Saturday 13 May 2023

பணி ஏற்பாடுகள்

 நாளை ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இன்று செய்து கொண்டிருந்தேன். நெல்லி மரத்தின் சிறப்பு குறித்தும் மரக்கன்றுகளை நட வேண்டிய முறை குறித்தும் விளக்கும் ஒரு சிறு பிரசுரம் தயார் செய்து வைத்திருந்தேன். அதனை வீடுகளுக்கு வழங்க பிரதி எடுத்துக் கொண்டேன். பின்னர் அங்கே கிராமத்துக்குச் சென்று சென்ற முறை நந்தியாவட்டை மரக்கன்றுகளை வழங்கும் போது உடனிருந்த டாடா ஏஸ் வாகன ஓட்டுனரைச் சந்தித்து நாளை காலை 8.45க்கு அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கூறினேன். அவரை சந்தித்து சில சில வாரங்கள் ஆகிறது. அவர் உடல் மிகவும் மெலிந்திருந்தார். ஏன் திடீரென உடல் மெலிந்தீர்கள் என்று கேட்டேன். சில வாரங்களுக்கு முன்னால் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. பப்பாளி இலையினை வென்னீரில் போட்டு சாறு எடுத்து தொடர்ந்து அருந்தியிருக்கிறார். அதன் பின் வெள்ளணுக்கள் எண்ணிக்கை அதிகமாகி அவர் உட்ல்நலம் மீண்டிருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட போது மருத்துவரைப் பார்த்திருக்கிறார். அதன் பின் சென்று ஆலோசித்தீர்களா என்று கேட்டேன். அதன் பின் அவர் செல்லவில்லை. எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன். எதனால் வெள்ளணுக்கள் குறைந்தது என்பதற்கான மூலக்காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை சரிசெய்யும் மாத்திரைகளையும் சரிசெய்யும் உணவையும் நீங்கள் அருந்த வேண்டும் என்று சொன்னேன். 

உண்மை என்னவென்றால், அவர் நான் கூறுகிறேன் என்பதற்காகவேனும் மருத்துவர் கூறுவதைப் பின்பற்றுவார். இருப்பினும் இவை அடிப்படையான முக்கியமான விஷயங்கள். உடல்நலம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதில் தமிழ்ச் சமூகம் மிகுந்த பின்னடைவுடன் இருக்கிறது. செல்வந்தர்கள் சாமானியர்கள் என்றெல்லாம் இதில் எந்த பேதமும் இல்லை. அனைவருமே ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள். 

அலோபதி மருத்துவர்கள் மாத்திரைகளை மட்டுமே நம்புகிறார்கள். அலோபதி மாத்திரைகளை மட்டுமே நம்பும் விதத்தில் சமூகத்தையும் பழக்கி விட்டார்கள். ஒருவர் உடல்நலம் குன்றினால் அவர் உண்ணும் உணவிலும் உண்ணும் விதத்திலும் மாற்றங்களை அலோபதி மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும். அலோபதி மருத்துவர்கள் ஒரே வார்த்தையில் விஷயத்தை முடித்து விடுவார்கள் : ‘’நோயாளிக்கு அது எளிய விஷயமில்லை ; அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஒருவர் செய்யப்போவதில்லை எனத் தெரிந்த பின் அதனை ஏன் சொல்ல வேண்டும் ?’’ 

நான் பொதுவாக நான் சந்திக்கும் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவரை நானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். அவருக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கப்படும் போது உடனிருப்பேன். அவர் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாரா என்பதை அவ்வப்போது கேட்டறிவேன். ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ இது என் பழக்கம். 

நமது சமூகம் மாவுச்சத்து மிகுந்த உணவுக்கு முழுமையாகப் பழகியிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொடும் ‘’தாதுப் பஞ்சத்தால்’’ பாதிக்கப்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதே அதற்குக் காரணம். இன்றும் தமிழ் மக்களின் அகத்தில் அவர்கள் அறியாத விதங்களில் அந்த அச்சம் நீடிக்கிறது. 

சிறு தானிய உணவுகள் மக்களின் அன்றாட பழக்கத்துக்கு வர வேண்டும். அந்த தானியங்களை வாங்கி சிறு அளவிலேனும் இருப்பு வைத்துக் கொள்ள அவற்றில் உணவு தயாரிக்க தமிழ் மக்களுக்கு பயிற்சி அவசியம். மாநிலத்தின் ஆரோக்கியம் மேம்பட இது முக்கியமான தேவை. 

நாளை காலை 8.45க்கு புறப்பட வேண்டும் . நர்சரி திறக்க 9 மணி ஆகும். மரக்கன்றுகளை அங்கிருந்து ஏற்றிக் கொண்டு ஊரில் 10 மணி அளவில் கொடுக்கத் தொடங்கினால் முழுவதும் கொடுத்து முடிக்க மாலை 7 மணி வரை ஆகிவிடும். கணிசமான முறைகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஒவ்வொரு முறையும் பணி தொடங்கும் போதும் இதுதான் முதல் தடவை என்பது போல ஆர்வமும் பரவசமும் ஏற்படுகிறது.