09.07.2021 அன்று ஊருக்கு அருகில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் வரை அகவை கொண்ட 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இன்றி வெட்டப்பட்டு அவருடைய செங்கல் காலவாய்க்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் அனைத்தும் அந்த தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டினராலும் தங்கள் வீடுகளுக்கு முன்புறம் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அவர்களின் முறையான பராமரிப்பில் வளர்ந்தவை. அன்றைய தினம் முற்பகல் தொடங்கி பிற்பகல் வரை ஜே.சி.பி எந்திரம் கொண்டு அவை வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்டன. ஏன் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறீர்கள் என அந்த மரங்களை வளர்த்த பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ‘’ நான் சர்வ அதிகாரம் படைத்தவன். என்னிடம் பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது. பெண்கள் வீட்டுக்குள் வீட்டு அடுப்படியில் இருக்க வேண்டியவர்கள்’’ என்று பதில் கூறியிருக்கிறார்.
இந்த விஷயம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு அந்த தெருவின் பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். வருவாய் கோட்டாட்சியர் இந்த விஷயத்தை வட்டாட்சியருக்கு அனுப்பினார். வட்டாட்சியர் 14 மரங்களின் மதிப்பாக ரூ.950 ஐ நிர்ணயித்தார். மேலும் ஒரு மடங்கு அபராதம் சேர்க்கப்பட்டது. இவ்வாறு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதில் சட்ட விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. மரத்தை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் மீதும் அந்த குற்றத்தை மறைக்க உடந்தையாயிருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு எந்த நடவடிக்கையுமின்றி நிலுவையில் உள்ளது.
14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயத்தின் முழுக் கோப்பினை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். அந்த கோப்பு அளிக்கப்படுமானால் அதிகாரிகள் செய்த முறைகேடுகள் அனைத்தும் வெளிப்படும் என்பதால் அந்த கோப்பினை முழுமையாக அளிக்காமல் இருக்கின்றனர். மாநில தகவல் ஆணையத்திடம் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வழக்காக இதனை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த கோப்பு இந்த விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என எண்ணுகிறேன்.
09.07.2021 அன்று 14 மரங்கள் வெட்டப்பட்ட தெருவில் அதே மாதம் 30ம் தேதி (30.07.2021) அன்று 100 மரங்கள் நடப்பட்டன. அவை இப்போது நன்கு வளர்ச்சி பெற்று 10 அடி உயரம் வரை சென்றுள்ளன.
நாளை நண்பர்களுடன் அங்கு சென்று அந்த 100 மரங்களுக்கும் நீர் வார்த்து விட்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.