Saturday 24 June 2023

பெருக்கம்

 நெடுநாள் நண்பரின் மகன் இப்போது எனக்கும் நண்பனாகி விட்டான். என்னுடைய வயதில் பாதி அவனுக்கு. உடனிருந்த நாட்களில் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டான். 

நாளின் பெரும் பொழுது உடனிருந்த போது நான் ஏதாவது ஒரு விஷயம் குறித்து ஆரம்பிப்பேன். அடுத்த தலைமுறை அந்த விஷயத்தை எவ்விதம் அணுகுகிறது புரிந்து கொள்கிறது என்பதை அவதானிப்பேன். இருப்பினும் எப்போதும் தீவிரமான விஷயங்களாக இல்லாமல் உரையாடல் இருக்க வேண்டும் என்றும் எண்ணுவேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் எனக்கும் அவனுக்கும் ஒரு போட்டி. போட்டியை நான் தான் அறிவித்தேன். அதாவது இரண்டு பேரும் தங்கள் நினைவில் இருக்கும் திருக்குறள்களை எழுத வேண்டும். யார் அதிகமாக திருக்குறளை எழுதுகிறார்கள் என்பதை அறிவதற்காக இந்த போட்டி. நண்பன் கணிசமான திருக்குறள்களை எழுதினான். நான் அவன் எழுதியதைப் போல் இரண்டு மடங்கு குறள்களை எழுதினேன். போட்டி முடிந்த பின் எங்கள் இருவருக்கும் மேலும் பல குறள்கள் நினைவில் எழுந்தன. அப்போது எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. 

தமிழ்க் குடும்பங்களில் உறவினர்களும் நண்பர்களும் சந்திக்கும் போது திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை, சிவ புராணம், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், தனிப்பாடல்கள், கம்ப ராமாயணம் ஆகிய்வற்றில் உள்ள பாடல்களை நினைவில் இருந்து ஒப்பிக்கும் எழுதும் போட்டிகளை நடத்தலாம். அவற்றில் வினாடி வினா நிகழ்ச்சி கூட நடத்தலாம். இந்த எண்ணம் எளிமையானது. எளிதில் செயல்படுத்தக் கூடியது. நமது மொழியை மக்களிடம் சகஜமாக ஆக்க இவ்வகை முயற்சிகள் உதவும். 

நம் நாட்டில் குழந்தைகளுக்கு தெய்வங்களின் பெயர்களை இடுவதே இறைவனின் நாமங்கள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு வீடு இறை நாமங்கள் எப்போதும் ஒலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே. இறைவனின் பெயர்களும் கீர்த்திகளும் நிறைந்த தமிழ்ப் பாடல்கள் சாமானிய மக்களின் மனத்திலும் உரையாடலிலும் இடம் பெற இது ஒரு நல்ல வழி.