Thursday 25 May 2023

எண்ணும் எழுத்தும்

1111 மணி நேர வாசிப்பு சவாலில் ஈடுபடுதலின் தீவிரம் கூடியிருக்கும் ஒரு தருணமாக இத்தருணம் அமைந்திருக்கிறது. தினமும் வாசிப்புக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு நேரம் ஒதுக்குகிறேன். தொழில் சார்ந்த பணிகளும் லௌகிகப் பணிகளும் ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்கும் ஒதுக்க வேண்டிய நேரத்தை ஒதுக்குகிறேன். ஒரு விஷயத்தை புறவயமாக நிர்ணயம் செய்து கொண்டு அதில் ஆர்வத்துடன் ஈடுபடும் போது நமது அகத்துக்குள்ளும் நுண் மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடிகிறது. நினைவறிந்த நாள் முதல் வாசிப்பில் ஈடுபட்டிருந்தாலும் இந்த வாசிப்பு சவாலின் காலகட்டம் சிறப்பானது ; முக்கியத்துவம் கொண்டது.  

01.01.2023லிருந்து 31.12.2023 வரை 365 நாட்கள் வாசிப்புக்கான காலம். இந்த காலகட்டத்தில் 1111 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது சவால். ஒரு நாளைக்கு சராசரியாக 3 மணி நேரம் வாசித்தால் இந்த இலக்கை எட்டி விடலாம். இந்த இலக்கு எளிய ஒன்றுதான். இருப்பினும் தோற்றமளிக்கும் அளவுக்கு எளிதானதல்ல என்பதை சவாலை தினந்தோறும் சந்திக்கையில் உணர்ந்து கொள்ள முடிந்தது. 

லௌகிகமான ஒரு தளத்தில் நமது வேலை நேரம் என்பது காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை என நிர்ணயமாகியுள்ளது. அலுவலகங்களில் பணி புரிபவர்கள் அந்த நேரத்தில் அங்கே இருந்தாக வேண்டும். அலுவலகங்களில் பணி இருப்பவர்கள் அந்த நேரத்துக்குள் அங்கே சென்று தங்கள் பணிகளை செய்து முடித்துக் கொள்ள வேண்டும். வங்கி, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள் என அனைத்தும் இயங்குவது அந்த நேரத்திலேயே. எனவே அந்த நேரத்தில் வாசிப்பு என்பது சாத்தியமில்லை. ஒரு நாள் பொழுதில் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் உறக்கத்துக்குச் சென்று விடும். லௌகிக நேரம் என ஏழும் உறக்கம் என எட்டும் என பதினைந்து மணி நேரம் சென்று விடும். வாசிக்க ஒன்பது மணி நேரம் கிடைக்கும். அதில் ஒரு மணி நேரத்தை அவசியமான விஷயங்களுக்கு என ஒதுக்கினால் எட்டு மணி நேரம் வாசிக்கக் கிடைக்கும். 

இந்த எட்டு மணி நேரத்தை உபயோகிக்கத் தக்க நேரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனில் அந்த நேரம் எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். காலை 4 மணியிலிருந்து 8 மணி வரை. மாலை 7 மணியிலிருந்து 11 மணி வரை என நாம் கண்டடைவோம் என்றால் சிறப்பு. அந்த நேரம் ஒவ்வொரு நாளும் நமக்கென இருக்கும் நேரம். 

என்னுடைய தொழில் சார்ந்த லௌகிகம் சார்ந்த பணிகள் காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை இருக்கும். எல்லா நாளும் இந்த நேரம் முழுமையும் பணி இருக்கும் என்றல்ல. பெரும்பாலான நாட்கள் இருக்கும். அவ்வப்போது ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளும் இருக்கும். 

சவாலின் ஐந்தாவது மாதம் நிறைவு கொள்ளப் போகிறது. முந்நூறு மணி நேரத்துக்குப் பக்கத்தில் வந்து விட்டேன். இன்னும் 7 மாதத்தில் 811 மணி நேரம் வாசிக்க வேண்டும். அவ்வப்போது அடுத்து வரும் நாட்களில் ஒருநாளைக்கு சராசரியாக எவ்வளவு நேரம் வாசிக்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பார்ப்பேன். இருப்பினும் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை ஒட்டியே வாசிப்பு நேரம அமையும். இந்த ஐந்து மாதமும் ஒருநாள் தவறாமல் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். அது ஒரு நல்ல விஷயம். அது நல்லதொரு அடித்தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ஐந்து மாத அனுபவத்தைக் கொண்டு அடுத்த 7 மாதங்களின் வாசிப்பை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என இருக்கிறேன். 

திட்டமிடும் பல விஷயங்கள் தவறிப் போகும் போது வருத்தமாக இருக்கும். எனினும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டும். இந்த வாசிப்பு சவால் மூலம் நான் என்னை - என் மனத்தை - என் செயலாற்றும் திறனை - என்னுடைய தடைகளை - என்னுடைய எல்லைகளை அணுகி அறிகிறேன் என்பது என்னுடைய உணர்வில் இருக்கிறது. வாசிப்பு சவாலின் ஆறாவது மாதம் நிறையும் போது பாதி இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. காலக்கெடுவின் பாதியும் இலக்கின் பாதியும் நிறைவாகியிருந்தால் அடுத்த ஆறு மாதத்தின் தொடக்கம் இரண்டாம் துவக்க நிலையாக அமையும். அவ்வாறு நிகழ வேண்டுமென்றால் அடுத்த 35 நாளில் 255 நேரம் வாசிக்க வேண்டும். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம். 

எண்கள் மாயம் மிக்கவை. எண்கள் வசீகரிக்கக் கூடியவை. வசீகரம் மிக்க எண்களை வசப்படுத்துவது என்பது ஒரு கலை ; ஒரு தவம்.