எனது நண்பர் ஒருவர் நெடுநாட்களாக ‘’காவிரி போற்றுதும்’’ பணிக்கு தனது நல்லாதரவை அளிக்க விரும்பினார். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளால் சூழ்ந்திருந்ததால் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது ஊரில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் நண்பர் விரும்பியவாறு மரக்கன்றுகள் நட இது உகந்த பருவம் என முடிவு செய்தேன்.
சென்ற ஆண்டு குடியரசு தினத்திற்கு முதல் தினம் ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஆயிரம் நந்தியாவட்டை மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு எல்லா வீடுகளுக்கும் முன்னால் அந்த நந்தியாவட்டை மரக்கன்றுகளை நடுமாறும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்களை ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் இந்த இரு நற்செயல்களையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினரும் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். பெருநிலக் கிழார்கள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். இப்போது அந்த நந்தியாவட்டை கன்றுகள் பூத்துக் குலுங்குகின்றன. அதனைக் காண்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் ஆயிரம் குடும்பத்தினரால் நடப்படுவது என்பது ஐயமின்றி ஓர் பெருஞ்செயலே. ஒரு சிறு தீபம் பெரும் இருளை நீக்குவதற்கு ஒப்பானதாகும் அச்செயல்பாடு. இச்செயல் சாத்தியமானதற்கு முழுக்க முழுக்க காரணம் அக்கிராம மக்களே. பல்வேறு சூழ்நிலைகளில் நான் அவர்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன் என்பதன் அடிப்படையில் நித்தம் அவர்கள் என் மீது காட்டும் பிரியத்தையும் அன்பையும் உணர்ந்தவாறே இருக்கிறேன். நாம் தொடர்ந்து செயல்பட அந்த பிரியத்திலிருந்தும் அன்பிலிருந்துமே ஊக்கம் கொள்கிறேன்.
இந்த முறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நெல்லி மரக்கன்றை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லி மரத்தில் திருமகள் வாசம் செய்வதாக இந்தியர்களின் நம்பிக்கை. உடல் நலத்துக்கு உகந்த நெல்லியை மக்கள் விரும்பி வளர்க்கக் கூடும். நெல்லி மரம் தானிருக்கும் இடத்தைச் சுற்றி நிலத்தடி நீரை சுவை மிக்கதாக மாற்றும் இயல்பு கொண்டது.
இம்முறை நெல்லி மரக்கன்றுடன் மரம் நடும் முறை குறித்தும் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறை குறித்தும் ஒரு சிறு பிரசுரத்தையும் இணைத்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமமே எனினும் மரம் நடுதல், எரு, சூரிய ஒளியின் அவசியம், நீர் வார்த்தலின் அவசியம் ஆகியவற்றை திரும்பத் திரும்ப கூற வேண்டியிருக்கிறது. அந்த விழிப்புணர்வை உருவாக்குவதையே தமது பணியாக ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது.
ஆயிரம் மரக்கன்றுகளை கிராம மக்களுக்கு அளிக்கும் நண்பருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஆயிரம் குடும்பங்கள் இணைந்து ஓர் நற்செயல் மேற்கொள்ள நண்பரால் ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதனை உருவாக்கிக் கொடுத்த நண்பருக்கு மீண்டும் நன்றி.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என்பதால் காலை 6 மணிக்குத் துவங்கினால் மாலை 4 மணி வரை பணி இருக்கும். பின்னர் அடுத்த 15 நாட்கள் ஒரு நாளைக்கு 50 வீடுகள் என மரக்கன்றுகளை எப்படி நட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்வையிட வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ தனது செயல்களில் துல்லியத்தை எதிர்பார்ப்பதால் மெல்ல நிதானமாகவே முன்னேறிச் செல்கிறோம்.