Sunday, 25 June 2023

இருளிலிருந்து ஒளிக்கு

 1975ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அடிப்படை உரிமைகளில் ஒன்று எந்த இந்தியக் குடிமகனுக்கும் இந்திய நிலத்தில் உயிர் வாழும் உரிமை உண்டென்பது. அதாவது எந்த இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையையும் பாதுகாக்க இந்திய அரசியல் சட்டம் பொறுப்பேற்றுள்ளது என்பது அதன் பொருள். நெருக்கடி நிலையின் போது எல்லா அடிப்படை உரிமைகளும் முடக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன் அர்த்தம் என்னவெனில் இந்தியக் குடிமக்களின் உயிர் வாழும் உரிமை என்பதும் அரசாங்கத்தால் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதே. இதை விட ஒரு மிக மோசமான கொடிய நிலை இருக்க வாய்ப்பில்லை. 

ஆளும் கட்சியின் மீது விமர்சனம் இருந்த அனைத்து அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு அரசாங்கம் விரும்பும் செய்திகளே வெளிவர முடியும் என்ற நிலை. 

இந்தியாவில் அரசாங்கம் என்பது இந்திய சமூகத்தின் மிகச் சிறு பகுதியே. நுண்மதி கொண்ட ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதனை அறிவார்கள். இலட்சக்கணக்கான கிராமங்களில் வேர் கொண்டிருக்கும் ஒரு நாட்டை  அதிகாரவர்க்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆண்டிட முடியாது. 

இந்தியாவின் நடுத்தர வர்க்க , கீழ் நடுத்தர வர்க்க இளைஞர்கள் நெருக்கடி நிலைக்கு எதிராக தலைமறைவு இயக்கத்தை முன்னெடுத்தனர். நாட்டில் எந்த மூலையில் எந்த அத்துமீறல் அரசாங்கத்தால் நடந்தாலும் தலைமறைவு இயக்கத்தின் தொடர்பு சங்கேத வலை மூலம் நாடெங்கும் அந்த செய்தி மக்களைச் சென்றடைந்து கொண்டே இருந்தது. அந்த இளைஞர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் தியாகம் மகத்தானது. சாமானிய குடிமகன் உச்சபட்ச ஆட்சியாளனுக்கு சமமானவன் என முன்வைக்கும் ஜனநாயகம் என்ற உணர்வின் வரலாறு எழுதப்படும் போது அந்த வரலாற்றில் இந்தியாவின் நெருக்கடி நிலையை எதிர்த்து நின்ற அந்த இளைஞர்களின் தியாகம் அதில் குறிக்கப்பட்டிருக்கும். 

அதிகாரத்தின் வெற்றுக் கூச்சல்களுக்கும் கூப்பாடுகளும் கேட்டுக் கொண்டிருந்த போது இந்தியாவின் சாமானிய குடிகள் மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார்கள். 

சாமானியர்களின் மௌனத்தை தங்கள் வெற்றி என நினைத்த ஆட்சியாளர்கள் நெருக்கடி நிலையை விலக்கி தேர்தலை அறிவித்த போது அந்த சாமானியர்களின் மௌனம் எத்தனை அடர்த்தி கொண்டது என்பதை உலகமே வியந்து பார்த்தது. 

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய தலைமறைவு இயக்கத்தின் இளைஞர்களின் தியாகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூரும் தினம் இன்று.