Saturday, 21 January 2023

பஞ்ச தந்திரக் கதைகள் : உலகியலும் வாழ்க்கையும்

உலகியல் என்பது பெரியது. மிகப் பெரியது. மனிதர்கள் உலகியலையே வாழ்க்கை என்று கருதுகின்றனர். அது உண்மையும் கூட. உலகியலுக்கு அப்பால் உள்ள விஷயங்கள் கோடியில் ஒருத்தருக்கே அனுபவமாகின்றன. உலகியலை மனிதர்கள் தங்கள் விவேகத்தால் இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்திய ஞானம் பிரத்யட்சம் , அனுமானம் , சுருதி என மூன்று விதமான அறிதல் முறைகளைக் கூறுகிறது. ஒரு விஷயத்தை நேரடியாகக் கண்டு செய்து பார்த்து புரிந்து கொள்வது பிரத்யட்சம். காணும் ஒன்றுடன் காணாத ஒன்றை யூகித்துப் புரிந்து கொள்வது அனுமானம். முன்னோர் அறிவுரை என்பது சுருதி எனப்படுவது. இந்த மூன்று முறைகளுமே அறிதல் நிகழ்வதற்கு மானுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கருவிகள். இவை அனைத்தின் துணை கொண்டு மானுடன் ஞானம் பெற வேண்டும் என்பதே இந்திய மரபின் நோக்கம்.  

மூன்று அரசகுமாரர்கள் அறிவில் அறிதலில் ஆர்வமின்றி எதிலும் ஆர்வம் இன்றி சோம்பியிருக்கின்றனர். அரசன் அவர்கள் மனநிலை குறித்து பெரும் கவலை கொண்டு இவர்களுக்கு வாழ்க்கையின் சாரத்தையும் வாழ்க்கையின் தன்மையையும் வாழ்க்கையை எந்த எந்த விதங்களில் வகுத்துப் புரிந்து கொள்வது என்பதையும் குறுகிய காலத்தில் எவ்விதம் சொல்லித் தருவது என்பதற்கான முறைகளைப் பரிசீலிக்கும் போது விஷ்ணுசர்மன் என்பவர் இந்த மூன்று அரசகுமாரர்களுக்கும் லௌகிக வாழ்வை கதைகள் மூலம் சொல்லித் தருவதாகக் கூறுகிறார். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணுசர்மனிடம் மாணவர்களாக சேர்கிறார்கள். 

கதை கேட்பது என்பது மூளையை துடிப்புடன் இயங்கச் செய்யும் ஒரு வழிமுறை. கதை கேட்கும் போது செவிப்புலனைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி மனதைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி கதைசொல்லி கதையைச் சொல்லும் முறையைக் கவனிப்பதால் பார்வை தொடர்பான மூளையின் பகுதி ஆகிய்வை துரிதமாக செயல்புரியத் தொடங்குகின்றன. செயலூக்கம் கொண்ட மூளை சோம்பலிலிருந்து வெளியேறுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைகிறது. 

விஷ்ணுசர்மன் கதைகளைக் கேட்ட அரசகுமாரர்கள் உலகியலைப் புரிந்து கொண்டு செயலாற்றத் துவங்கினார்கள் என்பதாக பஞ்சதந்திரக் கதைகள் கூறுகிறது. உண்மையில் , இந்த அரசகுமாரர்கள் கதையே தன்னளவில் சிறந்த பஞ்ச தந்திரக் கதைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. 

சிறு வயதில் வாசித்தது எனினும் மீண்டும் இப்போது வாசித்த போது மிகவும் ஆர்வமாகவும் சுவாரசியமாகவும் உபயோகமானதாகவும் இந்த கதைகள் இருந்தன. இந்த கதைகள் பத்து வயதிலிருந்து இருபத்து ஒரு வயது வரையான மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. இந்த காலகட்டம், குழந்தைகளைப் பெற்றோர் அரண் போல் சூழ்ந்து காக்கும் காலகட்டம். யாராக இருந்தாலும் எந்த இளைஞனும் இருபத்து ஒரு வயதுக்கு மேல் சமூகத்தை உலகியலை நேரடியாக எதிர்கொண்டே ஆக வேண்டும். அதற்கு இந்த கதைகள் மிகவும் துணை செய்யும். மேலும் இன்று உலகில் உணவு, உடை, உறையும் ஆகிய அடிப்படைத் தேவைகள் உலகின் எந்த வரலாற்றுக் காலகட்டத்தை விடவும் இன்று மக்கள் அதிகம் பேருக்கு சாத்தியம் ஆகி உள்ளது ; அதே நேரம் சமூகம் பஞ்சதந்திரக் கதைகளில் வரும் மூன்று அரசகுமாரர்கள் மனநிலையிலும் உள்ளது. எனவே எந்த காலகட்டத்தை விடவும் இன்றைய காலகட்டம் பஞ்சதந்திரக் கதைகள் பெரும் பயன் தரக்கூடியது. 

விஷ்ணு சர்மன் கூறும் ஐந்து சூழ்கைகள் : 1. மித்ரபேதம் 2. மித்ரலாபம் 3. அடுத்துக் கெடுப்பது 4. அடைந்ததை அழிப்பது 5. ஆராயாமல் செய்வது. ஒவ்வொன்றுக்கும் கதைக்குள் கதைக்குள் கதை என விரிந்து சென்று கொண்டே உள்ளது. பஞ்ச தந்திரக் கதைகளின் சிறப்புகளில் ஒன்றாக நான் காண்பது கொக்கு, கிளி, தவளை, பாம்பு, நரி, சிங்கம், ஒட்ட்கம், காகம் , ஆந்தை , ஆமை என பல்வேறு உயிரினங்களை கதாபாத்திரங்களாக வடிவமைத்திருப்பதை. தங்கள் உலகம் வெவ்வேறு உயிரினங்களால் ஆனது என்ற புரிதலை இந்த கதையை வாசிக்கும் சிறார்களுக்கு இவை வழங்கக்கூடும். 

உலகியல் குறித்த அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் கதைகளின் நடுவே வழங்கியிருப்பது தினந்தோறும் உலகியலில் உழலும் சாமானியர்களுக்கு பெரும் உதவியை அளிக்க வல்லது. 

உலகின் ஒட்டு மொத்த தீமையையும் அழிக்கிறேன் என உறுதி பூண்ட ஜனமேஜயனின் வேள்வி ஆஸ்திகனால் தடைப்பட்ட போது வைசம்பாயனர் ஜனமேஜனுக்கு சொன்ன கதையே மகாபாரதம். சூது அழிவைத் தரும் என விதுரர் யுதிர்ஷ்ட்ரனுக்குக் கூறிய கதையே நளசரிதம். சோர்வுற்றிருந்த பீமனுக்கு இராமாயணக் கதையைக் கூறி தேற்றினார் ஆஞ்சநேயர். இந்தியா கதைகளின் தேசம். 

கதைகளின் தேசத்தின் கதைகளில் சுவாரசியமான உபயோகமான கதைகளில் ஒன்று பஞ்ச தந்திரக் கதைகள்.