1111 மணி நேர வாசிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். மூன்றில் ஒரு பங்கு நாட்கள் நிறைவு பெற்றுள்ளன ; ஐந்தில் ஒரு பாக இலக்கு எட்டப்பட்டுள்ளது. இந்த சவாலின் மொத்த வாசிப்பு நேரமான 1111 மணி நேரத்தை இந்த முறை மிக அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் எட்டுவார்கள் என்பதை வாசிப்பு நேர அட்டவணை காட்டுகிறது. இந்நிலை மிக அதிக அதிக உவகையை அளிக்கிறது.
தமிழகத்தின் சமூக நிலைக்கு வாசிப்பு மிகவும் தேவையான ஒன்று. பரந்துபட்ட நூல் வாசிப்பே புறவயமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும். சிந்தனையே செயல்கள் ஆகும்.
‘’சிறு துளிகள் பெருவெள்ளம்’’ என்ற தலைப்பில் வாசிப்பு சவால் தொடங்குவதற்கு முன்னால் ஒரு பதிவை எழுதினேன். அதில் எவ்விதமான வாசிப்புகள் சாத்தியம் என சில விஷயங்களை முன்வைத்திருந்தேன். அதில் ஒன்று வாசிப்பு சவாலின் 365 நாட்களிலும் ஒருநாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரம் வாசித்தல் என்பது. அதனை முறையாகப் பின்பற்றுகிறேன். பொழுது அமையும் போதெல்லாம் கூடுதலாகவும் வாசிக்கிறேன். இந்த நான்கு மாதங்களில் ஒருநாளில் என்னுடைய குறைந்தபட்ச வாசிப்பு ஒரு மணி நேரம். அதிகபட்சமாக ஒருநாளில் ஒன்பது மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் வாசித்திருக்கிறேன்.
லௌகிகப் பணிகள், லௌகிகப் பணிகள் உருவாக்கும் மனநிலை ஆகியவையே உண்மையில் பெரிய சவால். ஒரு லௌகிகப் பணி முதலில் நம் மனத்தில் ஒரு வடிவம் கொண்டு ஆக்கிரமித்துக் கொள்கிறது. அது நிகழ்ந்து முடியும் வரை மனம் அதிலேயே முற்றிலும் பரவியிருக்கிறது. என்னுடைய தொழிலான கட்டுமானப் பணி என்பது எதிர்பார்ப்புகள், ஒத்திவைப்புகள், காத்திருப்புகள், தள்ளிப் போதல்களால் ஆனது. ஒத்திவைப்புகள் சில நாட்களை விழுங்கும். காத்திருப்புகள் மனதை சோர்வடையச் செய்யும். இவ்வாறான லௌகிக மனநிலை நிறைந்திருக்கையில் ஒரு நாளில் நான் எண்ணும் வண்ணம் அதிக நேரம் வாசிப்பது என்பது சாத்தியமில்லை. இருப்பினும் இவ்வாறான பொழுதுகளிலும் ஒருமணி நேரம் வாசித்து விடுவேன்.
வாசிப்பு சவாலில் இப்போது வாசித்துக் கொண்டிருப்பது உலகத்தின் மிகப் பெரிய காவியம். காவிய மாந்தர்கள் வாசிப்பின் வழியே அகத்தில் நிறைகின்றனர். பெருமுயற்சிகளையும் பெருங்கனவுகளையும் காவியங்களின் காட்சிகள் நாளும் காட்டிக் கொண்டிருக்கின்றன. மானுடர்களின் எழுச்சியும் வீழ்ச்சியையும் மானுடர்களின் இருளையும் ஒளியையும் வாழ்வின் சுபாவமாகக் காட்டியவாறு செல்கிறது காவியம். காவியம் உணர்வெழுச்சியையும் கண்ணீரையும் மாறி மாறி அளிக்கக்கூடியவை.
ஒருபுறம் லௌகிக அலை. இன்னொரு புறம் வாசிப்பு அலை. இரண்டாலும் முன்னகர்ந்து செல்ல முடிகிறது என்பது மகிழ்வுக்குரியதே. இந்த இரண்டுடன் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் எப்போதும் இருப்பது.
ஒரு சில மணி நேரங்கள் தொடர்ந்து வாசித்த பின்னர் அடுத்த தெருவில் இருக்கும் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு நடந்து செல்வேன். வாசிப்பில் லயித்திருந்த மனம் மைதானம் நோக்கி நடந்து செல்கையில் உற்சாகம் பெறும். வாசிப்பை ஒட்டி புதிய எண்ணங்கள் தோன்றும். அங்கே ஒரு அரசமரம் இருக்கும். அதன் அடியில் சில நிமிடங்கள் நிற்பேன் அல்லது அமர்வேன். அந்த மைதானத்தை இரண்டு மூன்று முறை சுற்றி வருவேன். மனமும் உடலும் புதிதானது போல தோன்றும். மீண்டும் வீட்டுக்கு வந்து வாசிக்கத் தொடங்குவேன். நடந்து செல்லும் போது உடல் சிறிதளவு உழைப்பதால் மனநிலை உற்சாகமாக ஆகும். வாசிப்பளவுக்கே இந்த சிறு சிறு நடைப்பயிற்சியையும் விரும்பத் தொடங்கி விட்டேன்.
வாசிப்பு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ளேன். அந்த விருப்பமே அதற்கான பாதைகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.