பலன் ஜஸ்டினுக்குக் கிடைக்கிறது. கொலைக்கருவி ஜஸ்டினை அந்த கணம் ஆட்கொள்கிறது. 

ஜஸ்டின் வாழ்வில் கொலைக்கருவிக்கு அவன் ஆட்பட்ட கணம் முக்கிய கணமாகி விடுகிறது. நியாயத் தீர்ப்பு நாள் வருகிறது.  மனித குமாரன் அவனுக்குத் தீர்ப்பளிக்கிறான். 

அஜிதனின் முதல் சிறுகதையை கதைத்தன்மை மிக்க எனினும் வடிவ கச்சிதமும் பொருந்திய சிறுகதை என்று சொல்ல முடியும். ரௌடிகளின் வாழ்க்கை என்பது கதைக்களனுக்கான ஒரு நிமித்தம் என்றே சொல்ல முடியும். எது சரி எது தவறு என்பதிலும் எந்த முடிவை எடுப்பது என்பதிலும் தெளிவின்றி குழம்பும் எல்லா மானுடர்களின் சங்கடங்களுக்கும் இந்த சிறுகதையை விரிவாக்கிக் கொள்ள முடியும். 

சிறுகதையில் ஜஸ்டினை யாராலும் முழுதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கூடவே இருக்கும் சகாயத்தால். முதலாளியான மாமாவால். ஜஸ்டினால். ஏன் கதையை வாசிக்கும் வாசகனால் கூட ஜஸ்டினை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இலக்கைக் கொல்ல வாய்ப்பிருந்தும் இலக்கு சபரிமலைக்கு மாலை போட்டிருப்பதால் அழிக்காமல் விடுகிறான். ஆனாலும் வேவு பார்த்தலை அவன் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறான். மாமா விஷயத்தை மறந்து விட்டார் எனவே வேவு பார்க்க வேண்டாம் என சகாயம் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். ஜஸ்டின் செய்த பாதகத்துக்குக் கிடைத்த நியாயத் தீர்ப்பு என்ன என்பதே சிறுகதை. 

அஜிதன் ‘’மைத்ரி’’ நாவல் முன்னுரையில் தமிழில் தொடர்ந்து இயங்குவது தனக்கான மார்க்கம் எனத் தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதனை மறுபரிசீலனை செய்து ’’ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும் ‘’ வழியாக மறுவருகை புரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.