Friday, 23 June 2023

ஓர் உரையாடல்

 எனது நெடுநாள் நண்பரின் மகன் வீட்டுக்கு வந்திருந்தான். ஒரு வார காலம் இங்கு இருந்தான். கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் அவனுக்கு சமூக விஷயங்கள் குறித்த அறிமுகம் இருக்க வேண்டும் என நண்பர் விரும்பினார். என்னுடன் ஒரு வார காலம் இருப்பது அவனுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட உதவியாய் இருக்கும் என நண்பர் கருதினார். அவன் பிறந்த அன்று அவனை கைக்குழந்தையாக நான் மருத்துவமனையில் பார்த்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இன்று பெரிய இளைஞனாக இருக்கிறான். ஒரு வார காலமாக வெவ்வேறு விதங்களில் அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். இன்று என்னிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று விரும்பினான் ; சொன்னான். அது விரும்பத்தக்க விஷயம் என்பதால் கேள்விகளைக் கேட்கச் சொன்னேன். 


கே : நீங்கள் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்கிறீர்கள் ? தனியாகப் பயணிக்க உங்களுக்கு விருப்பமா ? அல்லது குழுவுடன் பயணிக்க விருப்பமா?

நான் மோட்டார்சைக்கிளில் தனியாகவும் பயணித்திருக்கிறேன். நண்பர்கள் குழுடனும் பயணித்திருக்கிறேன். நண்பர்கள் குழுவுடன் பயணித்தவை அளவிலும் தூரத்திலும் சிறியவை. நீண்ட பயணங்களை தனியாக மேற்கொண்டிருக்கிறேன். 

தனியாகப் பயணிக்கும் போது நம் அகம் புதிய சூழ்நிலைகளை புதிய காட்சிகளை புதிய அனுப்வங்களை எதிர்கொள்கிறது. அவை நாம் அறியாதவற்றை நம்மை உணர வைக்கின்றன. காட்சிகளாக ஒலிகளாக அவை நினைவின் அடுக்குகளில் சென்றமர்கின்றன. அவை முக்கியமான அறிதல்கள் ஆகின்றன. 

கே : உங்கள் பயணத்தில் எழிலார்ந்த பல இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள். இங்கேயே இருந்து விடலாம் என எண்ணிய இடம் அல்லது இடங்கள் என ஏதேனும் உண்டா?

இந்திய அகத்துக்கு கங்கை எப்போதுமே நெருக்கமானது. அளவில் பெரியதும் பிரவாகித்தலை தன் இயல்பாகக் கொண்டதுமான அது மானுடனுக்கு காலங்காலமாக ‘’உள்ள விரிவு கொள்க’’ என்னும் தன்மையை கூறிக்கொண்டே இருக்கிறது. கங்கையைக் காணும் எவரும் கங்கையின் முன் தங்கள் உள்ளம் விரிவதை உணர முடியும். குளிர்மை நிரம்பிய அந்த நீர்ப்பெருக்கின் முன் ஒவ்வொரு மானுடனும் தன்னை மகவாக உணர்கிறான். ரிஷிகேஷ் எனக்கு மிகவும் விருப்பமான இடம். 

கர்நாடகத்தில் குதிரைமுகே என்னும் வனப்பகுதி உள்ளது. தூய காடு அது. அதுவும் மிக விருப்பமான இடம். 

கே : நீங்கள் செல்லும் இடம் இப்படி இருக்கும் என்று எண்ணிச் செல்வதுண்டா? 

இந்திய நிலம் நோக்கிச் செல்கையில் நாம் எந்த பகுதியை நோக்கிச் செல்கிறோமோ அந்த பகுதியின் இலக்கியங்களை வாசிப்பது என்பது பெரும் அளவில் உதவிகரமானது. இந்திய நிலம் என்பது வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் என யாத்ரீகர்களால் தொடர்ந்து பயணிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலம். கம்ப ராமாயணத்தில் ஒரு இடத்தில் கம்பன் கோதாவரியைக் குறித்து கூறும் போது ‘’சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி’’ என்கிறார். கவிதை என்பது ஒன்று பலவாக இருப்பது. கோதாவரி நதி என்ற ஒன்று நதியினும் பெரிய பல கூறுகளாலும் அம்சங்களாலும் ஆன ஒன்று என்பதை அதனைக் காண்பவர்கள் அறிய முடியும். இந்தியாவின் இதிகாசங்களும் காளிதாசனும் இந்திய நிலம் குறித்த சித்திரத்தை அளிக்க வல்லவை. தாரா சங்கர் பானர்ஜி, குர் அதுல் ஐன் ஹைதர், கிரிராஜ் கிஷோர், பைரப்பா, சிவராம் காரந்த், வெங்கடேஷ் மாட்கூல்கர் ஆகிய செவ்வியல் நாவலாசிரியர்களின் நாவல்களை வாசிப்பது அந்த பகுதி குறித்த அருவமான உள சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள உதவும். அவர்கள் எழுதிய நிலம் நோக்கிச் செல்கிறோம் என்னும் உணர்வே அற்புதமானது. அவை நாம் நேரில் காணும் காட்சிகளுடன் இணையும் போது மேலும் சிறப்பான அனுபவமாகும். இது என் அனுபவம். 


கே : ஏன் எழுதுகிறீர்கள் ?

என் எழுத்து எனக்கு எழுதுகிறோம் என்ற நிறைவைத் தருகிறது. அதனால் எழுதுகிறேன். 


கே : வாழ்க்கையில் உங்களை மிகவும் பாதித்த விஷயம் எது ?

உலகின் பல மனிதர்கள் வறுமையின் பிடியில் பீடிக்கப்பட்டு இருப்பது என்னை மிகவும் பாதித்த விஷயம். மானுட குலம் தன் பரிணாமத்தில் அடுத்த படிநிலைக்குச் செல்வது என்பது வறுமை அகற்றப்பட்டால் மட்டுமே நிகழ முடியும். வறுமையை அகற்ற பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


கே : நீங்கள் செய்ய நினைக்கும் முக்கியமான பல செயல்களில் முதன்மையானது எது ?

செயல் புரியும் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் ஒரு சதவீதப் பரப்பில் மரப்பயிர் சாகுபடி செய்வார்களானால் அவர்களால் 15 ஆண்டுகளில் பொருளியல் தன்னிறைவு பெற முடியும். அவ்வாறு ஒரு கிராமத்தையாவது பொருளியல் தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பதே நான் செய்ய நினைக்கும் செயல்.