Monday 12 June 2023

தஞ்சை உணவு தானிய அருங்காட்சியகம்

 இணையத்தில் இந்தியாவில் இருக்கும் அருங்காட்சியகங்கள் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தஞ்சாவூரில் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் சார்பாக ‘’உணவு தானிய அருங்காட்சியகம்’’ அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். இவ்வளவு பக்கத்தில் இருந்து இத்தனை நாள் காணாமல் இருந்திருக்கிறேனே என்று எண்ணம் ஏற்பட்டது. நேற்று தான் செய்தியை வாசித்தேன். இணையத்தில் இந்திய உணவுக் கழகத்தின் இணைய தளத்துக்குச் சென்று பார்த்த போது ஞாயிறு ஒருநாள் மட்டும் விடுமுறை மற்ற ஆறு நாட்களும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம் என்ற தகவலைக் கண்டேன். இன்று காலை தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றேன். 

தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உணவு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 2016ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த திரு. ராம் விலாஸ் பாஸ்வான் இந்த அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 2020ம் ஆண்டு மத்திய அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அதனைத் திறந்து வைத்துள்ளார். 

பொது யுகத்துக்கு முன்பு 10,000 ஆண்டுகளில் இருந்தே உலகின் பல பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட முயற்சிகள் நடந்துள்ளதை ஒலி ஒளி காட்சிகள் மூலம் காட்டினர். உணவுப் பொருள் உற்பத்தி என வரும் போது நாட்டின் எல்லைகள் இல்லாமலாகி மண் தானியம் மழை என உலகளாவிய தொடர்பு உருவாவதை உணர முடிந்தது. எனினும் ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு வகையான மண் அமைப்பு இருப்பதும் ஒவ்வொரு வகையான பயிர் விளைவதுமே நாட்டின் எல்லைகள் உருவாவதற்குக் காரணம் என்பதையும் சேர்த்தே இந்த விஷயத்தை யோசித்துக் கொண்டேன். பழைய கற்காலத்தில் மனிதர்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்திய கூரான கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உலகெங்கும் பயன்படுத்தப்பட்ட விதவிதமான கலப்பைகளின் மினியேச்சர் மாதிரிகள் காட்சிக்கு இருந்தன. 

உணவுப் பொருளைச் சேமித்து வைக்க மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான கட்டுமானங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதன் ஓவியங்கள் இருந்தன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகப் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதை கவனித்த போது ஆச்சர்யம் அளித்தது. சோழர் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கட்டப்பட்ட குதிர்களும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாபநாசம் பாலைவனநாத சுவாமி கோவிலில் கட்டப்பட்ட குதிரும் ஓவியங்களாக இடம் பெற்றிருந்தது. 

உலகின் ஒவ்வொரு நாட்டில் என்னென்ன தானியங்கள் விளைகிறது என்பதை தொடுதிரை மூலம் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. 

அருங்காட்சியகத்தைக் கண்டதன் மூலம் நாம் எத்தனை அறிந்திருக்கும் என சோதிக்கும் விதமாக கணிணித் திரையில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சி இருந்தது. நான் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். கணிசமான விடைகள் சரியாக இருந்தன. 

செயல் புரியும் கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தகளை அழைத்து வந்து இந்த அருங்காட்சியகத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.