Monday, 29 May 2023

அமைப்பாளரின் இன்றைய தினம் ( நகைச்சுவைக் கட்டுரை)

 வாரத்தின் முதல் வேலை நாளை அமைப்பாளர் முக்கியம் என்று நினைப்பார். அந்த ஒரு நாளில் ஏதேனும் வேலைகளைப் பார்க்க முடிந்தால் அந்த ஒரு வாரம் என்பது சற்று ஆசுவாசமாகச் செல்லும் என்பது அவரது நம்பிக்கை. ஞாயிற்றுக்கிழமை அன்று நிலுவையில் என்னென்ன பணிகள் இருக்கின்றன என்பது அன்று காலை நினைவில் எழுந்து மதியம் மாலை என வியாபித்து இரவு வரை நீடிக்கும். எனவே திங்கட்கிழமையில் அவர் ஏதாவது செய்து விட வேண்டும் என்று நினைப்பார். நேற்று அமைப்பாளர் என்னென்ன பணிகள் நிலுவையில் நிலுவையில் இருக்கின்றன என்று ஒரு காகிதத்தில் பட்டியலிட்டுக் கொண்டார்.

1. அவருடைய வாகனத்தின் முகப்பு விளக்கு அவ்வப்போது ஒளிர்கிறது ; அவ்வப்போது ஒளிராமல் இருக்கிறது. அது சமயத்தில் ஒளிர்வதில்லை என்பது ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு மேல் வாகனத்தை இயக்கும் போது அவருக்கு நினைவுக்கு வரும். அவருக்கு நினைவு வருகிறதோ இல்லையோ உடன் பயணிப்பவர்கள் சற்று பதட்டம் அடைவார்கள். அடுத்த நாள் காலையே சரி செய்ய வேண்டும் என்று நகர்ந்து நகர்ந்து வந்து பல காலைகளைக் கடந்து இன்றைய தினத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். 

2. அவருடைய வாகனத்தின் ஹாரன் ‘’டிவீட்’ போல சின்னதாக கீச் கீச் என்கிறது. அதையும் சரி செய்ய வேண்டும் என்று எழுதிக் கொண்டார். 

3. தணிக்கையாளர் அலுவலகத்திலிருந்து பத்து நாள் முன்னதாக ஃபோன் செய்து வங்கி கணக்கு ஒரு வருட அறிக்கைகளை அளிக்குமாறு கேட்டிருந்தார்கள். ஃபோன் வந்த அன்றே தனது வங்கி பாஸ்புக்கை எடுத்துப் பார்த்தார். சென்ற ஆண்டு மார்ச் 10ம் தேதிக்குப் பின்னர் எந்த எண்ட்ரியும் இல்லை. வங்கிக்குச் சென்று எண்ட்ரி போட வேண்டும் என நினைத்தார். ஔவை சொன்ன ஒரு கோடிக்குப் பெருமானமான அறிவுரை அவருக்கு நினைவுக்கு வந்தது. அமைதியாக இருந்து விட்டார். 

4. இப்போது தபால் ஆஃபிஸ் கணக்கை அதிகமாக பயன்படுத்துவதால் ஃபோன் வந்த அன்றே தபால் சேமிப்புக் கணக்கின் இந்த ஆண்டுக்கான பக்கங்களை ஸ்கேன் செய்து தனது மின்னஞ்சலில் சேமித்துக் கொண்டார். அமைப்பாளர் ஸ்கேன் செய்ய ஜெராக்ஸ் எடுக்க என அவருக்கு வாடிக்கையான கடை ஒன்று இருக்கிறது. அந்த கடையின் உரிமையாளர் பணியாளர்கள் அனைவரும் அமைப்பாளரின் நண்பர்கள். அதாவது பல்வேறு விதமான மனுக்கள் அவ்வப்போது அனுப்புவதால் அடிக்கடி செல்ல நேர்ந்து பரிச்சயமாகி நட்பாகி விட்டார்கள். அந்த கடையில் அமைப்பாளருக்கு கணிசமான ‘’டிஸ்கவுண்ட்’’ உண்டு. 

