எந்த உரையாடலிலும் சாதி குறித்த முதற்சொல்லை நான் உச்சரிப்பதில்லை. எவரேனும் தொடங்கினாலும் நான் மௌனமாகவே இருப்பேன். ஓரிரு முறைக்கு மேல் பேசும் போது மட்டுமே நான் எனது எண்ணங்களைத் தெரிவிக்கத் தொடங்குவேன். உரையாடலைத் தொடக்கும் எவரும் தங்கள் சாதியைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடமிருந்தே அறிய முற்படுவேன். ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் தனது சாதி மீதான பற்றை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது சாதியைச் சேர்ந்த ஐந்து ஆளுமைகளின் பெயர்களை நான் அவரிடம் கூறினேன். தேசத்துக்கும் மொழிக்கும் ஆக்கபூர்வமான பல பணிகளை ஆற்றியவர்கள் அவர்கள். சமூகத்துக்காகவும் மக்கள் நலனுக்காகவும் பெரும் தியாகம் புரிந்தவர்கள் அவர்கள். அவர்கள் பெயரை நான் கூறியே அவர் முதல்முறையாகக் கேள்விப்படுகிறார். சாதி குறித்து பேசுவதற்கு முன் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
எந்த சாதியின் மீதும் வெறுப்பும் வன்மமும் மிக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதை என்னால் எந்த நிலையிலும் ஏற்க முடியாது. அந்த சாதிகளின் வரலாற்றுப் பங்களிப்பை நான் எடுத்துச் சொல்வேன்.
வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதங்களில் தனது சாதி மேல்சாதி எனக் கூறுபவர்களை வெளிப்படுத்துபவர்களை மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்வேன்.
சாமானிய மக்களுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருக்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஈடுபடும் போது ஒருவர் கூட என்னிடம் சாதி குறித்து விசாரித்ததில்லை. நான் கண்டது அனைத்தும் மக்களின் அன்பும் பிரியமும் மட்டுமே. இன்று வரை அவர்கள் காட்டும் அத்தனை அன்புக்கும் பிரியத்துக்கும் நான் தகுதியுடையவன் தானா என்னும் தயக்கம் இருக்கிறது.
சாமானிய மக்களின் வாழ்வில் அவர்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதற்கான செல்வத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவ வேண்டியிருக்கிறது. அவர்களுடைய உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை அளிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்த தகுந்த வகை செய்ய வேண்டியிருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ தம் பணிகளாக இதையே கொள்கிறது.