Saturday 11 February 2023

நானாவித அலுவல்கள்

தமிழில் பலவிதமான வேலைகள் என்பதை ‘’நானாவித அலுவல்கள்’’ என்று சொல்வதுண்டு. அவ்விதமான பல அலுவல்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் இருக்கிறேன். உண்மையில் என் மனம் வேகமாக இயங்கும். என் மனம் இயங்கும் வேகத்துக்கே என் செயல்களும் இருக்கும். இருப்பினும் உலகியல் என்பது நம் உடனிருப்பவர்களையும் சூழலையும் சேர்ந்ததே. வாழ்க்கையின் மைய வயதில் இருக்கும் நிலையில் இளைஞனாக இருந்த போது  இயங்கியதை மனம் பக்குவத்தாலும் அனுபவத்தாலும் சற்று வழிப்படுத்திக் கொள்ள விரும்புகிறது. சக மனிதர்களிடம் எவ்வளவு இலகுவாக இருக்க முடியுமோ அவ்வளவு இலகுவாக இருக்க முயல்கிறேன். நட்பிலும் உறவிலும் அகங்காரத்தின் உரசல் இல்லாமல் இருக்க வேண்டும் என எனக்கு நானே பல முறை சொல்லிக் கொள்கிறேன்.   

தமிழ்ச் சூழல் கடந்த இருநூறு ஆண்டுகளில் மிகவும் பிளவுபட்டு நிற்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக மோதிக் கொள்ளவில்லையே என நாம் எண்ணலாம்: ஆனால் அதன் மறுபக்கத்தை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஒற்றுமை இருக்குமென்றால் தமிழ்ச் சமூகம் எத்தனையோ விஷயங்களை இணைந்து சாதித்திருக்கும். 

நான் கிராமங்களுக்குச் செல்வதால் கிராமத்தினருடன் உரையாடுவதால் என்னால் சில விஷயங்களை உய்த்துணர முடிகிறது. கிராம மக்களுக்கு இன்றும் உடல் உழைப்பு என்பது மிகக் கடினமானது இல்லை. யதார்த்தமாக மதிப்பிட்டால் கூட , ஐம்பது சதவீதத்துக்கு அதிகமான மக்கள் சர்வசாதாரணமாக உடல் உழைப்பை அளிக்கக் கூடியவர்கள். கிராமத்தில் உள்ள மக்கள் தினமும் குறைந்தபட்சமாக உடல் உழைப்பை அளிக்கக்கூடிய விதத்தில் அவர்களுக்கு ஏதேனும் ஓர் கைத்தொழில் இருக்க வேண்டும். அது அவர்களுடைய வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இது சாத்தியம் தான். 

நான் ஒரு விஷயம் யோசித்தேன். ஒரு கிராமத்தில் 500 குடும்பங்கள் இருக்கிறது என எடுத்துக் கொள்வோம். அதில் ‘’தேனீ வளர்ப்பில்’’ 100 பெண்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் அந்த பெண்களுக்கு தேனீ வளர்ப்பு இலாபகரமாக அமைய ஒரு விஷயம் அங்கே நிகழ வேண்டும். அதாவது அந்த கிராமத்தில் முதலில் எப்போதும் பூக்கும் மலர் மரங்கள் தேனீக்களுக்காக பொது இடங்களில் நட்டு வளர்க்கப்பட வேண்டும். அந்த மரங்கள் பூத்துக் கொண்டிருக்கும் போது 100 பெண்கள் தேனீ வளர்க்கத் துவங்குவார்கள் எனில் அவர்களால் எளிதில் தேனீக்கள் மூலம் தேன் சேகரிக்க முடியும். 

ஒரு கிராமத்தில் 100 பெண்கள் மண்புழு உரம் தயாரிக்க விரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்கு தினமும் மண்புழுக்களுக்கு உரமாக அளிக்கக்கூடிய இலை தழைகளை உதிர்க்கும் மரவகைகள் அந்த கிராமத்தில் இருக்க வேண்டும். அவை அங்கு நட்டு வளர்க்கப்பட வேண்டும். 

இறைப்பூசனைக்கு உரிய மலர்களை மாலையாகத் தொடுக்க சிலர் விரும்புவார்கள் என்றாலும் அந்த மலர்கள் பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ வளர்க்கப்பட வேண்டும். 

நான் ஒரு கிராமத்தில் எவ்விதம் எளிய விதத்தில் என்னென்ன சாத்தியங்களில் அங்குள்ள குடும்பங்களின் பொருளியல் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதையே சிந்திக்கிறேன் ; அதையே செயல்படுத்த முனைகிறேன். நமது மரபும் பண்பாடும் அதற்கு பெரும் உதவி புரியக் கூடியது என்பதை நடைமுறையில் காண்கிறேன். எனவே ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களில் இந்த இரண்டு விஷயங்களும் இருப்பதைக் காண முடியும். 

நம் கிராம மக்களுக்கு சிந்திக்க சொல்லித் தர வேண்டும். பல விஷயங்களை பல சாத்தியங்களை அவர்கள் முன் முன்வைத்தவாறே இருக்க வேண்டும். அவர்களுக்கு தன்னம்பிக்கை மட்டுமே குறைவாக உள்ளது. அதனை அவர்களுக்கு அளிக்க வேண்டும். கிராம மக்கள் தன்னம்பிக்கை கொள்வார்கள் எனில் அவர்களால் அளப்பரிய விஷயங்களை சாதிக்க முடியும்.

‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிகள் அந்த திசை நோக்கி செல்கின்றன.