5. சென்ற ஆண்டில் அமைப்பாளர் போஸ்டல் பேமெண்ட் பேங்க் என இந்திய அஞ்சல் துறை ஆரம்பித்திருந்த டிஜிட்டல் வங்கியில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். ஆதார் எண் சொன்னால் போதும் கணக்கு துவங்கி விடலாம் என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட கணக்கு அது. ஆனால் அதனை ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ மூலம் மட்டுமே இயக்க முடியும். அதற்கும் அமைப்பாளருக்கும் உள்ள தூரம் அனைவரும் அறிந்ததே. நண்பர் ஒருவரின் ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த கணக்கில் எந்த அலைபேசி எண் தரப்பட்டதோ அந்த எண் பயன்படும் ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே இயக்க முடியும் என விதிமுறையை தபால் துறை மாற்றி விட்டது. மாதாமாதம் அறிக்கை மின்னஞ்சலில் வரும். அதனை பாஸ்வேர்டு கொடுத்து திறக்க வேண்டும். அவ்வாறு இன்று திறந்து கணிணியில் பதிவிறக்கம் செய்தார். பதிவிறக்கம் செய்ததை மீண்டும் திறக்க முயன்ற போது அந்த கோப்பு மீண்டும் ‘’நுழைவு சங்கேதம்’’ கேட்டது. அமைப்பாளர் அதை ஒத்தி வைப்போம் என முடிவு செய்தார்.  

6. காலை 11.30 மணி அளவில் கொடும் வெயில். வங்கிக்கு சென்று எண்ட்ரி போட்டு விட்டு வாடிக்கை கடைக்கு வந்து அந்த பக்கங்களை ஸ்கேன் செய்து தனது மின்னஞ்சலுக்கு அனுப்பச் சொன்னார். 

7. வண்டியை ஒரு இரு சக்கர வாகனப் பட்டறையில் கொண்டு வந்து விட்டார். முகப்பு விளக்கும் ஒலிப்பானும் முக்கியம் மற்ற வேலைகளையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். அமைப்பாளர் ஒரு ‘’மினிமலிஸ்ட்’’. அவர் வழக்கமாக விடும் பட்டறை உரிமையாளர் அமைப்பாளரினும் ‘’மினிமலிஸ்ட்’’. எனவே புதிதாக ஒரு பட்டறையைத் தெரிவு செய்துள்ளார்.

8. வீட்டில் இருந்த இன்னொரு வாகனத்தை எடுத்துக் கொண்டு பதிவுத்துறை அலுவலகம் சென்றார். அங்கே ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். நாளை மதியம் வாருங்கள் என்று கூறினர். திரும்பி வந்து விட்டார். 

9. இந்த வேலைகளை முடிக்க மதியம் 2 மணி ஆகி விட்டது. ரியல் எஸ்டேட் தொடர்பாக சிலருடன் பேச வேண்டியிருந்தது. அலைபேசி மூலம் பேசினார். அதில் ஒருவரின் ஃபோன் ‘’சுவிட்ச் ஆஃப்’’ல் இருந்தது. அமைப்பாளர் எவருக்கும் ஃபோன் செய்தால் அவர்கள் ஃபோ சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தால் சலிப்படைவதே இல்லை. அவருடைய ஃபோன் அவ்வப்போது ‘’சுவிட்ச் ஆஃப்’’ ஆவது உண்டு என்பது அதற்கான காரணம். 

10. அமைப்பாளர் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஹீரோ ஹோண்டா ஒன்று அவரிடம் இப்போதும் இருக்கிறது. அது 2,00,000 கிலோ மீட்டர் ஓடியிருக்கும். பல பல மாதங்களாக அதனை ஓட்டாமல் வைத்திருந்தார். காலை பட்டறைக்குச் சென்ற போது அந்த வண்டி பற்றி சொன்னார். பட்டறை உரிமையாளர் மாலை இரண்டு பேரை அனுப்பி பட்டறைக்குக் கொண்டு வந்து சரி செய்து விடுவதாக சொன்னார். அமைப்பாளர் அவர்களிடம் ‘’அதில் ஹெட்லைட் ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது. ஹெட்லைட் செட்டை கழட்டிடுங்க. அந்த வண்டியை பகல்ல மட்டும் யூஸ் பண்ணிக்கறன் ‘’ என்றார். 

11. வங்கி பாஸ் புத்தக ஸ்கேன், போஸ்ட் ஆஃபிஸ் கணகின் ஸ்கேன், ஹவுசிங் லோன் ஸ்டேட்மெண்ட் ஸ்கேன் என மூன்றையும் தணிக்கையாளருக்கு மின்னஞ்சலில் அனுப்பி விட்டு போஸ்டல் பேமெண்ட் பேங்க் குறித்தும் அதன் மாதாந்திர அறிக்கைகளை மின்னஞ்சலில் அனுப்ப முடியாமல் இருக்கும் நிலை குறித்தும் தணிக்கையாளருக்கு ஒரு மின்னஞ்சல் கடிதத்தில் சொல்லி விட்டு ஆசுவாசமான போது இன்னும் வாசிப்பு சவாலின் இன்றைய தினத்துக்கான ஒரு மணி நேரம் இன்னும் வாசிக்கப்படவில்லை என்பது அமைப்பாளருக்கு நினைவுக்கு வந்தது. 

12. இன்றைய நாள் முடிய இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் வாசித்து விடலாம் என எண்ணிக் கொண்டார்.