Tuesday 17 January 2023

உபாயம்

’’பஞ்ச தந்திரக் கதைகள்’’ நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். நூலில் பாதியை வாசித்திருக்கிறேன். மீதியையும் வாசிக்க வேண்டும். முழுதும் வாசித்து விட்டு அந்த நூல் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இன்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை நடைமுறையில் பயன்படுத்திப் பார்த்தேன். அது பெரிய அளவில் எனக்கு முக்கியமான உதவியைச் செய்தது.  அதாவது, அந்த நூலில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது : ஒரு அமைச்சனாக இருப்பவன் ஒரு சிக்கலுக்கு அல்லது ஒரு இடருக்கு உரிய தீர்வினை சமாதானமான வழியின் மூலமாகவே அடைய முயன்றவாறு இருக்க வேண்டும் ; மோதும் போக்கைக் கடைப்பிடிப்பது ஒரு அமைச்சருக்கு உரிய லட்சணம் இல்லை. சமாதானத்துக்கான எந்த இடமும் இல்லை என்றால் மட்டுமே தண்டனை அளிக்கும் முடிவுக்கோ அல்லது மோதலுக்கோ செல்ல வேண்டும். சில நாட்கள் முன் வாசித்த இந்த விஷயம் என் மனதில் நிலை கொண்டிருந்தது. 

இன்று எனது நண்பர் ஒருவருக்கு மின்னணு முறையில் பணம் அனுப்ப வேண்டும். வங்கிகள் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நான்கு நாட்களும் விடுமுறை. சனிக்கிழமை இரண்டாம் சனி என்பதால் விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை வழக்கமாகவே விடுமுறை. மேலும் பொங்கல். திங்கள் மாட்டுப் பொங்கல். செவ்வாய் காணும் பொங்கல். நான்கு நாள் விடுமுறை என்பதால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. ஆதலால் என் கணக்கிலிருந்து மாற்றுவது இயலாது. என்ன செய்வதென யோசித்தேன். அப்போது திடீரென ஒரு ஞாபகம் வந்தது. சனிக்கிழமையன்று பதிவுத்தபால் ஒன்றை அளிக்க வந்த தபால்காரரிடம் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது; அவர் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் மட்டுமே தபால் அலுவலகம் விடுமுறை என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவ்வாறெனில் அங்கு சென்று என்னுடைய அஞ்சலக சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து மின்னணு பண பரிவர்த்தனை மூலம் நண்பரின் கணக்குக்கு பணம் அனுப்பி விடலாம் என முடிவு செய்தேன். 

தொகையை கையில் எடுத்துக் கொண்டு என்னுடைய நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு அஞ்சல் அலுவலகம் சென்றேன். மின்னணு பரிமாற்றம் செய்யும் சாளரத்துக்குச் சென்று விபரம் சொன்னேன். சாளரத்தில் இருந்த பெண்மணி ‘’இன்று அனுப்ப முடியாது . நாளை வாருங்கள்’’ என்றார். ‘’மிகவும் அவசரம். அதனால் தான் வந்திருக்கிறேன். அனுப்பியே ஆக வேண்டும்’’ என்று சொன்னேன். உதவி போஸ்ட் மாஸ்டரை சென்று பாருங்கள் என்று சொன்னார். அவரைப் பார்த்து விஷயத்தை விளக்கினேன். ‘’ சார் ! வழக்கமான ஸ்டாஃப் எல்லாரும் லீவுல இருக்காங்க. வில்லேஜ் போஸ்ட் ஆஃபிஸ்லயிருந்து இன்னைக்கு சில பேர் டெம்ப்ரரியா வந்திருக்காங்க. அவங்களுக்கு பணம் அனுப்பி பழக்கம் இருக்கான்னு தெரியல. அதான் யோசிக்கறன்’’ என்றார். மீண்டும் சென்று மின்னணு பரிமாற்ற சாளரத்தில் உள்ள எழுத்தரைப் பார்க்கச் சொன்னார். மீண்டும் சென்றேன். அந்த எழுத்தர் , ‘’வங்கிகள் விடுமுறை. பணம் அனுப்ப முடியாது ‘’ என்று புதுக்கதை சொன்னார். மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமை வங்கிகள் விடுமுறை . அப்போதெல்லாம் தபால் ஆஃபிஸ் உண்டு. அப்போது பணம் அனுப்ப முடியும் என்றால் இன்றும் அனுப்ப முடியும் என்று பொறுமையுடன் சொன்னேன். வழக்கமான நிலையாக இருந்தால் என மனம் போஸ்டல் சூப்பரிண்டெண்ட்க்கு இங்கே நிகழ்ந்ததைச் சொல்லி கடிதம் அனுப்புவது , சி.பி.கி.ரா.ம்ஸ் ல் புகார் பதிவு செய்வது என யோசித்திருப்பேன். ஆனால் ‘’பஞ்ச தந்திரக் கதைகள்’’ சமீபத்தில் வாசித்திருந்ததால் இந்த எதிர்மறையான சூழலிலும் நாம் சாதிக்க வேண்டியதை சாதிக்க வேண்டும் ; அதுவே உண்மையான வெற்றி என்பதால் பொறுமை காப்பது என முடிவு செய்தேன். அலுவலகத்தின் உள்ளே சென்று தலைமை போஸ்ட் மாஸ்டரை சந்தித்து நிகழ்ந்தவற்றை சொன்னேன். அவர் அப்போதுதான் டிபன் பாக்ஸை தனது மேஜை மேல் வைத்து சாப்பிட அமர்ந்திருந்தார். இன்னும் டிபன் பாக்ஸைத் திறக்கவில்லை. நான் சொன்னதும் என்னுடன் வந்து அலுவலர்களிடம் என்ன விபரம் என்று கேட்டார். மின்னணு பரிமாற்றம் செய்யும் வழக்கமான அலுவலர் இன்று விடுமுறை என்று கூறினார்கள். ஒரு வட இந்திய இளைஞர் தபால் ஆஃபிஸில் எழுத்தராகப் பணி புரிகிறார். அவர் ஆரம்பத்திலிருந்து நடந்ததை அவதானித்துக் கொண்டிருந்தார். அவர் என்னுடைய உதவிக்கு வந்து தான் முயற்சி செய்கிறேன் என்று கூறினார். 

முதலில் தொகையை பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பி என் கணக்கில் செலுத்தினேன். பின்னர் பணம் எடுக்கும் படிவம் ஒன்றையும் மின்னணு பரிமாற்றத்துக்கான படிவம் ஒன்றையும் அளித்தேன். இளைஞர் துணிச்சலாக தனது முயற்சியை மேற்கொண்டார். தலைமை தபால் மாஸ்டர் பக்கத்திலேயே நின்று அனைத்தும் சரியாக நிகழ்கிறதா என உறுதி செய்து கொண்டார். பணம் அனுப்பப்பட்டு விட்டது. தலைமை போஸ்ட் மாஸ்டருக்கு நன்றி சொன்னேன். வட இந்திய இளைஞரிடம் ‘’தன்யவாத்’’ என்று கூறினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். 

எனக்கும் திருப்தி. வேலை முடிந்ததற்காகவும். பஞ்ச தந்திரக் கதை பரிந்துரைக்கும் உபாயம் ஒன்றின் படி நடந்ததற்காகவும்.