Wednesday, 4 January 2023

ஒற்றை மதிப்பெண்

மரங்கள் வெட்டப்படும் விஷயத்திற்கு நான் கொடுக்கும் தீவிர கவனம் எனது நண்பர்கள் பலரை சங்கடப்படுத்துகிறது. மென்மையாகவும் சற்று கடுமையாகவும் கூட தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கின்றனர். 

அவர்கள் முதல் காரணமாகச் சொல்வது மரங்கள் வெட்டப்படுவது குறித்து நாம் முறையீடு செய்யும் இடமான அரசாங்க அலுவலகம் அதனை ஒரு முக்கிய விஷயமாகக் கருதாது என்பதுடன் அதனை ஒரு முக்கியத்துவம் இல்லாத விஷயமாகவே கருதும்; அதனால் அது தொடர்பாக தொடர்ந்து செயல்படும் உங்கள் மேல் அதிகாரிகள் அதிருப்தி கொள்வார்கள் என்பது. இரண்டாவது காரணம், உங்கள் நேரத்தை இந்த விஷயம் அதிகமாக எடுத்துக் கொள்ளும் என்பது. மூன்றாவது நண்பர்கள் , நலம் விரும்பிகளின் சொற்களையும் மீறிய செயல்பாடு நண்பர்களின் நட்பில் இடைவெளியை உண்டாக்கும் என்பது. 

மரம் என்பது தன்னளவில் ஒரு உயிர் என்பதுடன் அது பல உயிர்களுக்கு உறைவிடமாக இருக்கிறது. ஒரு மரம் வெட்டப்படும் போது அதில் வசிக்கும் பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றுக்கான உறைவிடமும் இல்லாமல் ஆக்கப்படுகிறது. மரங்கள் வெளியிடும் பிராண வாயுவால் மிகுந்த பலன் அடையக் கூடியது அதனைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களே. ஒரு மரம் அனாவசியமாக வெட்டப்படுவதால் மனிதர்களே முதன்மையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை முக்கியமான விஷயமாக நினைப்பது என்பது அவசியமானதே. ஓர் அரசு அலுவலகம் என்பதை பலர் இணைந்த ஒரு குழுவாகவே நான் எண்ணுகிறேன். சில படிநிலைகளில் அது குறைந்தபட்சம் மூன்று மனிதர்கள் கவனத்துக்காகவாவது செல்கிறது. அதற்கு மேல் அவர்களுடைய மாவட்ட அலுவலகம் இருக்கிறது. மாநில அலுவலகம் இருக்கிறது. எனவே தலைமை அலுவலகத்தின் கவனம் இருக்கும் என்ற நிலையிலாவது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புவதற்கு இடம் உள்ளது. அதனால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் எப்போதும் நம்பிக்கை இழக்க மாட்டேன். அது என் இயல்பு. எந்த சூழ்நிலையிலும் அதனை சீர் செய்ய எனது பங்களிப்பை எவ்வாறு அளிப்பது என்றே யோசிப்பேனே தவிர அதனை விட்டு விட்டு செல்ல மாட்டேன். 

இரண்டாவது விஷயம் என் நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பது. உண்மைதான். ஆனால் நான் அதனை விரும்பியே செய்கிறேன். என் கண்ணில் படும் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் நான் புகார் செய்கிறேன். ஓரிரு நாட்கள் முன் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து தான் புகார் செய்கிறேன். பொது இடத்தில் உள்ள ஒரு மரம் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே செல்ல நேரிட்டதில்லை. அவ்வாறு நேரிட்டால் மரத்தை வெட்டுபவர்களிடம் வெட்ட அனுமதி இருக்கிறதா என்று கேட்பேன். இல்லை என்று கூறினால் மரத்தை வெட்டாதீர்கள் என்று கூறுவேன். அவர்கள் மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டேன். 

மூன்றாவது விஷயம் நண்பர்கள் மனஸ்தாபம் கொள்வார்கள் என்பது. நான் மென்மையான அணுகுமுறையே கையாள்கிறேன் என்பதை நண்பர்கள் அறிவார்கள். வருத்தம் அடைந்தாலும் அவர்கள் விஷயத்தைப் புரிந்து கொள்கிறார்கள். 

பொறியியல் கல்லூரியில் எங்களுக்கு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் கல்லூரியில் பருவத் தேர்வு நடந்து விடைத்தாள்களைத் திருத்தி வகுப்பில் கொண்டு வந்து கொடுக்கும் போது ’’ நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மதிப்பெண்ணாவது எடுக்க வேண்டும். பூஜ்யம் எடுக்கக் கூடாது.   நீங்கள் தேர்வு எழுதிய பாடத்துக்கான வகுப்பு உங்களுக்கு மூன்று மாதம் நடந்திருக்கிறது. வாரத்துக்கு நான்கு பிரிவேளைகள் என மூன்று மாதத்தில் ஐம்பது பிரிவேளைகள் அமர்ந்து இந்த பாடத்தைக் கேட்டிருக்கிறீர்கள். எனவே நீங்கள் பூஜ்ய மதிப்பெண் பெறக்கூடாது. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரை இந்த தேர்வை எழுதச் செய்தாலும் அவர் பூஜ்யம் பெறுவார். அவருக்கும் உங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆகி விடும்’’ என்று கூறுவார். 

மரங்கள் வெட்டப்படும் விஷயத்துக்காக முனைப்பு காட்டுவதில் நான் ஒற்றை மதிப்பெண் பெற்றிருப்பதாகவே எண்ணுகிறேன்.